வெள்ளி, 18 செப்டம்பர், 2020

சிலப்பதிகாரமும் மகாபாரதமும்

காப்பியங்களுள் முதன்மையான சிலப்பதிகாரம் பாரதத்தின் இரு பெரும் இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரத நிகழ்வவுகள் பலவற்றைச் சுட்டுகிறது.....!
ஆம், கிபி இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்டம் ஆய்ச்சியர் குரவையில் இரு இடங்களில் இந்நிகழ்வை அதாவது "கண்ணன் பாண்டவர்களுக்காக அஸ்தினாபுரத்திற்கு தூது" சென்ற நிகழ்வை சுட்டுகிறது.....!

முன்னிலைப்பரவல்:

"திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே"

படர்க்கைப் பரவல்:

"மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே"

இதுமட்டுமல்லாது அர்ச்சுனன் காண்டவ வனத்தை அழித்த நிகழ்வும், மகாபாரதப்போர் 18 நாட்கள் நடந்தது என்ற செய்தியையும், சேர அரசன் இரு படைகளுக்கும் உணவளித்த நிகழ்வையும், கண்ணன் சூரியனை தனது சுதர்சனத்தால் மறைத்த நிகழ்வையும் சுட்டுகிறது. இது தவிர்த்து இராமாயண நிகழ்வுகளையும் சிலப்பதிகாரம் சுட்டுகிறது என்பது கூடுதல் தகவல்....!

புதன், 16 செப்டம்பர், 2020

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா?

ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் பறவைகளையும் போல எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி கூடி வாழ்ந்த போது நடந்த ஒழுக்கக்கேடுகளை தவிர்க்க பெரியவர்கள் சேர்ந்து எடுத்த ஒரு முடிவே திருமண ஒப்பந்தமாகும்....!
இதை தொல்காப்பியர் "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்று குறிப்பிடுவார். இங்கு கரணம் என்பது இறைவன் முன் செய்யப்படும் ஒப்பந்தம் என்று தேவநேய பாவாணர் குறிப்பிடுகிறார்...!

இந்த ஒப்பந்தத்தின் அடையாளமாகவே பண்டைய காலம் முதல் தாலி திருமணத்தின் அடையாளமாக கருதப்பட்டது எனலாம். இரு மனங்களை இணைக்கும் விதமாக பலவிதமான சடங்குகள் நடத்தப்பட்டாலும் தாலி அணிவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது...!
அவ்வகையில் பண்டைய தமிழர் திருமணங்களிலும் தாலி அணிவதற்கு தனி சடங்குகளும் நம்பிக்கைகளும் பின்பற்றப்பட்டு வந்தன. அதாவது பண்டைய காலத்தில் காலியானது இழை, வீழ், மங்கல நாண் போன்ற பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை விரிவாக காணலாம்....!

பண்டைய இலக்கியங்களுக்கு செல்வதற்கு முன்னால் 11ஆம் நூற்றாண்டில் தான் தாலி என்ற நேரடி சொல்லாடல் ஆரம்பிக்கிறது அதையும், வள்ளி தெய்வானை திருமண நிகழ்வை சுட்டிய போது கச்சியப்ப சிவாச்சாரியார் பயன்படுத்திய வரிகளையும் பதியலாம் என்று தோன்றுகிறது....!
பதினொன்றாம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில்👇👇👇

"ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற்
பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தானென்பர்
காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண்
டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட
வூரிர் கலயனையே"

இப்பாடலில் நாயனார் தம் குழந்தைகள் உணவின்றி வாடியபோதும் தம் மனைவி கழற்றித்தந்த தாலியை விற்று குழந்தைகளின் பசியை போக்க நெல் வாங்காமல் குங்கிலியம் வாங்கி இறை பணி செய்த நிகழ்வை குறிப்பிடுகிறார். இங்கே தான் முதன் முதலாக இழை, வீழ் போன்ற சொல்லாடல்கள் தவிர்த்து தாலி என்ற நேரடிச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது...!

இங்கும் பெண்கள் தாலி அணிந்திருந்த தகவல் தான் கிடைக்கிறதே அன்றி திருமணத்தின் அடையாளமாக தாலி அணிந்த நிகழ்வு 10 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கவில்லை. ஆனால் வள்ளி தெய்வானை திருமண நிகழ்வை குறிக்க வந்த கச்சியப்ப சிவாச்சாரியார் தனது கந்த புராணத்தில் இந்த குறையையும் தீர்த்து வைக்கிறார்....!
"செங்கம் லத்திறை சிந்தையின் ஆற்றி அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்ட மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து நங்கை முடிக்கோர் நறுந்தொடை சூழ்ந்தான்"

இங்கே தெய்வானையுடனான திருமணத்தின்போது இந்திரன் முருகனுக்கு பாதபூஜை செய்ததையும், பின்பு இந்திரன் கன்னிகாதானம் அளிதத
 நிகழ்வையும் பின்னர் முருகன் மங்கல நாணை தெய்வானையின் அழகிய கழுத்தில் அணிவித்த நிகழ்வையும் அழகாக சுட்டுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்....!

ஒருவேளை இங்கே மங்கல அணி என்றுதானே வருகிறது இதை எப்படி தாலி என்பது என்று யாராவது கேட்டால் அதே கச்சியப்ப சிவாச்சாரியார் இன்னொரு இடத்தில்,👇

"நான்முகனே முதலோர்  பாவை மார்கள் பொற்றாலி தனையளித்தோன் புகழ்போற்றி" என்று சிவபெருமான் தேவர்களின் மனைவியர்களின் தாலியை காத்த நிகழ்வை சுட்டுகிறார்....!

பொற்றாலி என்றதும் ஔவையாரின் பழம்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதாவது👇👇👇
"தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்"

ஆச்சா😊 இனிமேல் சங்க இலக்கியங்களுக்கு செல்வோம் வாருங்கள்...!

சங்க இலக்கியங்களில் இடத்திற்கு ஏற்றவாறு பல்வேறு வகைப்பட்ட திருமண முறைகள் இருந்தாலும் கோவலன் கண்ணகி திருமணம் பார்ப்பான் முன்னிலையில் அக்னி சாட்சியாக தான் நடந்தது என்பதை நினைவில் கொண்டு அகநானூறு புறநானூறு நெடுநல்வாடை போன்ற இலக்கியங்களில் தாலி பற்றிய தகவல்கள் எங்கெங்கே வருகிறது அது என்ன பெயரில் வருகிறது என்பதை காணலாம்....!

அகநானூறு:

"புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!''

இங்கு புலவர் நல்லூர் கிழார் என்ன சொல்ல வருகிறார் எனில் மங்கல நீராட்டும் வழக்கத்தின்போது வால் இழை மகளிர் என்ற வரியில் இழை என்பது திருமண சின்னத்தையே குறிக்க்றது எனலாம்....!

இழை என்று குறிப்பிடும் தாலியானது இதே அகப்நாடலில் இன்னொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,

"இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்"

இங்கு இழை அணி சிறப்பின் என்று வருவதால் தாலியை அணிந்ததால் சிறப்புடைய பெண் என்ற பொருள் கொள்வது பொருந்தத்தக்கதாகிறது...!
புறநானூறு:

"ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்;
சுவைக்குஇனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவுஇன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய"

இப்பாடலில் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் எனும் வள்ளலின் மனைவியர் தம் கணவர் அணிந்த ஒரு இழையை மட்டும் கழற்றாமல் மற்றவற்றை இரவலர்க்கு பரிசளித்த செய்தியை குறிப்பிடுகிறார். திருமணமான பெண் எந்த நிலையிலும் கழற்றக்கூடாத இந்த மங்கல அணியையே புலவர் இழை என்று சுட்டுகிறார்....!

புறநானூறு உரை ஆசிரியர்தளும் இந்த வரிகளுக்கு பிறிதோர் அணிலனுமின்றி கொடுத்ததற்கரிய மாங்கல்ய சூத்திரத்தை அணிந்த மகளிருடனே பொலிவிழந்து சாய்ந்ததென்று சொல்லும் ஆயுடை கோயில்" என்று கூறுவதில் கொடுத்ததற்காரிய மாங்கல்ய சூத்திரம் என்பது தாலியையே குறிக்கும் என்பதில் ஐயமேதும் இருக்க இயலாது....!

அடுத்ததாக இதே புறநானூற்றில் புலவர் ஆவூர் கிழார் மாண் இழை மகளிர் என்பதாக தாலி அணிந்த பெண்டிர் என்று பொருள்கொள்ளும் வரிகளை காண்பதற்கு இங்கே தொடவும்.....!

நெடுநல்வாடை:

"தோடமை தூமடி விரித்த சேக்கை ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப் பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து நன்னுதல் உலறிய"

இப்பாடலில் நக்கீரர் பாண்டியன் நெடுஞ்செழியன் போருக்கு சென்றிருந்தபோது அவனுடைய பெருந்தேவி மிகுந்த துயருற்றபோது மன்னர் இருந்தபோது முத்துமாலை அணியப்பெற்ற அவள் கழுத்து இப்போது வெறும் தாலி மட்டுமே தாழ்ந்து தொங்குகிறது என்ற பொருளை உவமையாக்குகிறார்.....!

