வெள்ளி, 9 ஜூலை, 2021

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா?

ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் பறவைகளையும் போல எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி கூடி வாழ்ந்த போது நடந்த ஒழுக்கக்கேடுகளை தவிர்க்க பெரியவர்கள் சேர்ந்து எடுத்த ஒரு முடிவே திருமண ஒப்பந்தமாகும்....!

இதை தொல்காப்பியர் "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்று குறிப்பிடுவார். இங்கு கரணம் என்பது இறைவன் முன் செய்யப்படும் ஒப்பந்தம் என்று தேவநேய பாவாணர் குறிப்பிடுகிறார்...!

இந்த ஒப்பந்தத்தின் அடையாளமாகவே பண்டைய காலம் முதல் தாலி திருமணத்தின் அடையாளமாக கருதப்பட்டது எனலாம். இரு மனங்களை இணைக்கும் விதமாக பலவிதமான சடங்குகள் நடத்தப்பட்டாலும் தாலி அணிவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது...!

அவ்வகையில் பண்டைய தமிழர் திருமணங்களிலும் தாலி அணிவதற்கு தனி சடங்குகளும் நம்பிக்கைகளும் பின்பற்றப்பட்டு வந்தன. அதாவது பண்டைய காலத்தில் காலியானது இழை, வீழ், மங்கல நாண் போன்ற பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை விரிவாக காணலாம்....!

பண்டைய இலக்கியங்களுக்கு செல்வதற்கு முன்னால் 11ஆம் நூற்றாண்டில் தான் தாலி என்ற நேரடி சொல்லாடல் ஆரம்பிக்கிறது அதையும், வள்ளி தெய்வானை திருமண நிகழ்வை சுட்டிய போது கச்சியப்ப சிவாச்சாரியார் பயன்படுத்திய வரிகளையும் பதியலாம் என்று தோன்றுகிறது....!

பதினொன்றாம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில்👇👇👇

"ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற்
பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தானென்பர்
காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண்
டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட
வூரிர் கலயனையே"

இப்பாடலில் நாயனார் தம் குழந்தைகள் உணவின்றி வாடியபோதும் தம் மனைவி கழற்றித்தந்த தாலியை விற்று குழந்தைகளின் பசியை போக்க நெல் வாங்காமல் குங்கிலியம் வாங்கி இறை பணி செய்த நிகழ்வை குறிப்பிடுகிறார். இங்கே தான் முதன் முதலாக இழை, வீழ் போன்ற சொல்லாடல்கள் தவிர்த்து தாலி என்ற நேரடிச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது...!

இங்கும் பெண்கள் தாலி அணிந்திருந்த தகவல் தான் கிடைக்கிறதே அன்றி திருமணத்தின் அடையாளமாக தாலி அணிந்த நிகழ்வு 10 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கவில்லை. ஆனால் வள்ளி தெய்வானை திருமண நிகழ்வை குறிக்க வந்த கச்சியப்ப சிவாச்சாரியார் தனது கந்த புராணத்தில் இந்த குறையையும் தீர்த்து வைக்கிறார்....!

"செங்கம் லத்திறை சிந்தையின் ஆற்றி அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்ட மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து நங்கை முடிக்கோர் நறுந்தொடை சூழ்ந்தான்"

இங்கே தெய்வானையுடனான திருமணத்தின்போது இந்திரன் முருகனுக்கு பாதபூஜை செய்ததையும், பின்பு இந்திரன் கன்னிகாதானம் அளிதத
 நிகழ்வையும் பின்னர் முருகன் மங்கல நாணை தெய்வானையின் அழகிய கழுத்தில் அணிவித்த நிகழ்வையும் அழகாக சுட்டுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்....!

