திங்கள், 7 செப்டம்பர், 2020

பிள்ளையாரும் & ஔவையாரும்

நான் படிக்கும் காலத்தில் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி இவற்றை சொல்லி கொடுத்தார்கள். ஆனால்  அவற்றில் மிக முக்கியமான கடவுள் வாழ்த்து பகுதியை படித்ததாக நியாபகம் இல்லை....!

அந்த வகையில் தமிழ் மூதாட்டியாகிய ஔவையாருக்கு  மிகவும் பிடித்த கடவுள் விநாயக பெருமானாவார். அதனால் தான் இந்த நான்கு நூல்களில் உள்ள கடவுள் வாழ்த்திலும் விநாயகரை போற்றி பாடியுள்ளார்....!


ஆத்திச்சூடி:

கடவுள் வாழ்த்து:

"ஆத்தி சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே”

பொருள்: திருவாத்தி பூமாலையை அணிபவராகிய சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை வாழ்த்தி வாழ்த்தி வணங்குவோம் நாமே....!



கொன்றைவேந்தன்:

கடவுள் வாழ்த்து :

"கொன்றை வேந்தன் செல்வன் அடியினை

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே"

பொருள்:

கொன்றை மலரை அணிந்த வேந்தனாகிய, சிவபெருமானின்,  திருக்குமாரராகிய விநாயகக் கடவுளின் இரண்டு திருவடிகளையும் நாம் எப்பொழுதும் போற்றித் துதித்து வணங்குவோம்...!


மூதுரை:

கடவுள் வாழ்த்து:

"வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு"

விளக்கம்:

பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்...!


நல்வழி:

கடவுள் வாழ்த்து:

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா"

விளக்கம்:

பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன், ஆண் யானை உருவம் உடைய உயிர்களுக்கு நல்லது செய்யும், மாசில்லாத #விநாயகப்_பெருமானே நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றும்தா....!


ஆக இறுதியாக விநாயக பெருமானிடம் முத்தமிழையும் யாசகமாக கேட்கும் ஔவையார் விநாயகரை முத்தமிழ் வித்தகனாக போற்றி துதிக்கிறார். அவ்வகையில் நாமும் விநாயக பெருமானிடம் நமக்கு வேண்டியதை கேட்டு  விநாயகரின் ஆசியை பெறுவோமாக...!


தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...