"பின்னமை நெடுவீழ்" என்ற வரிகளுக்கு குத்துதலமைந்த நெடிய தாலி நாண் என்று நச்சினார்க்கினியர் உரை வகுக்கிறார்.இங்கு வீீீழ் என்பது தொங்குகின்ற பொருளை குறிக்கும்.  அதாவது தொங்குகின்ற 
மங்கல அணி என்றே பொருள்படும்.....!

சிலப்பதிகாரம்: 

மேலே கூறியதபோல் கோவலன் கண்ணகி திருமணம் பார்ப்பான் முன்னிலையில் அக்னி சாட்சியாக நடந்தது என்பதை பார்த்தோம். அச்சமயம் மடமுரசு மத்தளம் முழங்க மங்கல அணியை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட  நிகழ்வை இளங்கோவடிகள் அழகாக சுட்டுகிறார்....!

"அகலுள் மங்கலவணி எழுந்தது" என்ற சிலப்பதிகார வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதுகையில் "மங்கலவணி ஊரெங்கும் எழுந்ததென்க" என்று எழுதுகிறார்.  அதோடு சிலம்பின் இரண்டாவது காதையில் கண்ணகியின் அழகை கோவலன் வருணிப்பதை சொல்ல வந்த இளங்கோவடிகள் இவ்வாறு குறிப்பிடுகிறார்,👇

"பின் நலம் பாராட்டுநர் மனுவில் மங்கல அணியே யன்றியும் பிறிதணி அணியப்பெற்றதை எவன் கொல்"

என்று பாடுகிறார். ஆக இங்கு கண்ணகி மற்ற அணிகலன்களுடன் சேர்த்து தாலியும் அணிந்திருந்தாள் என்பதில் ஐயமில்லை. அதோடு "மங்கல வணியிற் பிறிதணி மகிழாள்" என்ற வரிகள் மூலம் தாலியை மட்டுமே அணிந்து மகிழ்ந்த நிகழ்வையும் இளங்கோவடிகள் அழகாக எடுத்துரைக்கிறார். 
இதேப்போல் சீவக சிந்தாமணியிலும் பெருங்கதையிலும் கூட தாலி பற்றிய தகவல்கள் உண்டு. அதை பதிவின் நீளம் கருதி  பின்னர் ஒரு பதிவில் காண்போம்....!

கம்பராமாயணம்:

"நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ!
நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின்
இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள்
வைத்த பொற் பெட்டியோ!

நிலமகளின் முகம், திலகம், கண், மங்கல நாண், ஆரம்
முதலியனவாக அயோத்தி நகரத்தைப் புனைந்துரைத்தார்.    பெண்களும்
மங்கல  நாண்  பெருமை  தருவதாதலால்  “நிறைநெடு  மங்கல நாண்”
என்றார்.  

மங்கையர் மங்கலத்தாலி மற்றையோர் அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே கொங்கையின் வீழ்ந்தன; குறித்த ஆற்றினால் இங்கிதின் அற்புதம் இன்னும் கேட்டியால்” 

என்ற வரிகளால் மங்கையர் தாலி அணிந்தனர் என்பது திண்ணம்.....!

அதோடு 6ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியங்களான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களிலும் திருமுறைகளிலும், முக்கூடற்பள்ளு முதலான சிறாறிலக்கியக்களிலும் தாலி பற்றிய தகவல்கள் உண்டு.....!

ஆக பழந்தமிழர் பண்பாட்டில் தாலி அணிவது என்பது மிக முக்கியமான ஒன்றாகவே இருந்து வந்தது என்பதை இந்த தரவுகள் மூலம் தெளிவாக அறியலாம்....!

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

இந்து என்று ஒரு மதம் உண்டா? ஆங்கிலேயன் தான் இந்து என்ற பெயரை வைத்தானா?

இங்கு அவ்வப்போது எழும் ஓர் வாதம் இந்து என்பது மதமா? இந்து என்ற பெயர் ஆங்கிலேயன் (வில்லியம் ஜோன்ஸ்)வைத்தது தானே என்ற முற்போக்கு சிந்தனைகளோடு சேர்த்து இந்து என்பது மதமா என்ற வாதங்கள் ஆங்காங்கே ஒலிக்கின்றன.......!
ஆனால் இங்கு நாம் முதலில் தெரிந்துகொள்ள  வேண்டியது என்னவெனில் இந்து என்பது ஓர் மதம் அல்ல. அது WAY OF LIFE  அதாவது நமது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை விளக்கும் வாழ்க்கை முறையாகும். இது காலத்திற்கு ஏற்ப தனது வாழ்க்கை முறைகளை தகவமைத்துக்கொள்ளும் ஓர் முறையாகும். இதை நமது சித்தாந்த வாதிகளே சொன்னாலும் 1995 ஆம் ஆண்டு  வெளிவந்த Supreme court ன் தீீர்ப்பும் இதையே சொல்கிறது....!

ஆனால் இந்து என்ற பெயர் மதம் என்று அழைக்கப்பட காரணம் மிலேச்ச மதங்களால் தன்னையும் ஓர் மதமாக அடையாளப்படுத்தும் சூழல் உருவானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை....!

ஆனால் இதுபோல் எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் இந்து என்று ஒரு மதம் இல்லை என்று பிதற்றுபவர்களுக்கு அவர்களின் பாணியிலேயே எழுதப்பட்ட ஓர் முகநூல் பதிவுக்கு இங்கே கிளிக்கவும்.....!

ஆக இப்பதிவில் இந்து என்ற சொல்லாடல் பற்றிய வரலாற்றுத் தரவுகளை ஆதாரங்களோடு காணலாம்....!

கல்வெட்டு:

கி பி 5 ஆம் நுற்றாண்டில்  பூலாங்குறிச்சி தமிழ் (வட்டெழுத்து) கல்வெட்டில் , “இந்து ” என்ற சொல் காணப்படுகிறது. அனேகமாக இதுவே காலத்தால் முந்திய இந்து என்றசொல்லின் கல்வெட்டு இருக்கும்...!
ஆதாரத்திற்கு இங்கே தொடவும்

இலக்கியங்கள்:
கி. பி 12 ஆம் நுற்றாண்டு ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்க சோழன் உலாவில், குலோத்துங்க சோழனை கீீழ்வருமாறு குறிக்கிறார்...!

"பொன் துவரை இந்து மரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த ”
பொன் துவரை = பொன் நாட்டு இன்றைய துவாரசமுத்திரம் என்ற துவி அரையம் ஆண்ட ,இந்து மரபு = சந்திர குலத்தை சேர்ந்தவனும் , தாய்வழி அரசுரிமை பெற்று , மனுக்குலத்தை = மனு நீதி சோழ மரபை வாழ்விக்க வந்தவன் என்று பொருள்....!

இங்கு இந்து என்ற சொல்லாடல் சந்திர மரபு (சந்திர குலம்)என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது...!

இது மட்டுமல்லாது இதே பொருளில் திருமந்திரம், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம் போன்ற தமிழ் நூல்களிலும் இந்து என்ற சொல்லாடல் உண்டு....!

ஆக தமிழ் இலக்கியங்களிலேயே இந்து என்ற சொல்லாடல் பயின்று வந்துள்ளதால் ஆங்கிலேயன் தான் இந்து என்று பெயரிட்டான் என்ற கூற்று ஒவ்வாததாகிறது....!

அதோடு தென்னிந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பதற்காக 14ம் நூற்றாண்டில் எழுந்தது விஜய நகர சாம்ராஜ்யம். இதனைத் தோற்றுவித்த ஹரிஹர, புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில் கீழ்வருமாறு குறிப்பிட்டப் பட்டுள்ளது..!

“ஹிந்து ராய ஸுரத்ராண”  என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது.அதோடு ராஜபுத்திர மன்னர்களின் ஆவணங்கள் அனைத்திலும் ஹிந்து என்ற பெயர் பெருமிதத்துடன் கூறப்படுகிறது.....! 

மகாராஷ்டிரத்தில் தோன்றிய சமர்த்த ராமதாசர் என்ற மகானின் பாடல்களில் கீழ்வருமாறு குறிப்பிட்டப் பட்டுள்ளது..!

“ஹிந்துஸ்தான் பளாவலேம்” போன்ற வரிகள் உள்ளன. இவரது ஆசியுடன் சத்ரபதி சிவாஜி அமைத்த சுதந்திர இந்து ராஜ்ஜியம் ”ஹிந்து பதபாதசாஹி” என்றே தன்னை அழைத்துக் கொண்டது. அதோடு 

ஹிந்துவின் குரலையும், ஹிந்துவின் குடுமியையும், ஹிந்துவின் திலகத்தையும், வேத புராணங்களையும் காத்தவன்” என்று சிவாஜியைக் குறித்து கவிஞர் கவிராஜ பூஷண் புகழ்ந்து பாடியுள்ளார்......! 