ஒருவேளை இங்கே மங்கல அணி என்றுதானே வருகிறது இதை எப்படி தாலி என்பது என்று யாராவது கேட்டால் அதே கச்சியப்ப சிவாச்சாரியார் இன்னொரு இடத்தில்,👇

"நான்முகனே முதலோர்  பாவை மார்கள் பொற்றாலி தனையளித்தோன் புகழ்போற்றி" என்று சிவபெருமான் தேவர்களின் மனைவியர்களின் தாலியை காத்த நிகழ்வை சுட்டுகிறார்....!

பொற்றாலி என்றதும் ஔவையாரின் பழம்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதாவது👇👇👇

"தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்"

ஆச்சா😊 இனிமேல் சங்க இலக்கியங்களுக்கு செல்வோம் வாருங்கள்...!

சங்க இலக்கியங்களில் இடத்திற்கு ஏற்றவாறு பல்வேறு வகைப்பட்ட திருமண முறைகள் இருந்தாலும் கோவலன் கண்ணகி திருமணம் பார்ப்பான் முன்னிலையில் அக்னி சாட்சியாக தான் நடந்தது என்பதை நினைவில் கொண்டு அகநானூறு புறநானூறு நெடுநல்வாடை போன்ற இலக்கியங்களில் தாலி பற்றிய தகவல்கள் எங்கெங்கே வருகிறது அது என்ன பெயரில் வருகிறது என்பதை காணலாம்....!

அகநானூறு:

"புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!''

இங்கு புலவர் நல்லூர் கிழார் என்ன சொல்ல வருகிறார் எனில் மங்கல நீராட்டும் வழக்கத்தின்போது வால் இழை மகளிர் என்ற வரியில் இழை என்பது திருமண சின்னத்தையே குறிக்க்றது எனலாம்....!

இழை என்று குறிப்பிடும் தாலியானது இதே அகப்நாடலில் இன்னொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,

"இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்"

இங்கு இழை அணி சிறப்பின் என்று வருவதால் தாலியை அணிந்ததால் சிறப்புடைய பெண் என்ற பொருள் கொள்வது பொருந்தத்தக்கதாகிறது...!

புறநானூறு:

"ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்;
சுவைக்குஇனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவுஇன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய"

இப்பாடலில் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் எனும் வள்ளலின் மனைவியர் தம் கணவர் அணிந்த ஒரு இழையை மட்டும் கழற்றாமல் மற்றவற்றை இரவலர்க்கு பரிசளித்த செய்தியை குறிப்பிடுகிறார். திருமணமான பெண் எந்த நிலையிலும் கழற்றக்கூடாத இந்த மங்கல அணியையே புலவர் இழை என்று சுட்டுகிறார்....!

புறநானூறு உரை ஆசிரியர்தளும் இந்த வரிகளுக்கு பிறிதோர் அணிலனுமின்றி கொடுத்ததற்கரிய மாங்கல்ய சூத்திரத்தை அணிந்த மகளிருடனே பொலிவிழந்து சாய்ந்ததென்று சொல்லும் ஆயுடை கோயில்" என்று கூறுவதில் கொடுத்ததற்காரிய மாங்கல்ய சூத்திரம் என்பது தாலியையே குறிக்கும் என்பதில் ஐயமேதும் இருக்க இயலாது....!

அடுத்ததாக இதே புறநானூற்றில் புலவர் ஆவூர் கிழார் மாண் இழை மகளிர் என்பதாக தாலி அணிந்த பெண்டிர் என்று பொருள்கொள்ளும் வரிகளை காண்பதற்கு இங்கே தொடவும்.....!

நெடுநல்வாடை:

"தோடமை தூமடி விரித்த சேக்கை ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப் பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து நன்னுதல் உலறிய"

இப்பாடலில் நக்கீரர் பாண்டியன் நெடுஞ்செழியன் போருக்கு சென்றிருந்தபோது அவனுடைய பெருந்தேவி மிகுந்த துயருற்றபோது மன்னர் இருந்தபோது முத்துமாலை அணியப்பெற்ற அவள் கழுத்து இப்போது வெறும் தாலி மட்டுமே தாழ்ந்து தொங்குகிறது என்ற பொருளை உவமையாக்குகிறார்.....!

