ஞாயிறு, 4 அக்டோபர், 2020

முருகனும் மயிலும்

முருகனும் மயிலும்:

சமீபத்தில் சுகி சிவம் அவர்கள் முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்ற பிளவுப்பார்வைக்கு மேற்கோள் காட்டிய தமிழ் முருகன் என்ற நூலை வாசித்தபோது அதில் வழக்கமான சில திரிபுவாதங்கள் இருந்தாலும் முருகனுடைய வாகனம் யானைதான் என்றும் மையில் முருகனின் வாகனம் இல்லை என்றும் அது ஆரிய திணிப்பு என்றதொரு கருத்தை படிக்க நேர்ந்தது....!

ஆனால் தமிழ் முருகன், மலையாள முருகன், சமஸ்கிருத முருகன் என்ற பிளவுப்பார்வையை நக்கீரர் காணாதபோது, அருணகிரியார், குமரகுருபரர் போன்ற மாபெரும் முருகபக்தர்கள் காணாதபோது இவர்களின் பிளவுப்பார்வை சற்றே சிந்திக்க வேண்டும்...!
தமிழ் கடவுள் என்ற பிளவுப்பார்வையை இவர்களே மேற்கோள் காட்டும் திருமுருகாற்றுப்படையை வைத்தே உடைத்துவிடலாம். அதாவது நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சொல்கிறார், முருகன் இமயத்தில் பிறந்து கங்கையில் வளர்ந்தவனாம். இதனால்தான் #காங்கேயன் என்ற பெயர் முருகனுக்கு ஏற்பட்டது....!

"நெடும்பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறுஅமர் செல்வ
ஆல்கெழுகடவுள் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பின் பழையோள் குழவி
வானோர் வணங்கு வில் தானைத்தலைவ"
(திருமுருகு- 253-260)
அதாவது நக்கீரர் சொல்கிறார், தீயானது தன் அழகிய கையிலே தாங்கிக் கொண்டுவந்து நெடிய பெரிய
இமய மலையின் உச்சியில் 'சரவணம்' எனப்படும் தருப்பை வளர்ந்த
பசுமையான சுனையில் இடவும், கார்த்திகைப் பெண்டிர் அறுவரால்
பாலூட்டப்பெற்று வளர்ந்த ஆறு திருமுகங்களையுடைய பெருமானே...!

ஆலமர் செல்வனாகிய சிவபெருமானின் புதல்வரே(முருகனே),இமயவான் மகளான பார்வதி தேவியாரின் மைந்தரே..!

வெற்றியை உடைய வெல்லும் போர்த் தெய்வமான கொற்றவையின்
மைந்தரே, அணிகலன்களை அணிந்த தலைமைத்துவம் உடைய காடுகிழாளின்
குழந்தையே வானவர்களாகிய தேவர்களின் விற்படைகளுக்குத் தலைவரே என்று திருமுருகாற்றுப்படையில் பார்வதி தேவியின் மகன் என்றும் இமயமலையில் பிறந்தவன் என்றும் தேவர்களின் சேனாதிபதி என்றும் உரைக்கிறார்....!

இதில் வானோர் வணங்குவில் தானைத்தலைவ என்ற வரிகளை பாரதியாரின் கண்ணன் பாட்டின் மூலமாக கண்டோமேயானால் #பகவத்கீதை-10- 24 ல் இப்படி சொல்கிறார் பகவான் கிருஷ்ணர்....!

'புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ருஹஸ்பதிம் 
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த: ஸரஸாமஸ்மி ஸாகர"

அதாவது அர்ச்சுணா! புரோகிதர்களில் நான் ப்ரகஸ்பதி, படைத்தலைவர்களில் நான் ஸ்கந்தன், நீர்களில் நான் கடல் என்று படைத்தளபதிகளில் சிறந்தவன் முருகன் என்பதை பகவத்கீதையே ஒப்புக் கொள்கிறது. இருந்தும் இந்த விளக்கங்களை ஒதுக்கிவிட்டு பதிவுக்கு வருவோம்....!

ஆக பதிவின் முதற்பகுதியில் குறிப்பிட்டதுபோல சங்க இலக்கியங்களில் முருகனுடைய வாகனமாக மயில் இல்லை என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சங்க இலக்கியங்களை கொஞ்சம் புரட்டுவோம். அதற்கு முன்பாக  சங்க இலக்கியங்களில் வரும் பிணிமுகம் என்பதற்கு யானை என்று சில உரை ஆசிரியர்கள் உரை எழுதி உள்ளனர். சிலர் மயிலையும், யானையையும் குறிக்கும் என்றும் எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....!

அதை சற்று ஆழமாக நிகண்டுகளின் வழியாக பார்த்தால் யானையின் பெயர்களில் ஒன்றாக பிணிமுகம் என்ற சொல்லாடலை எந்த நிகண்டும் குறிப்பிடவில்லை. மாறாக பிங்கல நிகண்டு மயிலுக்கு உரிய பெயர்களுள் ஒன்றாக பிணிமுகத்தை சொல்கிறது. அதோடு பிணிமுகம் என்பதற்கு அன்னம், பறவை போன்ற மறு பெயர்களையும் வருகிறதே அன்றி நான் அறாந்தவரையில்  யானையை குறிப்பிடவில்லை.....!