வடக்கில் ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே தஞ்சை வரை பரந்து விரிந்திருந்தது இந்த மராட்டிய ஹிந்து அரசு.  தமிழில் தஞ்சை மராட்டியரின் ஆவணங்களிலேயே ஹிந்து என்ற சொல் காணப் படுகிறது......!

பிருத்விராஜனின் பெருமைகளை விவரித்து அவரது அரசவைக் கவிஞரான சந்த பரதாயி எழுதிய பிருத்விராஜ் ராஸோ (11ம் நூற்றாண்டு) என்ற ஹிந்தி வீரகதைப் பாடலில் ஹிந்து என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது.....! 

ஹிந்துக்கள் மிலேச்சர் மீது நடத்திய போர்”

“ஹிந்துக்களாகிய நாங்கள் மிலேச்சர்களைப் போல மானமற்றவர்களல்ல” போன்ற வரிகள் இந்த நூலில் விரவியுள்ளன....!

(இந்த அரச ஆவணங்களின் தொகுப்புகள் தமிழ் இந்து தளத்தின் எழுத்தாளர் ஜடாயு அவர்களின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது)

அதோடு மிக முக்கியமாக பாம்பன்சுவாமிகள் நம் நாட்டில் தோன்றிய பல்வகைக்கோட்பாடுகளைக் கைக்கொண்ட ஞானிகளை இந்து ஞானிகள் என்றும் நம் நாட்டை இந்து தேசம் என்றும் குறிப்பிடுகின்றார்....!

இவ்விந்து தேசமல்லாப் பிறதேசங்களிலும் தெய்வ வழிபாடுகள் உள்ளனவேனும் அவையெல்லாம் ஆன்மாவின்கட் புரியும் ஆன்மோபாசனையும் அவ்வழி ஆன்மாவத் தரிசித்தெய்தும் அனுபூதி ஞானமும் அல்லப் பகிர்முகத்தவாதலின் அத்திற ஞான முணர்த்தும் இத்தேச ஞானிகளை “இந்துஞானிகள்” என்றார்....! 

வடமொழியில் எழுதப்பட்ட பிரகாஸ்பதி ஆகமத்தில் கீழ்வருமாறு குறிப்பிட்டப் பட்டுள்ளது...!(கி.மு. 4ம் நூற்றாண்டு)

"ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் .
தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே" என்ற வரிகள் உண்டு.
அதாவது “கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது....!

அடுத்து புத்த_ஸ்ம்ருதியில் கீீீீருமாறு குறிப்பிட்டப் பட்டுள்ளது...!(கி.மு. 4ம் நூற்றாண்டு)

"ஹிம்ஸாயா தூயதே  யஷ்ச ஸதாசரண தத்பர:
வேத, கோ, ப்ரதிமா  ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக்"

“ யார் ஹிம்சிக்கப்பட்டாலும் எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரகங்கள் ஆகியவைகளை பக்தியுடன் வழிபடுகிறானோ அவனே ஹிந்து என்கிறது”.....!
மேலும், கிறிஸ்தவ மத நூலான சுமார் கி.மு 3000 வருடங்களுக்கு முன்பு இருந்ததாக கருதப்படும் பைபிள்  பழைய ஏற்பாட்டில் பாரதத்தை இந்து தேசம் என்று சுட்டும் குறிப்புகள் உள்ளது .....!

"இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள" 

ஆதாரத்திற்கு இங்கே தொடவும்

இவ்வாறு, கி.மு 4ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை பாரதத்தின் பல மொழிகளிலும், பல பகுதிகளிலும் ஹிந்து என்ற சொல் ஏற்கனவே ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும், அதைப் பின்பற்றும் சமுதாயத்தையும் குறித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.....!

ஆக இந்து என்ற பெயர் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே இங்கு பரவி இருந்தது என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறியலாம்....!

மனுநீதி சோழன் வரலாறு உண்மையா?

எல்லாளன் என்ற  சோழனின் மகன் வீதிவிடங்கன் ஒரு கன்று குட்டியை தேர் ஏற்றி கொன்றுவிட்ட குற்றத்திற்காக, கன்று குட்டியின் தாய்ப்பசு நீதி மணியை இழுத்து ஒலி எழுப்ப, நீதி வழுவாத மன்னன்  எல்லாளன் தன் மகனை தானே தேரேற்றி கொன்றதால்  மனுநீதி சோழன் என்று அழைக்கப்பட்ட வரலாறு கேட்டு அதன் உண்மை தன்மையை ஆராய துவங்கினேன்....!
எனது தேடுதலின் அடிப்படையில் இந்தச் செய்தி  தமிழில் முதன்முதலில் பழமொழி நானூறு, சிலப்பதிகாரம் மற்றும் பாலி மொழியில் எழுதப்பட்ட மஹாவம்சம் உள்ளிட்ட நூல்களிலும் பெரியபுராணம் முதலான பக்தி இலக்கியங்களிலும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மற்றும் ஓவியங்கள் மூலமாகவும் கிடைக்கப்பெறுகிறது....!

(தரவுகளை பதிவு செய்கிறேன். முடிவை நீங்களே எடுங்கள்.)
பழமொழி நானூறு

"சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலைக் கழிந்ததன் பின்றையும் - மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை இல்"

திருவாரூரில் இருந்துகொண்டு ஆண்ட சோழன் மனுநீதிச் சோழன்.
அவன் மகன் வீதிவிடங்கன் தேரில் உலா சென்றபோது துள்ளியோடிய கன்றுக்குட்டி ஒன்று அவன் தேர்க்காலில் பட்டு இறந்துபோயிற்று. இந்தச் செய்தியை வேந்தன் சோழனுக்குத் தெரியாமல் மறைத்தனர். சான்றோர்களும் மறைத்துவிட்டனர். இந்த நிகழ்வு மாலையில் நடந்தது. மறுநாள் காலைப் பொழுதும் கடந்தது. தாய்ப் பசு மன்னனின் ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் வினவி உண்மையை உணர்ந்துகொண்டான். கறவைக்கன்றின் மேல் தேரைச் செலுத்திய தன் மகன்மீது தான் தேரைச் செலுத்தி பசுவுக்கு நீதி (முறைமை) வழங்கினான் என்ற செய்தியை குறிப்பிடுகிறது....!
சிலப்பதிகாரம்
(மதுரைக் காண்டம்
வழக்குரை காதையில் கண்ணகியின் மறுமொழி)

"தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என- ‘பெண் அணங்கே"

விளக்கம்:
தேரா மன்னா செப்புவது உடையேன் - மன்னர்க்குரிய ஆராய்ச்சி யில்லாத மன்னவனே நின்னிடத்துச் சொல்லத் தகுவது ஒன்றுடையேன் யான் ; அறிவறை போகியோன் ஆகலான் 'தேரா மன்னா' என்றாள். எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்உறு புன்கண் தீரித்தோன் - இகழ்தலற்ற சிறப்பினை யுடைய தேவர்களும் இறும்பூது எய்தப் புறாவொன்று உற்ற மிக்க துன்பத்தினைப் போக்கியோனும், அன்றியும் - அவனன்றியும், வாயிற் கடைமணி நடு நா நடுங்க-கடைவாயிலினிடத்துக் கட்டிய மணியின் நடுவிலுள்ள நா அசைய, ஆவின் கடைமணி உகு நீர் நெஞ்சு சுட - பசுவொன்றின் கண்மணிக் கடையினின்றும் ஒழுகும் நீர் தன்னுடைய உள்ளத்தை வெதுப்பலானே, தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் - தானே தன்னுடைய பெறுதற்கரிய மகனைத் தேர்க்காலிலிட்டுக்கொன்றோனும் ஆகிய இவரது, பெரும் பெயர்ப் புகார் என் பதியே - மிக்க புகழினையுடைய புகார் நகரமே யான் பிறந்த வூர்....!