"பின்னமை நெடுவீழ்" என்ற வரிகளுக்கு குத்துதலமைந்த நெடிய தாலி நாண் என்று நச்சினார்க்கினியர் உரை வகுக்கிறார்.இங்கு வீீீழ் என்பது தொங்குகின்ற பொருளை குறிக்கும்.  அதாவது தொங்குகின்ற 
மங்கல அணி என்றே பொருள்படும்.....!

சிலப்பதிகாரம்: 

மேலே கூறியதபோல் கோவலன் கண்ணகி திருமணம் பார்ப்பான் முன்னிலையில் அக்னி சாட்சியாக நடந்தது என்பதை பார்த்தோம். அச்சமயம் மடமுரசு மத்தளம் முழங்க மங்கல அணியை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட  நிகழ்வை இளங்கோவடிகள் அழகாக சுட்டுகிறார்....!

"அகலுள் மங்கலவணி எழுந்தது" என்ற சிலப்பதிகார வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதுகையில் "மங்கலவணி ஊரெங்கும் எழுந்ததென்க" என்று எழுதுகிறார்.  அதோடு சிலம்பின் இரண்டாவது காதையில் கண்ணகியின் அழகை கோவலன் வருணிப்பதை சொல்ல வந்த இளங்கோவடிகள் இவ்வாறு குறிப்பிடுகிறார்,👇

"பின் நலம் பாராட்டுநர் மனுவில் மங்கல அணியே யன்றியும் பிறிதணி அணியப்பெற்றதை எவன் கொல்"

என்று பாடுகிறார். ஆக இங்கு கண்ணகி மற்ற அணிகலன்களுடன் சேர்த்து தாலியும் அணிந்திருந்தாள் என்பதில் ஐயமில்லை. அதோடு "மங்கல வணியிற் பிறிதணி மகிழாள்" என்ற வரிகள் மூலம் தாலியை மட்டுமே அணிந்து மகிழ்ந்த நிகழ்வையும் இளங்கோவடிகள் அழகாக எடுத்துரைக்கிறார். 
இதேப்போல் சீவக சிந்தாமணியிலும் பெருங்கதையிலும் கூட தாலி பற்றிய தகவல்கள் உண்டு. அதை பதிவின் நீளம் கருதி  பின்னர் ஒரு பதிவில் காண்போம்....!

கம்பராமாயணம்:

"நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ!
நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின்
இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள்
வைத்த பொற் பெட்டியோ!

நிலமகளின் முகம், திலகம், கண், மங்கல நாண், ஆரம்
முதலியனவாக அயோத்தி நகரத்தைப் புனைந்துரைத்தார்.    பெண்களும்
மங்கல  நாண்  பெருமை  தருவதாதலால்  “நிறைநெடு  மங்கல நாண்”
என்றார்.  

மங்கையர் மங்கலத்தாலி மற்றையோர் அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே கொங்கையின் வீழ்ந்தன; குறித்த ஆற்றினால் இங்கிதின் அற்புதம் இன்னும் கேட்டியால்” 

என்ற வரிகளால் மங்கையர் தாலி அணிந்தனர் என்பது திண்ணம்.....!

அதோடு 6ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியங்களான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களிலும் திருமுறைகளிலும், முக்கூடற்பள்ளு முதலான சிறாறிலக்கியக்களிலும் தாலி பற்றிய தகவல்கள் உண்டு.....!

ஆக பழந்தமிழர் பண்பாட்டில் தாலி அணிவது என்பது மிக முக்கியமான ஒன்றாகவே இருந்து வந்தது என்பதை இந்த தரவுகள் மூலம் தெளிவாக அறியலாம்....!

ஞாயிறு, 13 ஜூன், 2021

இந்துமதமும் சில கேள்விகளும்.