முதலில் புறநானூற்றை நோக்குவோம். அதாவது புறப்பாடலில் முருகனுக்கு வாகனமாக மயில் உள்ளதா என்பதை பார்க்கலாம்....!👇👇👇

"மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என
ஞாலம் காக்கும் கால முன்பின்" 
(புறநானூறு-56)

விளக்கம்:

அதாவது கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவிய உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் #திருமாலும், 
நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (பிணிமுகம்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன் என்று நக்கீரனார் பாண்டியனை செவ்வேளோடு ஏந்திப் பாடுகிறார்....!

இங்கு வரும் மயில் கொடியையும், பிணிமுகம் என்பது மயில் வாகனத்தையும் தான் குறிக்கும் என்று புலியூர் கேசிகன் அவர்கள் உரை வகுக்கிறார்....!

திருமுருகாற்றுப்படை:

"ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன் கோடு வாய்வைத்து கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டுஆண்டு உறைதலும் அறிந்த வாறே" (திருமுருகாற்றுப்படை)

பொருள்:

அதாவது மிகுதியான மகிழ்ச்சியுடன் ஆடிய களத்தில் ஆரவாரம்
ஏற்படுவதற்குரிய பாடல்களைப் பாடி, ஊது கொம்புகள் பலவற்றையும்
ஊதி, வளைந்த மணியினையும் ஒலிக்கச் செய்து, என்றென்றும் கெடாத
வலிமையை உடைய 'பிணிமுகம்' எனப்படும் யானையை [அல்லது
மயிலினை] வாழ்த்தி, தாம் விரும்பும் அருட்கொடைகளை விரும்பியவாறு
அடையவேண்டி அடியார்கள் வழிபடுவதற்கென்று, அந்தந்த இடங்களில்
திருமுருகப்பெருமான் தங்கவும் செய்வான் என்று யான் அறிந்தவற்றை
அறிந்த வண்ணமே உரைத்தேன் என்பது பொருளாகிறது. இங்கு பிணிமுகம் என்பது யானையையும் குறிக்கும், மயிலையும் குறிக்கும் என்று உரை ஆசிரியர்கள் உரை வகுக்கின்றனர். ஆனால் நிகண்டுகளின் அடிப்படையில் மயிலை தான் குறிக்கும் என்பது நமது பதிவின் உட்கரு🤒🚶🚶...!

சிலம்பதிகாரம்:

"அணிமுகங்க ளோராறு ஈராறு கையும்
இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே
பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்
மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே"
அதாவது பிணி முகம் எனப்படும் மயிலின் மீதேறி அசுரர்களுடைய பெருமை கெடுமாற்றானே, வானகத்து தலைவனாகிய இந்திரன் போற்றப் பகைவர்களை அழித்த வெள்ளிய வேலும், அழகிய ஆறுமுகங்களையும் பன்னிருகைகளையும் பிறர் தனக்கு ஒப்பில்லையாக உடையானாகிய முருகன் ஏந்திய வேலேயாம் என்று பிணிமுகம் என்பது முருகனின் வாகனம் என்று இளங்கோவடிகளும் கூறுகிறார்....!

பரிபாடல்

"மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்"

விளக்கம்:

நீலமணிபோலும் நிறத்தையுடைய மயிற்கொடியை எடுத்த மாறாத வெற்றியையுடைய அம்மயிலாகிய ஊர்தியையுடைய முருகப்பெருமான் என்று உரை ஆசிரியர்கள் உரை வகுக்கின்றனர்....!

கல்லாடம்:

"களித்தெனச்
சுற்றுடுந் தோங்கிய வாயமுந் துறக்குக
பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய
மூவிரு திருமுகத் தொருவே லவற்கு
வானுற நிமிர்ந்த மலைத்தலை முன்றின்
மனவணி மடந்தை வெறியாட் டாளன்"

விளக்கம்:
அதாவது பிணிமுகம், மஞ்ஞை என்பதை   பிணிமுகம் என்னும் யானையினையும், மஞ்ஞை எனும் மயிலினையும் அழகிய ஆறுமுகங்களையும் போர் முனையிலே ஏந்தி ஒப்பற்ற வேற்படையினையுமுடைய முருகவேளுக்கு வெறியாட்டு நடந்த நிகழ்வை இங்கு குறிப்பிடுகிறார் ஆசிரியர். இங்கு கவனிக்க வேண்டியது #மஞ்ஞை  என்பதற்கு நிகண்டுகளில் மயில் என்றொரு பெயரும் உள்ளதால் இங்கு மயிலும் யானையும் முருகனுடைய வாகனமாக கொள்ளலாம். இந்த கால்லாடம் காலத்தால் முற்பட்டதாயினும்  இரண்டும் தனித்தனியே வருவதால் சிறப்பு. இருந்தாலும் நிகண்டுகளின் அடிப்படையில் பிணிமுகம் என்பது மயிலையே குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது....!

ஆக நமது இலக்கியங்கள் முருகனுடைய வாகனமாக மயிலையும் குறிக்கிறது என்பது தெளிவு. குறிப்பாக நான் சிறு வயதில் முருகன் கேயிலுக்கு செல்லும்போது எனக்கு பிடித்தமான ஒரு பாடலை உங்களுடன் பகிர்கிறேன். மயில் முருகனுடைய வாகனம் இல்லை என்றதும் எனக்கு நியாபகம் வந்ததே அந்த பாடல்....!

"பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ர மணியனே வா
என் இச்சையெல்லாம் உன்மேல் வைத்தேன் - முருகா
எள்ளளவும் பயமில்லயே"

தொடர்ச்சி : https://youtu.be/IIlQH0SvdYg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...