இங்கு மனுநீதி சோழன் என்ற பெயரோ எல்லாளன் என்ற பெயரோ வரவில்லை எனினும் அந்நிகழ்வை அழகாக எடுத்துக்காட்டியதால் இது மனுநீதி சோழனின் செயலையே எடுத்துக்கூறுகிறது எனலாம்....! 
மகாவம்சம்

மகாவம்சத்தில் இருபத்தியோராம் அத்தியாயத்தில்.(பிரிவு 13 – 18)...!👇👇👇

சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இங்கு வந்த, உயர் குடியில் பிறந்த, தமிழன் ஏலாரா, அசேலனைத் தோற்கடித்து நாட்டைப் பிடித்து நாற்பத்துநாகு வருடம் ஆண்டான். (அவன்) எதிரிகள், நண்பர்கள் என்றா பேதாபேதம் இன்றி, நீதியின்முன் எல்லோரையும் சமமாக நடத்தி வந்தான்"

"அவன் சயன அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்௶அ கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது,  அவனிடம் நீதி கோரிவருபவர்கள் அந்த மணியை அடிக்கலாம். அரசனுக்கு ஒரு மகனும், இரு மகளும் மட்டுமே இருந்தனர்.  ஒரு சமயம் ராஜகுமாரன் ரதத்தில் தீசவாபிக்குச் சென்று கொண்டிருந்தான்"

"அப்போது தாய்ப்பசுவுடன் வீதியில் படுத்திருந்த கன்றின் கழுத்தில் தேர்ச்சக்கரத்தை ஏற்றி அறியாமல் அதனைக் கொன்றுவிட்டான். துக்கம் தாளாது பசு அரண்மனைக்கு வந்து மணியை அடித்தது.  தன் மகனுடைய கழுத்தின் மீது தேரை ஓட்டி, அரசன் தலையை துண்டிக்கச்செய்தான்"

இதே நிகழ்வை தான் நமது தமிழ் இலக்கியங்களும் எடுத்தியமாபுகின்றன......!
அதோடு அ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதிய யாழ்ப்பாண சரித்திரம் எனும் வரலாற்று நூலிலும் இச்சம்பவம் எல்லாளனுடன் (அ. முத்துத்தம்பி எல்லாளனை ஏலேலன் என்றே குறிப்பிடுகின்றார்) தொடர்புபடுத்திக் குறிப்புடப்படுகின்றது.  அ. முத்துத்தம்பிப்பிள்ளை இச்சம்பவத்தினை “ஏலேலனைச் சிங்கள சரித்திரக்காரர் நீதியிலே மநுச்சக்கரவர்த்தி எனப் பாராட்டுவர்” என்கிற அறிமுகத்துடன் இச்சம்பவத்தைக் குறிப்பிடுவதால் அவருக்கான மூலமாக மகாவம்சம் அமைந்திருக்கவும் வாய்ப்புண்டு.....!

பெரியபுராணம்:

(திருவாரூர் திருநகரச் சிறப்பு)

"ஒருமைந்தன் தன்குலத்துக் குள்ளான் என்பதும் உணரான்
தருமம்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்
மருமம்தன் தேராழி உறஊர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோமற் றெளிதோதான்"

மற்ற இலக்கியங்களை விட பெரியபுராணம் இதுபற்றி மிகத்தெளிவான தகவல்களை தருகிறது எனலாம்....!

கம்பராமாயணம்:
(ஆரண்ய காண்ட, அகத்தியப் படலத்தில்)

தசரத சக்ரவர்த்தியின் திருமகனே! நீ இங்கே தங்கினால் வேதங்கள் வாழும்; மனு நீதி வாழும்; அறம் வாழும்; இன்று வரை அரக்கரால் தாழ்வடைந்த தேவர்கள் (இமையோர்) உயர்வர்; அரக்கர்கள் (தானவர்கள்) தாழ்வு அடைவார்கள். இதில் சந்தேகமே இல்லை; அதனால் நீ இங்கேயே தங்கு” என்று இராமபிரானிடம் அகத்தியன் பகர்ந்தான்....!

ஆக தனது பங்குக்கு கம்பரும் மனுநீதி ஓங்கியதை பதிவு செய்கிறார்....!

வள்ளலார் பெருமானான இராமலிங்க அடிகளார் தாம் அருளிய "திரு அருட்பாவில் “மனு நெறி கண்ட வாசகம்'” என்னும் பகுதியிலும் இவ்வரலாறு குறிப்பிடப்படுவது சிறப்பாகும். கூடுதல் தகவல்களுக்கு 👇


"இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்"

என்ற மன்னனின் ‘செங்கோன்மை’ சிறப்பைக் கூறும் குறளுக்கு (547) உரை எழுதிய பரிமேலழகர்மகனை முறை செய்தான் கண்ணும்’ என்று  இந்நிகழ்வை குறிப்பிடுகிறார்.....!

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் சகஜீ (1684 - 1714) ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட "தியாகேசர் குறவஞ்சி' என்ற இலக்கியத்தில், மனுநீதி சோழன் வரலாறு கூறப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள லேபாக்ஷி வீரபத்ரன் கோவிலிலில் உள்ள சித்திரங்களில் இந்த நிகழ்வு விளக்கப்பட்டிருக்கிறது
திருவாரூர் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தென்புற மதிலில் மன்னன் விக்ரம சோழனால் கி.பி 1123இல் அமைக்கப்பட்ட கல்வெட்டும் இந்த செய்தியை உறுதிப்படுத்துகிறது....!
திருவாரூர் தியாகராயர் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் வடக்குச் சுவரில் உள்ள விக்கிரமச் சோழன் கல்வெட்டில் மனுநீதிச் சோழன் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இக் கல்வெட்டில் மனுநீதிச் சோழனின் அமைச்சனது பெயர், இங்கணாட்டு பாலையூருடையான் உபயகுலாமவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக  மனுநீதிச் சோழனின்அமைச்சனுக்கு ஒரு தெளிவான அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. சேக்கிழார் காலத்துக்குப் பிந்தைய கல்வெட்டு இது...!

சோழர் ஆட்சிக்காலத்தி;ல் அரசநீதியாக மனுநீதி விளங்கியது. இதை சோழர்கால மெய்கீர்த்திகள் வாயிலாக அறியலாம். 'மனுவாறு விளங்க', 'மனுநெறி', 'மனுவொழுக்கம்' என்ற சொல்லாட்சி சோழர்கால மெய்கீர்த்திகளில் பரவலாக இடம்பெற்றுள்ளது....!

மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் பதினொன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் மெய்கீர்த்தியாக மனு நீதி முறை வளர மனு நீதி தழைத்தோங்க  என்ற தொடர்கள் இடம்பெற்றுள்ளன....!
செங்கல்பட்டு மாவட்டம் மப்பேடு கிராமத்து சிவன் கோவிலிலும், தஞ்சை மாவட்ட கடம்பவனேசுவரர் கோவிலிலும் மனுநீதிச் சோழன்  தொடர்பான சிற்பங்கள் உள்ளன....!

(கல்வெட்டு தகவல்களை தந்தவர் : முனைவர் வெ. வேதாச்சலம், கல்வெட்டாய்வாளர்)

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

முருகன் வேறு சுப்ரமணியன் வேறு ஸ்கந்தன் வேறு சரவணன் வேறா?

முருகனுக்கு சுப்ரமணியன் என்ற பெயரும் ஸ்கந்தன் என்ற பெயரும் சரவணன் என்ற பெயரும்  தமிழர்களின் முருகனை குறிக்காது என்றும் அந்த முருகன் வேறு இந்த முருகன் வேறு என்ற பிரிவினைகள் இங்கே முளை விடுகின்றன....!
அவ்வகையில் சங்க இலக்கியமான புறநானூற்றில் புலவர் கருவூர்க் கதப்பிள்ளை அவர்கள்  முருகனை கந்தன் என்று குறிப்பிட்டுள்ளார்...!

"நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்;
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல" என்றும் 

"கலி கெழு கடவுள் கந்தம் கைவிட
பலி கண்மாறிய பாழ்படு பொதியில்" என்றும் சுட்டுகிறார்....!

அதோடு அகநாநூற்றுப்பாடலும் முருகனை கந்தன் என்கிறது...!

"பொதியில் கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து "

ஆக கந்தன் என்ற பெயர் சங்க இலக்கியங்களிலேயே பயின்று வந்துள்ளதால் இங்கு வடநாடு தென்னாடு என்ற பிரிவினைகள் ஒவ்வாததாகிறது....!

அடுத்ததாக  சரவணன் என்ற பெயரை சுட்டும் சான்றுகளை பார்க்கலாம்....!

"தகரில் அற்ற கைத்தலம் விட பிணை சரவணத்தினில் பயில்வோனே"

"கனமும் குணமும் பயில் சரவணமும் பொறையும் புகழும்"

இது திருப்புகழில் முருகப்பெருமானை அருணகிரிநாதர் புகழ்ந்த பாடல் வரிகளாகும்....!

அடுத்ததாக திருச்செந்தூர் கோவில் முகப்பில் ஒரு நீண்ட கல்வெட்டு உள்ளது. வரகுண பாண்டியனின் கல்வெட்டு. 
காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்ட.!
மிக நீண்ட கல்வெட்டு. 205 வரிகள் கொண்ட கல்வெட்டு. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விழாக்கள் நடத்தவும், அமுது படையலுக்கும் நிவந்தமாக 1400 பொற்காசுகளை முதலீடாக வைத்து அதில் வரும் வட்டியைக் கொண்டு வருடம் தவறாமல் விழாக்கள் நடத்த வழிமுறைகளைக் கூறும் கல்வெட்டாகும்...!

வரகுண
பாண்டியனின் இந்தக் கல்வெட்டானது முருகனை சுப்ரமணியன் என்று குறிப்பிடுகிறது..!

 " சுப்பிரமணிய படாராருக்கு " 

என்று ஆரம்பித்து நீண்ட செய்திகளைத் தருகிறது.....! ( Refrence 
 S.i.i.vol 14 no 16)

(கல்வெட்டு தகவல் உபயம் : தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன் அவர்கள்)

ஆக  கந்தனும் சரவணனும், சுப்பிரமணியனும் ஆரிய கடவுளின் பெயர்கள் என்றும் வடநாட்டு கடவுள்  என்ற பிரிவினைவாதங்களை  கருவூர் கதப்பிள்ளையாரும், அருணகிரியாரும்,வரகுண பாண்டியனும்  உடைத்தெறிந்து விட்டனர்....!