கேள்வி : முதலாம் நூற்றாண்டில் இந்துமதம் இருந்ததா??? இந்து என்ற பெயர் இருந்ததா???

பதில் : ஆம் முதலாம் நூற்றாண்டு என்ன? கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே தமிழகத்தில் இந்துமதமும் இருந்தது இந்து என்ற பெயரும் இருந்தது.

இந்து என்ற பெயருக்கு ஆதாரம் :

1. பைபிள் பழைய ஏற்பாடு எஸ்தர் 1:1


2. இன்றிலிருந்து  2500 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் #டேரிஸ் என்ற அரசனின் காலத்தில் பாரத நாட்டின் ஆன்மீக தத்துவங்களை இந்து என்று அழைத்துள்ளனர்.


இந்து மதம் இருந்ததற்கு ஆதாரம் :

பொதுவாக இன்று இந்து என்ற பெயரில் சங்ககாலத்தில் இருந்த சிவன், திருமால், முருகன் போன்ற தெய்வங்களை வழிபடுபவர்களையே இந்துக்கள் என்று அழைப்பதால் கிறிஸ்து பிறப்பிற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க இலக்கியமான புறநானூற்றில் இந்த தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு என்பதால் இந்துமதம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இன்றைய தமிழக நிலப்பரப்பில் இருந்தது...!

நூல் : புறநானூறு
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.

"ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும், கடல்வளர் புரிவளை புரையும் மேனி அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,

மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும் மணிமயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என ஞாலம் காக்கும் கால முன்பின்,

தோலா நல்இசை நால்வர் உள்ளும்
கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்; ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்
அரியவும் உளவோ நினக்கே?"

பொருள் : காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து, 
நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும், 
நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் #சிவபெருமான். கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், 
கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன்

கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால். நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன்

இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள். 
இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; 
வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; 
நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன். 

இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால், உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ?  என்று பாண்டியனுக்கு அக்காலத்தில் இருந்த தெய்வங்களின் பெருமைகளை உவமையாக்குகிறார் புலவர்.

 -பா #இந்துவன்
  24.05.2021

சனி, 22 மே, 2021

சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது யார்?

நண்பர் - 1 : இந்துமதத்தில்  இருந்த "சதி" எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க ராஜாராம் மோகன் ராய் பாடுபட்டார் சகோ.

நண்பர் - 2 : அப்போ ராமசாமி நாயக்கர் ஒழிச்சதா சொன்னாங்க? ஏன் ராஜாராம் மோகன் ராய் ஒழிச்ச சதியை திரும்ப ராம்சாமி நாயக்கர் ஒழிச்சார்???

நண்பர் -1 : அது வந்து😓🤔 பார்ப்பனர்கள் திரும்பவும் இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை புகுத்தினார்கள் அதனால்தான் திரும்ப ஒழித்தார் சகோ.

நண்பர் -2 : இராஜாராம் மோகன்ராயே இந்து புராண இதிகாசங்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஏற்கவில்லை என்று பல மேற்கோள்களை காட்டிதான் அதை எதிர்த்தார் எனும்போது பார்ப்பனர்கள் திரும்ப எப்படி புகுத்தியிருப்பார்கள்.???

நண்பர் - 1 : அது வந்து ப்ரோ இந்த ஆரியர்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தமிழர்களிடம் புகுத்தியதே தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கதான் சகோ. சதிக்கு ஆதரவாக பல சமஸ்கிருத நூல்கள் உள்ளதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை சகோ.

நண்பர் - 2 : எனில் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை அறிமுகப்படுத்தி அதை முதன்முதலில் வழக்கமாக கொண்டிருந்தது ஆரியர்கள்தான் அல்லவா???

நண்பர் -1 : அதில் என்ன சந்தேகம் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை உருவாக்கியதே ஆரியர்கள் தான்.