ஸ்கந்தனும் முருகனும், சுப்ரமணியனும், சரவணனும் பிரிக்க முடியாத ஒரே அங்கமாகும். பாரத பண்பாட்டின் மகத்தான ஞான உச்சம் தான் முருகனின் திருவடிவம்....!

ஆனால் இந்த ஆரிய, வடநாட்டு பிளவுப்பார்வையை – நக்கீரர் சொல்லவில்லை. பரிபாடல் சொல்லவில்லை. கச்சியப்ப சிவாச்சாரியார் சொல்லவில்லை. அருணகிரிநாத சுவாமிகள் சொல்லவில்லை. அருட்பிரகாச வள்ளலார் சொல்லவில்லை. திருமுருக கிருபானந்த வாரியார் சொல்லவில்லை. இவர்களுக்கு இல்லாத ஆராய்ச்சியும் பிரிவினையும் இங்கே வெறும் அரசியலுக்காக உருவாக்கப் படுகிறதே அன்றி வேறில்லை....!

நமது இலக்கியங்கள் போற்றும் இறை வருணனைகளில் சிவனுக்கும் முருகனுக்கும் பூநூல் உண்டா?

பூநூலை பிராமண அடையாளம் ஆக்கியதில் இருந்து சிவனுக்கு பூநூல் போட்டது யாரு? முருகனுக்கு பூநூல் போட்டது யார் என்ற கேள்விகளுக்கு பஞ்சமில்லை....!
அவ்வகையில் நமது இலக்கியங்கள் சிவனுக்கும் முருகனுக்குமான திருவுருவ வருணனைகளை எப்படி சொல்கிறது என்று பார்க்கலாம்.....!

முதலாவதாக பாரதம் பாடிய பெருந்தேவனாரின் புறநானூற்றின் கடவுள் வாழ்த்து பாடலில் சிவபெருமானின் திருமேனியை குறிக்கும் இடத்தில் பூநூல் அணிந்த வருணனையை சுட்டுகிறார்....!

"கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்"

விளக்கம்:
கார் காலத்தில் பூக்கும் கொன்றைப் பூவைத் தார், மாலை, கண்ணி என்னும் தொடைகளாக்கி அணிந்துகொண்டுள்ளவன் இவன். இவனது மார்பில் பூணூல் உள்ளது. இமைக்காத கண் ஒன்று இவன் நெற்றியில் உள்ளது. தோல்வி காணாத இவனுக்குக் கையில் கணிச்சி, மழு, மூவாய் வேல் (சூலம்) ஆகிய படைக்கருவிகள் உள்ளன

அதோடு மூன்றாம் திருமுறையில் திருஞானசம்பந்தர் சிவபெருமானை வருணிக்கையில்,

"பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய புண்ணியனே
மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே
தென்பால் வையமெலாந் திகழுந்திரு வான்மிதன்னில்
அன்பா வுன்னையல்லா லடையாதென தாதரவே"

என்று பாடி சிவனுக்கான இறை வருணனையில் பூநூல் உண்டு என்பதை தெளிவுபடுத்துகின்னர்....!

அதோடு முருகனுக்கு எழுதப்பட்ட திரு இலஞ்சி முருகன் உலா என்ற நூலில்   முருகன் பூநூல் உடையவன் என்ற குறிப்பு உள்ளது...!

திரு இலஞ்சி முருகன் உலாவின் 104 ஆவது பாடல்,👇👇👇

"மின்னங் கொருவடிடாய் வீற்றிருந்த தொப்பவே
பொன்னகல முப்புரி நூல் பூணுவித்துத்-தன்னிகரில்"
அதோடு கந்த சஷ்டி கவசத்தின் 46ஆவது வரியில் முருகனுக்கு பூநூல் இருந்த தகவல் உள்ளது...!
ஆக நமது இலக்கியங்களின் அடிப்படையில் பொதுவாகவே சிவனுக்கும் முருகனுக்கும் பூநூல் உள்ளதே அன்றி பூநூல் திணிக்கப்பட்டது என்ற கூற்று ஏற்புடையது அன்று....!

சங்க இலக்கியங்களில் திருமால் வழிபாடு இல்லையா?

திருமால் வேறு மாயோன் வேறு என்ற பிரிவினைகளில் ஆரம்பித்து திருமால் வழிபாடே சங்க இலக்கியங்களில் இல்லை என்ற பச்சை பொய்கள் வரை இங்கே மதச்சார்பின்மை பேசுபவர்களால் சித்தரிக்கப்படுகிறது....!
அவ்வகையில் இப்பதிவில் சங்க இலக்கியங்களில் உள்ள திருமால் வழிபாட்டின் ஒரு சிறு பகுதியை காண்போம்....!

அதாவது சங்க இலக்கியம் னு எடுத்துக்கொண்டால் நமக்கு கிடைத்த மிகப் பழமையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியம் திருமாலை #மாயோன் என்று போற்றுகிறது...!

"மாயோன் மேய காடுறை உலகமும்"

"மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்"

என்று தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியம் திருமால் வழிபாட்டின் ஆதியாகி நிற்கிறது.....!

அடுத்ததாக கடை சங்க இலக்கியங்களில் முன்னதாக கருதப்படும் புறநானூறு திருமாலையும் பலராமனையும் சுட்டுகிறது...!👇

"பால்நிறை உருவின் பனைக்கொடி யோனும்,
நின்ற உருவின் நேமியோனும் என்ற
இருபெருந் தெய்வமும் உடன் நின்றா அங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி"

இங்கு வரும் பனைக்கொடியோனை தொல்காப்பியரும் "பனைமுன் கொடிவரின்" எனும் வரிகளால் விளக்குகிறார். இதை #பரிபாடலும் பதிவு செய்கிறது.......!
அடுத்ததாக பதிற்றுப்பத்திலும் திருமால் வழிபாடு மேலோங்கி காணப்படுகிறது👇👇👇

"கமழ்குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி"

"மண்ணுடை ஞாலத்து மன்உயிர்க்கு எஞ்சாது
ஈத்துக் கை தண்டாக் கை கடுந்துப்பின்
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
நெடியொன் அன்ன நல் இசை
ஒடியா மைந்தே நின்பண்பு பல நயத்தே"

"குன்று தலைமணந்து, குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக்
கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனந்தலை ஒருங்குஎழுந்து ஒலிப்ப
தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென
உண்ணாப் பஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டுஊது பொலிதார், திருஞெமர் அகலத்து
கண்பொரு திகிரி கமழ்குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதி பெயர"

"மாய வண்ணனை மனன் உறப் பெற்று"

என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது. இவ்வரியானது கரியநிறமுடைய திருமாலைத் தன் மனத்தில் பொருந்தப் பெற்றவன் என்னும் பொருளைத்தருகின்றது..!

மதுரைக் காஞ்சியில்:

"சுணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓணநன்னாள்"

பரிபாடலில்:

"தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அணியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ"

"துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்"

திருமாலுடைய திருவடி பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் துணை செய்வது பிறப்பறுக்கும் திருவடி என்பதை..!👇

மா அயோயே மா அயோயே!
மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே!
என்றும் திருமால் பற்றிய தரவுகளை தருகிறது....!

கலித்தொகையில்:

"இகுளை!
காயாம்பூக் கண்ணிப் பொதுவன் தகை கண்டை
வாய் பகுத்திட்டு, புடைத்தஞான்று இன்னன் சொல்
மாயோன் என்று உட்கிற்று, என் நெஞ்சு"

என்றும் திருமாலை பதிவு செய்கிறது....!

நற்றிணையில்:

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்”

என்றும் திருமாலை பதிவு செய்கிறது....!

சிலப்பதிகாரம் கூட திருமாலை விட்டுவைக்கவில்லை என்றே கூறலாம்...!👇👇

"வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே"

"அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே"

"திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே"

"மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே"

"பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே"

இது தவிர்த்து நான்மணிக்கடிகை, திருக்குறள்  முதலான இன்னும் பல இலக்கியங்களில் திருமால் புகழ் ஓங்குகிறது......!

இதன் அடிப்படையில் சங்க இலக்கியங்களில் திருமால் வழிபாடு இல்லை என்ற பச்சை பொய்களையும் உடைத்தெறியலாம்...!

இராஜராஜேச்சரம்

தஞ்சை பெருவுடையார் கோயிலின் சிறப்பம்சங்களை தொல்லியல் சான்றுகளுடன் அறிந்துகொள்ள👇👇👇



அயோத்தியில் இராமர் கோயில் இருந்ததா?

ஆம் அயோத்தியில் இராமர் கோயில் இருந்ததாக 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்கள் பதிவு செய்திருந்தாலும் தொல்லியல் சான்றாக 1000 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் இராமர் கோயில் இருந்ததை பதிவு செய்துள்ளனர்....! 
ஆம் கிபி 941ல் முதலாம் பராந்தக சோழனின் 34ஆம் ஆட்சியாண்டில் அயோத்தியில் இராமர் கோயில் இருந்ததை பதிவு செய்துள்ளனர்....!

ஆனால் அதற்கு முன்பு 2000 ஆண்டுகள் பழமையான சிலப்பதிகார வரிகளை மேற்கோள் காட்டலாம் அயோத்தியில் இராமர் கோயில் இருந்திருக்கும் என்பதற்கு...!👇

"பெருமக னேவ லல்ல தியாங்கனும் அரசே தஞ்சமென் றருங்கா னடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போல"

அதாவது இங்கு இளங்கோவடிகள் கோவலனைப் பிரிந்த காவிரிப்பூம்பட்டினத்தைக் கூறுகையில் 'அருந்திறல் பிரிந்த அயோத்தி போல' என இராமரைப் பிரிந்த அயோத்தியை மேற்கோள் காட்டுகிறார்....!
ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பே அயோத்தியில் இராமர் கோயில் இருந்ததை சோழர்களின் கல்வெட்டுக்களில் பதிவு செய்வதால் இது இராமர் கோயிலுக்கு சிறந்த தொல்லியல் சான்றாக அமையும்...!

ஆக அக்கல்வெட்டானது ஸ்ரீராமரை, திரு அயோத்தி பெருமாள், திரு அயோத்தி ஆழ்வார், என்று  குறிப்பிடுகிறது. அவ்வகையில் மேலும் ஒரு சிறப்பானக் கல்வெட்டு இது....!

காஞ்சி புல்வேளூர் கைலாச நாதர் கோவிலில் உள்ள இக்கல்வெட்டு பராந்தகச் சோழனின் 34 ம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும். அதாவது கி.பி. 941.....!

இக்கல்வெட்டானது ஸ்ரீராமரை,
திரு அயோத்தி நின்றருளிய ஸ்ரீராகவர் என்கிறது.

முதலாம் பராந்தகனின் தேவியரான ஜெயபுவன சுந்தரமணியார் 10 கழஞ்சு பொன் நிவந்தம் கொடுத்து திரு அயோத்தி நின்றருளின ஸ்ரீஇராகவருக்கு திருவிளக்கு அமைத்துள்ளார்......!

ஆக
10 ம் நூற்றாண்டிலேயே தமிழருக்கும், அயோத்தி ராமருக்கும் தொடர்புண்டு என்பது தொல்லியல் சான்றாகும்.....!

தமிழக கோவிலில் உள்ள ஸ்ரீராமர் திருமேனியை அயோத்தி ராமர் என்று அழைத்துள்ளனர்.
(S.i.i.vol 32 No 41)

அதோடு முதலாம் பராந்தக சோழனின் தந்தையான ஆதித்த சோழன் காலத்தில் இராமர், இலக்குவன், சீதை, அனுமன் உருவங்கள் பொறிக்கப்பட்ட சிற்பங்கள் அதிக அளவில் இருந்தன....! 

அம்மன்னனே தன்னைக் கோதண்டராமன் என்று அழைத்துக் கொண்டான். இவன் காலத்து இராமர் குழுப் படிமங்கள் பருத்தியூரில் கிடைத்துள்ளன. இவை அனைத்துமே அழகு மிக்கனவாகும்......! 

பராந்தகன் காலத்து இராமர் குழுச் செப்புப் படிமங்கள் இராமேசுவரத்தில் கிடைத்துள்ளன. வடக்குப் பனையூரில் உன்னதமான இராமர் குழுவைக் காணலாம். வடக்குப் பனையூர், கப்பலூர் ஆகியவற்றின் படிமங்கள் முற்காலச் சோழர் கலையின் புகழ் பாடுகின்றன......!

ஆக அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததா என்ற தொடர் கேள்விகளுக்கும் சோழர்கள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது....!

குறிப்பு : (இந்த கல்வெட்டு தகவல்களை தந்தவர் தொல்லியல் ஆய்வாளர் திரு மாரிராஜன் அவர்கள்)

இராமர்பாலம் இருந்தது உண்மையா?

இராமர் பாலம் இருந்ததா? வரலாறுகள் என்ன சொல்கிறது என்பது பற்றிய வரலாற்று தொகுப்புகளை காண்போம்.....!😊
இராமர் பாலம் கட்டியது பற்றிக் கம்பராமாயணத்தில் கம்பன் சேதுபந்தனப் படலம்” என்று ஒரு படலத்தில் 72 பாடல்கள் மூலம் இராமசேது பாலம் கட்டியது பற்றி விவரிக்கிறார்.....!

இதில் முக்கியமாக இராவணன் இறந்த பின்பு அவன் சடலத்தைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டே மண்டோதரி இவ்வாறு கூறுகிறாள்...!

"என்று குரங்குகளைக் கொண்டு கடல் மேல் அணையைக் கட்டினாரோ, அன்றே எனக்குத்தெரிந்துவிட்டது, ராமன் ஒரு சாதாரண மானிடப் பிறவி அல்ல என்பது"

என்ற கம்பராமாயண வரிகள் மூலம் இராமர் பாலம் கட்டியது பற்றிய தகவல்களை அறியலாம்...!

அதோடு மகாகவி பாரதியார் 'சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்றுதான் கூறியுள்ளார்.....!
மேலே கம்பர் மற்றும் பாரதியாரின் இராமர் பாலம் பற்றிய தகவல்களை பார்த்தோம். இனிமேல் இலக்கிய ஆதாரங்கள் விடுத்து வரலாற்று ஆதாரங்களை காண்போம். 

முதலாவதாக திருவாலங்காடு செப்பேடுகளில் இராம சேது பாலம் இருந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளது....!

அதாவது இராஜேந்திர சோழன்  ஆண்டு வந்த காலத்தில் வெளியிடப்பட்ட இந்தச் செப்பெடுகளில் அவனுடைய தந்தையான இராஜராஜ சோழன் என்னும் அருள்மொழி வர்மனைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன......!

அந்தக் குறிப்புகள் இராஜராஜ சோழனின் வெற்றியைத் தெரிவிக்கின்றன. அவற்றில் ஒரு இடத்தில், இராஜராஜ சோழனின் இலங்கைப் படையெடுப்பைப் பற்றிய குறிப்பு உள்ளது. அந்தப் போரில் இலங்கை அரசன் சத்யாஸ்ரயனை தோற்கடித்தான் என்பது பற்றி கூறுகிறது....!

அந்த #செப்பேடு கூறுவதாவது👇👇👇

"ராகவர்களின் நாயகன் (ராமர்) குரங்குகளின் உதவியோடு கடலில் அணையைக் கட்டி, மிகுந்த சிரமத்துடன் இலங்கை அரசனை (இராவணனை) கூரிய அம்புகளால் கொன்றான்; ஆனால், இந்த வீரத்தளபதி (அருள்மொழி வர்மன்), கப்பல்கள் மூலம் கடலைக் கடந்து இலங்கையை எரித்தானே, ராமனைக் காட்டிலும் இவனே சிறந்தவன்"
அடுத்ததாக கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு ஒன்று விஜயநகரப் பேரரசு சேதுவிலிருந்து விஜயநகரம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறது.....!

பராந்தக சோழரின் பத்தாம் நூற்றாண்டில் வெளியிட்ட செப்பேடுகளில் அபராஜிதவர்மன் சேதுதீர்த்திற்குச் சென்றதாகக் குறிப்பிடுகிறார்......!

உலகப் புகழ் பெற்ற இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் டாக்டர் கல்யாணராமன் அவர்கள் “ஆடம்ஸ் பாலம்" தான் உண்மையில் இராமர் சேது பாலம் என்று எடுத்துக்காட்ட தொல்லியல், அறிவியல், வரைபடம் மற்றும் நூல்கள் போன்ற ஆதாரங்கள் உதவுகின்றன” என்று கூறியுள்ளார்.....!

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் 1747 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு டச்சு நிலப்படவியலாளர் தயாரித்த வரைபடங்கள் இப்பகுதியை இராமன்கோயில் என்று காட்டுகின்றன. பேச்சுத் தமிழில் இராமன்கோயில் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப் பட்டுள்ளது.....!

ஈரானிய அறிஞரும், வரலாற்றாய்வாளரும், காலவரிசையாளரும், மொழியறிஞரும், இந்தியவியலின் தந்தையுமான அபு ரெய்ஹன் அல் பிருணி (கி.பி. 973 – 1048) தனது குறிப்புகளில் ஆடம்ஸ் பாலம் என்ற பெயரால் முதன்முதலில் குறிப்பிட்டு இப்பாலத்தைப் பற்றி விவரித்துள்ளார்.....!