நண்பர் - 2 : சரி. தமிழின் மிகப்பழமையான நூலான தொல்காப்பியத்தின் காலம் என்னவாக இருக்கும்னு நினைக்கிறீங்க???

நண்பர் - 1 : அது ஆரியர்கள் வருகைக்கு முன்பானது சகோ. ஆரியம் கலக்காத ஒரே நூல் தொல்காப்பியம் தான்.

நண்பர் - 2 : எனில் தொல்காப்பியத்தில் எப்படி உடன்கட்டை ஏறும் வழக்கம் வந்தது??? ஆரியர்கள் டைம் மெஷின் வச்சு தொல்காப்பியர் காலத்துக்கு வந்துட்டு உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தொல்காப்பியருக்கு சொல்லி கொடுத்துட்டு போனாங்களா???

நண்பர் - 1 : எதே 😳😳😳 தொல்காப்பியத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததாக குறிப்புகள் உள்ளதா??? பாத்தியா.! நீ என்னையே முட்டாளாக்க பார்க்கிறாய்? தமிழர்களுக்கும் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சகோ.

நண்பர் - 2 : ஒருவேளை தொல்காப்பியத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தால் இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தமிழர்கள் தான் ஆரியர்களுக்கு கற்றுக்கொடுத்தனர் என்பதை ஒத்துப்பீங்களா???

நண்பர் -1 : இல்லாத ஒன்றை பற்றி ஏன் பேசுறீங்க சகோ? தொல்காப்பியத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றிய குறிப்புகள் இல்லை. இருந்தால் ஆதாரம் தாருங்கள்.

நண்பர் - 2 : (தொல்காப்பியம், சூத்திரம் –1025)

காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்
நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச் சொல்லிடைஇட்ட பாலை நிலையும்"

அதாவது இங்கு தொல்காப்பியர் சொல்வது என்னவெனில் கணவனின் இறந்த உடலுடன் கூடவே எரியுண்டால் அவள் சமுதாயத்தில் முழுமையான நல்லபெண் ஆகிவிடுகிறாள். இதில், ‘நல்லோள்’ என்னும் சொல் கணவனுடன் எரிபுகும் பெண்ணைக் குறிக்கக் கையாளப்படிருக்கிறது.

நண்பர் - 2 : சகோ இருக்கீங்களா?

நண்பர் - 1 : 😷🏃🏃🏃

நண்பர் - 2 : இப்போ சொல்லுங்க சகோ சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்துமதத்தில் இருந்ததா? இல்லை😒😒😒??? ஒருவேளை இதற்கு பதில் சொன்னால் தொல்காப்பியன் ஓர் இந்து என்பதை ஏற்க வேண்டி வரும்...!

நண்பர் - 1 : 😳😷🏃🏃🏃

வழக்கம்போல இவரும் ஓடிவிட்டார். இன்னும் கொஞ்சநேரம் இருந்திருந்தால் புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை என்று தமிழக நிலப்பரப்பில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது பற்றிய ஏராளமான தகவல்களை கொடுத்திருக்கலாம். பொதுவாக உடன்கட்டை ஏறும் வழக்கம் பாரத நிலப்பரப்பில் கட்டாயப்படுத்தப்பட்ட சட்டமில்லை என்பதற்கு உதாரணம் பாரதத்தின் மிகப் பழமையான இரு இதிகாசங்களாகும். மகாபாரதத்தில் பாண்டு இறந்த பிறகு குந்தி உயிரோடிருந்து தனது ஐந்து (கர்ணன் தவிர்த்து) புதல்வர்களை நல்முறையில் வளர்த்தியதை படித்திருப்போம். அதுபோல இராமாயணத்திலும் தசரதன் இறந்தபிறகு கைகேயி முதலான மனைவியர் தீப்புகாதிருந்ததே இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாகும்...!