இபின் கோர்டாட்பே என்ற  ஒரு பெர்சிய புவியியல் வல்லுநர் (கி.பி. 846-847) ஆண்டுகளில் எழுதி வெளியிட்ட நூல் கிதாப் அல் மசாலிக் வால் மமாலிக் இந்நூலின் இரண்டாம் பதிப்பில்  “சேத் பந்தாய்” அல்லது கடல் பாலம் என்று இப்பாலத்தைக் குறிப்பிட்டுள்ளார்......!

அமெரிக்க விஞ்ஞானிகள் இராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான். இது  கட்டுக்கதையல்ல என்ற முடிவை வெளியிட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்....!

அதாவது இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகம் ஆகிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவை அறிய👇


அதோடு செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் கள ஆய்வுகள் இராமர் பாலம் மனிதர்களால் அமைக்கப்பட்ட பாலமே என்று சான்று பகர்கின்றனவாம். இம்முடிவு குறித்துச் செல்சியா ரோஸ், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர்  கூறிய கருத்தாகும்....!

ஆக வரலாற்றின் அடிப்படையிலும் அப்பகுதியில் இராமர் பாலம் இருந்தது என்ற நம்பிக்கைகளும் மக்களுடனேயே பயணிக்கின்றன என்பதை வைத்து இராமர் பாலம் இருந்தது என்பதாக முடிவு செய்யலாம்...!

சனி, 12 செப்டம்பர், 2020

ஆரியர்கள் என்பவர்கள் பிராமணர்களா?

ஆரியர்கள் என்றதும் கைபர் கணவாய் வழியாக வந்த பிராமணர்கள் தான் என்று நிறுவுவதில் சிலர் அயராது பாடுபடுகின்றனர். ஆனால் அவர்கள் உண்மைகளை தேடி அறிய முற்படுவதில்லை போலும். அந்த வகையில் எனது தேடுதலின் அடிப்படையில் ஆரியர்கள் என்பவர்கள் யார் என்று எழுத முயற்சிக்கிறேன்....!

முதலாவதாக நமக்கு ஆரியர்கள் பற்றி  தகவல்கள்  கிடைைப்பது சங்க இலக்கியங்கள். ஆக சங்க இலக்கியங்களை ஆராய்ந்தால் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் என்று "ஆரிய" என்ற சொல்லாடல் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இலக்கியங்களில் ஒரு இடத்தில் கூட பிராமணர்கள் தான் ஆரியர்கள் என்று எங்கும் குறிப்பிடவில்லை....!

இதில் குறிப்பாக சிலப்பதிகாரத்தில் மட்டும் 15 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ய என்ற செல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரு இடத்தில் கூட பிராமணர்களை குறிக்க அச்சொல்லாடல் பயன்படுத்தப்படவில்லையே அன்றி வடநாட்டு அரசர்களை குறிக்கவும் அதாவது ஆரிய அரசர், ஆரிய மன்னர், ஆரிய பேடி, ஆரிய நாடு என்ற பொருள்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது....!

உதாரணமாக,

"வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர்
மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை-தன்னில்"

"ஆரிய மன்னன் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு ஒருநீ யாகிய செருவெங் கோலம்"

"ஆரிய மன்னன் அழகுற அமைத்த தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண்"

"பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும்"
இதுபோல் அகநானூற்றிலும் யானையை பழக்குவோர், ஆரியப்பொருநன் மற்றும் ஆரிய அரசர்கள், இமயமலைப் பகுதியில் வாழ்வோர் என்ற பொருளில் ஆரிய என்ற சொல்லாடல் பயன்படுத்தப் பட்டிருக்குமே அன்றி  பிராமணர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை...!

உதாரணமாக,

"தாரும் தானையும் பற்றி, ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல"

"ஆரியர் படையின் உடைக, என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே"

"யானே பாணன்
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்"

"ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
தொன்று முதிர் வடவரை"

"அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
மாரி புறந்தர நந்தி,ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை பல் பூங் கானத்து அல்கி"
இது தவிர்த்து நற்றிணை மற்றும் பதிற்றுப்பத்து போன்ற இலக்கியங்களிலும் இதே பொருளில் தான் பயன்படுத்தப்பட்டிருக்குமே அன்றி பிராமணர்கள் தான் ஆரியர்கள் என்ற பொருளில் எங்கும் பயன்படுத்தப் படவில்லை...!

அதோடு மிக முக்கியமாக மணிமேகலையில் புத்தரை ஆரியர் என்று குறிப்பிடுவார் சீத்தலை சாத்தனார்...!

"ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு
'பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்"

அதோடு புத்தர் தம் சமயத்திற்கே  ஆர்ய தர்மம்’என்று தான் பெயரிட்டார். ஆக இங்கு ஆரிய என்ற சொல்லானது மதிப்பிற்குரிய உயர் பொருளில் பயன்படுத்தப்படுகிறதே அன்றி பிராமணர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை...!

அடுத்ததாக 6 மற்றும் 7ஆம் நூற்றாண்டில் துவங்கிய பக்தி இலக்கியங்களிலும் ஆரியர் என்ற சொல்லாடல் மதிப்பிற்குரிய உயர் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே  அன்றி பிராமணர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை...!

உதாரணமாக,

"பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே"

"அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்
வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றாயிரம் இயல்பின தாகி"

இங்கு சிவனை ஆரியன் என்று உயர்ந்த மதிப்பிற்குரிய பொருளில் சுட்டுவதோடு இக்காலங்களில் முருகன் இராவணன் மற்றும் இராமன் போன்றோர்களையும்  உயர்ந்த மதிப்பிற்குரிய பொருளில் குறிக்க ஆரிய என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டதே அன்றி பிராமணர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை...!

கிருஷ்ணா நதிக்கு தென்பகுதியில், கொண்டமுடி, மாயடவோலு, ஹீரஹடகல்லி, கந்தனேருவில்  நந்திவர்மனால் தானம் கொடுக்க பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் “ஆர்ய” என்ற சொல் மதிப்பிக்குறியதாக பெயர்களுக்குக் கடைசியில் உபயோகிக்கப் பட்டது.....!

மேலும் ஆர்ய, ஆரிய என்ற சொல் பெயருக்கு முன்பாக, ஜைன-புத்த துறவியர், குருக்கள், மற்றும்  ஆசிரியர்களுக்கு உபயோகிக்கப் பட்டுள்ளதை இந்தியா முழுவதிலும் உள்ள கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன.....!

குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், மணிமேகலையே புத்தனை “ஆரியன்” (25:6) என்று கூறியதை மேலே பார்த்தோம்...! 

இதையே பகவத்கீதை அத்யாயம் 2 : 2 ல் சொல்கிறது...!

"ஸ்ரீ-பகவான் உவாச
குதஸ்த்வா கஷ்மலம் இதம்
விஷமே ஸமுபஸ்திதம்
அனார்ய-ஜுஷ்டம் அஸ்வர்க்யம்
அகீர்த்தி-கரம் அர்ஜுன"

அதாவது👇👇👇

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதருமை அர்ஜுனனே, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு (ஆர்யனுக்கு) இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தை கொடுக்கின்றன.

அதாவது இந்த வசனத்தில்  ஆரியன் என்றால் என்ன அர்த்தம் என்று பகவான் கூறுகிறார் ஆரியர்கள் என்றால் வாழ்க்கையினுடைய நோக்கங்களை புரிந்து கொண்டவர்கள் என்று அர்த்தம். அனாரியன் என்றால் வாழ்க்கையின் நோக்கங்களை தெரிந்தும் அதை செயல்படுத்தாதவனே என்பது பொருளாகிறது...!

வரலாறுகள் இப்படி இருக்க அதாவது ஆரியர் என்ற சொல்லாடல் இலக்கியங்களின் அடிப்படையில் 

👉வடநாட்டரசர்
👉இமயமலை பகுதியில் வாழ்ந்த மக்கள்.
👉பேரிசை மரபின் ஆரியர்
👉இமய மாகத் தென்னங்குமரியொடு ஆயிடை அரசர்
👉தமிழகத்திற்கு வடதிசையிலுள்ள மக்கள் மற்றும் அரசர்.
👉 யானையை பழக்குபவர்கள்.
👉 உயர்ந்த மதிப்பிற்குரிய பொருள்.

இப்படி பயன்படுத்தப்பட்ட  ஆரிய என்ற சொல்லானது ஒரு தனித்த இனமாக, கைபர் கணவாய் வழியாக வந்த பிராமணர்களாக திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (கி.பி. 1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரியாரால் சித்தரிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த திராவிட கட்சிகள் இதை உண்மை என்று கூறி திணித்து வந்து இன்று அது ஒரு பெரிய அரசியல் பின்னணியாக மாறி நிற்கிறது....!

ஆனால் இராஜ இராஜ சோழன் காலத்து கல்வெட்டு ஒன்று ஆரியரும் பிராமணரும் வேறு வேறு என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது....!
இந்த தரவுகளின் அடிப்படையில் ஆரியரும் பிராமணரும் வேறு வேறு என்பதையும், பிராமணர்கள் கைபர் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் இல்லை என்ற கூற்றையும் திண்ணமாக நிறுவலாம்...!

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

நாத்திகர்களுக்கு ஆசான் திருமூலர் தரும் பதில் என்ன?

பகுத்தறிவாளர்கள் எனும் பெயரில் கடவுள் நம்பிக்கை உடையவர்களிடம் அறிவார்ந்த கேள்வியாக நினைத்துக்கொண்டு கடவுள் இருக்கிறார் என்றால் எங்கே காட்டு என்று கேட்கிறார்கள் சில ஞானிகள்.
ஆனால் இந்த கேள்விக்கு இன்றிலிருந்து 1500 ஆண்டுகளுக்கு முன்பே ஆசான் திருமூலர் பதில் சொல்லி உள்ளார்.

"முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தினிற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்தன் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தினைச் சொல்லெனில் சொல்லுமா றெங்ஙனே"

- திருமந்திரம்

விளக்கம்: முகத்தில் உள்ள கண்களை கொண்டு, காண்கின்ற காட்சி மட்டும் தான் உண்மை என்று நினைக்கும்  மூடர்களே! 
(கண் கொண்டு காட்டினால் தான் நம்புவேன் என்னும் மூடர்களே!) மனக் கண் கொண்டு காண்பதே சிவ ஆனந்தம். அதாவது மகளுக்கு  ஒரு தாயானவள் தன் கணவனோடு பெற்ற இன்பத்தை மகள் சொல் என்று தாயிடம் கேட்டால் 
அந்த தாய் அதை எப்படி சொல்ல முடியும் ? மகளே மணமாகி அவள் கணவனோடு துய்க்கும் போதே உணர இயலும். அது போல் தான் இறை உணர்வையும் நாமே தான் நமது அகக்கண்ணால் பெற வேண்டுமே அன்றி மற்றவர்கள் சொல்லி நம்மால் உணர முடியாது என்கிறார்...!

இராவணன் ஓர் ஆரியனா?

ஆம் மக்களே  இராவணன் ஓர் ஆரியன். இதை நான் சொல்லவில்லை. இன்று நாம் இராவணனை பெரிதும் அறிய காரணமான தமிழ்ப்பாட்டன் கம்பன் சொல்கிறார்....!
"ஆரியன் தன்மை ஈதுஆயின், ஆய்வுறு 
காரியம் ஈதுஎனின், கண்ட ஆற்றினால், 
சீரியர் மனிதரே; சிறியம் யாம்' எனா, 
சூரியன்பகைஞன் என்று ஒருவன், சொல்லினான்"

ஆக தமிழ்ப்புலவன் கம்பனின் ஆணைக்கு இணங்க இராவணனை ஓர் ஆரியனாகக் கொண்டு இப்பூமி ஓர் ஆரிய பூமி என்று உருட்டுவதில்  கூட குறையேதும் இல்லை என்று நினைக்கிறேன்....!

அதாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இராவண தேசம் என்று உருட்டுபவர்களுக்கு இது ஆரிய தேசம் என்று உணர்ந்த விளைகிறேன்...!

குறிப்பு: மேலே குறிப்பிட்ட வரிகளின் பொருள் என்ன என்பதோடு ஆரியன் என்ற சொல்லுக்கான சரியான பொருளை நீங்கள் உணர்ந்தீர்களே ஆனால் இந்த கைபர் கணவாய் வழியாக ஆரியன் வந்தானா? என்ற கூற்றுக்கான விடையும் உங்களுக்கு கிடைக்கலாம்...!

(பொருள் வேண்டுவோர் கருத்திடுக☺️)

தமிழகமும் இராமாயணமும்

தமிழகமும் இராமாயணமும்

(இலக்கியமும்,தொல்லியலும்)

இலக்கியங்களில் இராமாயணம்:

இதிகாச காப்பியங்களில்  இராமாயணம் மற்றும் மகாபாரதம். இவற்றின் தாக்கங்கள் நீண்டகாலமாக தமிழகத்தில் இருந்துள்ளது. அதற்கு இலக்கியம் தொல்லியல் என்று அளவுக்கு அதிகமான சான்றுகள் நம்மிடம் உள்ளன.....!
இராமாயண நிகழ்வுகள் பற்றியத் தரவுகள் தமிழகத்தில் இருந்தற்கான ஏராளமான அகச்சான்றுகள் புறச்சான்றுகள் நம்மிடையே உள்ளன....!

அகநானூறு

"வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே"

புறநானூறு:

"கடுந்தெற ல்இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கன்
செம்முகப் பெருங்கிளை யுழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே"

சிலப்பதிகாரம்:

(சிலப்பதிகாரம், புறஞ்சேரியிறுத்த காதையில்)

"அரசே தஞ்சம்என்று அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்"

"மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே"

மணிமேகலை:

"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்"
(உலக அறவி புக்க காதை, 10-20)

இதே மணிமேகலையில் வேறொரு இடத்தில்👇

"மீட்சி என்பது இராமன் வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்"

சீவக சிந்தாமணி:

"மராமரம் ஏழும் எய்த
வாங்குவில் தடக்கை வல்வில் இராமனை வல்லன் என்பது        
இசையலால் கண்டதில்லை"

பழமொழி நானூறு:

"பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்(து) இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்"

ஆகவே ராமாயணம் என்பது  கம்பனுக்கு முன்பே காலம் காலமாக தமிழரால் அறியப்பட்ட காவியமே...!

ஆக சங்க இலக்கியம், 
பக்தி இலக்கியம் கல்வெட்டு, 
செப்பேடு, 
கோவில் சிற்பங்கள் என்று இராமாயணத்தின் தாக்கம் அதிகமாகவே தமிழகத்தில் இருந்துள்ளது.....!

தொல்லியல்:

தமிழகத்தின்
பல்லவ, பாண்டிய, சோழ, அரசர்கள் காலத்தில் இராமாயணம் மற்றும் பாரதம் படிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்ட செய்திகள் கல்வெட்டுகளில் உள்ளன....!
இராமயணம் உரைநிகழ்த்த  மண்டபங்கள் இருந்துள்ளன. உரை நிகழ்த்துபவற்கு நெல் மற்றும் நிலங்கள் நிவந்தமாக வழங்கப்பட்டன. இவைகள் பாரத விருத்தி என்ற பெயரில் அழைக்கப்பட்டன.....!

அவ்வகையில் "திருத்தங்கல் நின்றநாராயணப்பெருமாள்" கோயிலில் உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டு...!👇👇👇

"மகாபாரதம், இராமாயணம் வாசிப்பதற்காகத்  குன்றெடுத்தானும் அவன் தம்பி திருவரங்கதேவன் உய்யக் கொண்டாழ்வானும் இணைந்து மூன்றரை மா நிலம் தானம்'' செய்ததை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது.....!
அதோடு திரிபுவனை வரதராஜப்_பெருமாள் கோவில் முதலாம் இராஜாதிராஜன் கல்வெட்டு......!👇👇👇

" பாரதமும் ஸ்ரீராமயணமும் வாசிப்பான் ஒருவனுக்கு நெல் ஒரு தூணிக் குறுணி வழங்கப்பட்டது. "

இங்கு இராமாயணம் மற்றும் பாரதம் வாசிப்பவர்களுக்கு சன்மானங்கள் வழங்கப்பட்ட நிகழ்வை பதிவு செய்துள்ளனர்....!
புள்ளளூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள முதலாம் இராஜேந்திரனின் கல்வெட்டு....!👇👇👇

"கோவிலில் பாரதம், இராமாயணம் படிக்க பாரத விருத்தியாக நிலங்கள் வழங்கப்பட்டன "
முதலாம் பராந்தகன், குரங்குகளால் பாலம் கட்டப்பட்ட இராமேஷ்வரத்தில் துலாபாரம் கொடுத்தான்.
இத்தகவலை வேளஞ்சேரி செப்பேடு குறிப்பிடுகிது...! (சுலோகம் 15)

இராஜராஜன் தனது இலங்கை படையெடுப்பை, இராமனின் இலங்கை படையெடுப்போடு ஒப்பீடு செய்து கொள்கிறார். இத்தகவலை திருவாலங்காடு செப்பேடு உறுதி செய்கிறது...!
(சுலோகம்-80)

கோவில் சிற்பங்கள்:

ஏறக்குறைய 9 ம் நூற்றாண்டு முதலாம் ஆதித்தன் காலம் முதல் கோவில்களில் இராமயணக்காட்சிகளை சிற்பங்களாக வடித்துள்ளனர்.....!

குடந்தை நாகஸ்வேரர் கோவில், புள்ளமங்கை கோவில், திரிபுவணம். போன்ற கோவில்களில் 
இராமாயண நிகழ்வுகள் முழுவதும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன....!
ஆக சங்க காலம் தொட்டே இராமாயணம் , பாரதம் போன்ற காப்பியங்கள் தமிழர்களின் வாழ்வில் 
தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்துள்ளது....!

(இப்பதிவிற்கான தொல்லியல் சான்றுகளை தந்தவர் வரலாற்று ஆய்வாளர் மா. மாரி ராஜன் அவர்கள்)

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...