தமிழ் இலக்கியங்களை எடுத்துக்கொண்டாலும் இது கட்டாயப் படுத்தப்பட்ட சட்டமாக இருந்ததில்லை எனவும் பெண்கள் இம்முடிவை தாமாக முன்வந்து எடுத்துள்ளனர் என்பதையும் அறியலாம். உதாரணமாக,

புறநானூறு :

"பல் சான்றீரே! பல் சான்றீரே!
‘செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும், பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே! அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே"

பொருள்: ‘’கணவனுடன் நீயும் போ என்று சொல்லாமல் பொல்லாத செயல் புரியும் பெரியோர்களே! கணவன் இல்லாத பெண்கள் வெள்ளரிக்காய் விதை போல, நெய் இல்லாத சோறு, எள்ளுத் துவையல், புளி கூட்டி சமைத்த வேள இலை ஆகியவற்றை உண்ண வேண்டும். பாய் இல்லாமல் வெறும் கல் தரையில் படுக்க வேண்டும். அது போன்ற பெண் என்று என்னை நினைத்து விட்டீர்களா? நான் அப்படிப்பட்டவள் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப் படுக்கை கஷ்டமாக இருக்கலாம். என் கணவன் இறந்துவிட்டான். அந்த சிதைத் தீயே எனக்கு தாமரைக்குளம் போல குளிர்ச்சிதரும். இதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று அவையில் குழுமியிருந்த பெரியோர்களின் அறிவுரைகளை கேட்காமல் தாமாக முன்வந்து பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்புகுகிறாள். இதிலிருந்து உடன்கட்டை ஏறும் வழக்கம் நமது தமிழ் சமூகத்தில் கட்டாயப்படுத்தப்டவில்லை என்பது தெளிவு...!

தொல்காப்பியம் முதற்கொண்டு தமிழின் மிகப்பழமையான இலக்கியங்களே உடன்கட்டை ஏறும் வழக்கத்தை முன்மொழிவதால் இது ஆரியர்கள் தமிழர்களிடம் புகுத்தியது என்றோ, பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்றோ சொல்வதற்கு இடமில்லை எனினும் இதுபோன்றதொரு கொடுமையான நிகழ்வை ஏற்றுதான் ஆகவேண்டுமா என்றால் நிச்சையமாக இல்லை. ஒருவேளை வள்ளுவன் கூறியதுபோல்

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

பொருள் : பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

கற்பு தவறாமல் தன் கணவனை தெய்வத்திற்கு நிகராக மதித்து வாழ்ந்த இத்தகைய மகத்துவம் வாய்ந்த பெண்கள் தன் கணவன்மீது கொண்ட அன்பால் கணவனை இழக்கும்போது துன்பம் தாங்க முடியாமல் இதுபோன்றதொரு செயலை செய்ய முற்பட்டிருப்பார்களோ? என்றால் கூட அந்நிகழ்வை நினைவுபடுத்தவே முடியவில்லை. ஏனெனில் அந்நிகழ்வு அத்தனை கொடுமையானது. நமது இந்த பாரத திருநாட்டில் குழந்தைத்திருமணம் முதற்கொண்டு இதுபோன்ற மூடப்பழக்கவழக்கங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து தன்னைத்தானே தனது குறைகளை அகற்றி இன்று ஆலமரம்போல் வளர்ந்து நிற்கிறது இந்நாட்டின் பண்பாட்டு கலாச்சாரங்கள்...!

தீப்பாய்ந்த அம்மன், மாலையிட்ட அம்மன் என்று கணவனுடன் தீப்பாய்ந்து உயிர்நீத்த பெண்களுக்கு நடுகல் எழுப்பி வழிபடும் வழக்கமும் நம்மிடம் இருந்தது. இந்த நடுகற்களில் கணவனைப் பிரியாதாள், துணைவனைப் பிரியாதாள் என்பதுபோன்ற வசனங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். கணவனோடு சுமங்கலியாகச் சொர்க்கம் புகுதல் மற்றும் கற்பு நெறி தவறாத இத்தகைய பெண்களுக்கு நடுகல் எழுப்பி  தெய்வமாக  வழிபடுதல் ஆகிய நம்பிக்கைகளின்  அடிப்படையில் உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது எனினும் இது இன்றைய சூழலில் தேவையற்ற ஒன்றே ஆகும்...!

 -பா #இந்துவன்
  22.05.2021

சமஸ்கிருதம் சில கேள்விகள்

சமஸ்கிருதமும் சில கேள்விகளும் :

சிறிது நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருக்கும் எனக்கும் நடந்த சிறு விவாதத்தின் ஒரு பகுதியை கீழே காண்போம்.

(அதை தற்கால சூழலுக்கு ஏற்ப சுப்பு அவர்களின் எழுத்துகளையும் இணைத்து பதிகிறேன்)

நண்பர் : உங்கள் கடவுளுக்கு தமிழ் தெரியாதா? ஏன் தமிழில் பூஜை செய்ய கூடாது?

இந்துவன் : கடவுளுக்கு மொழிகள் கிடையாது. இந்த மொழிதான் எனக்கு உகந்தது மற்றவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இறைவன் எந்த இடத்திலும் யாரிடமும் கூறியதாக சரித்திர சான்றுகளும் இல்லை. புராண, இதிகாச ஆதாரங்களும் இல்லை. இறைவனை வழிபடும் போது தமிழ் மொழியிலும் வழிபடலாம். சமஸ்கிருதத்திலும் வழிபடலாம். இதுவரை எழுத்து வடிவமே இல்லாத நரிக்குறவர் பாஷையிலும் வழிபாடு நடத்தலாம். இறைவன் அதை ஒரு போதும் ஏற்காமல் விலக்கி வைப்பது கிடையாது.

இதை சாதாரணமாக முகநூலிலே உட்கார்ந்து கதை பேசும் உங்களாலும், என்னாலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றால் கோடிக்கணக்கான பொற் காசுகளை கொட்டி ஆலயங்களை உருவாக்கினார்களே மன்னாதி மன்னர்கள் அவர்களால் எப்படி அறிந்து கொள்ளாமல் போக முடிந்தது?  நமது மன்னர்கள் என்ன முழு முட்டாள்களா? வேற்று நாட்டை வெல்வதற்கு படை திரட்ட தெரிந்த அவர்களுக்கு, உலகத்தை வெல்ல கனவு கண்டு, கடல் கடந்து கப்பல் ஒட்டி, வெற்றி பயணம் மேற்கொண்ட அவர்களுக்கு தமிழில் வழிபாடு நடத்தினால் இறைவன் ஆத்திரப்படமாட்டான் என்ற இரகசியம் எப்படி தெரியாமல் போயிற்று? ஏன் இதை நீங்கள் சிந்திக்கவில்லை?

நண்பர் : சமஸ்கிருதத்தில் இதுவரை ஒரு இலக்கியமும் எழுதப்படவில்லையே?ஒருவேளை  யாராவது எழுதி இருந்தால் எழுதப்பட்ட இலக்கியங்களின் பெயர்கள் என்னென்ன? 

இந்துவன் : வேதங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மாஹாபாரதம்,  ஹரிவம்சம், ஐந்திர வியாகரணம், அஷ்ட்டாத்யாயி, கௌதம தர்ம சூத்திரம், மற்றும் புராணங்கள் என்று அதிகமாக உள்ளது.

நண்பர் : தமிழ் புலவர்கள் யாராவது சமஸ்கிருத நூல்கள் எழுதியுள்ளனரா ?

இந்துவன் : ஆம். வடமொழியில் காவ்யாதர்சம் எழுதிய அறிஞர் தமிழ்நாட்டுக் காஞ்சிபுரத்தைச் சார்ந்த #தண்டி என்ற தமிழர். முதன் முதலில் தமிழுக்கு இலக்கண நூல் எழுதிய தொல்காப்பியருக்கு குருவாம் அகத்தியர் எழுதிய வடமொழி நூல் #ஆதித்ய_ஹிருதயம். #அத்வைத நூல்கள் பல எழுதிய சான்றோர் #சங்கரர் தென்னிந்தியர். #விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர் #இராமாநுசர் காஞ்சிபுரப் பகுதியைச் சார்ந்த தமிழர். பரத நாட்டியம் பற்றியும் கர்நாடக சங்கீதம் பற்றியும், சமையல் முதலியன பற்றியும் உள்ள வடமொழி நூல்கள் பல, தமிழ்நாட்டுக் கலைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் எழுதியவை தான்...!


நண்பர் : தமிழர்களின்  வரலாற்றில் சமஸ்கிருதம் இருந்ததா? ஆம் எனில் எப்போதில் இருந்து?

இந்துவன் : தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல் தமிழில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. வடசொற்களைத் தமிழில் எடுத்தெழுதுவது பற்றி எழுதுகையில்.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
(தொல். சொல். 395)

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்
(தொல். சொல். 396)

என்று விளக்குகிறார். எனில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே வடமொழி தமிழர்களுடன்  இருந்தது என்பதை அறியலாம்.

நண்பர் : ஏன் வடமொழியை தமிழ் புலவர்களில் ஒருவரும் போற்றவில்லை? அதாவது ஏன் முக்கியத்துவம் தரவில்லை?

இந்துவன்: உங்கள் கண்ணுக்கு அப்படி தெரிவதால் அது உண்மை ஆகிவிடுமா? தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய #சுந்தரம்_பிள்ளை  அவர்கள் வடமொழி பற்றி கூறியதாவது,

"வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி" என்று வாழ்த்துகிறார். "வடமொழியும் நமது நாட்டுமொழி தென்மொழியும் நமது மொழிகளே என்பது என் கருத்து’ என்கிறார் திரு.வி.க.

"அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்
#தமிழ்ச்சொல் #வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே"  

‌என்கிறார் ஆசான் திருமூலர்...!

"மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத் தமிழ்ச்சொலும்
வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே"
என்கிறார் திருஞானசம்பநத்ர்.

நண்பர் : ஆசான் #திருமூலர் ஆரிய பார்ப்பானை கோயிலுக்கு வந்து பூஜை செய்யக்கூடாது என்கிறார் ஏன்?

இந்துவன் : அதாவது அதன் பொருள் தன்னை பிறப்பால் மட்டும் பார்ப்பான் என்று அழைப்பவனை. அதாவது வேதம் அறியாது பிரம்மம் அறியாது தன்னை பிறப்பின் அடிப்படையில் பார்ப்பான் என கூறி பூஜை செய்பவன் சிவன் கோயலில் வந்து பூஜை செய்யக்கூடாது என்கிறார். நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள்...!

அதாவது ஆசான் திருமூலர் இங்கு அந்தணர்களின் ஒழுக்கம் பற்றி பேசுகிறாரே அன்றி ஆரிய பார்ப்பானை அல்ல😂👇👇👇


நண்பர் : கடவுள் சிலைகளை செதுக்கும் சிற்பிக்கு அந்த சிலையை தொடுவதற்கு ஏன் அனுமதி இல்லை? அவன் ஏன் பூநூல் அணிவதில்லை?

இந்துவன் : சிற்பியின் இலக்கணம் அதாவது ஒரு சிற்பி எவ்வாறு இருக்கவேண்டும் என்று சிற்பநூல் இலக்கணம் வகுத்துள்ளது எனில்,

"ஸ்தபதீநாம் சதுர்வேத தஸ; கர்மா விதியதே| ஸிகாயஜ்  ஞோபவீ தஞ்ச ஜபமாலா கமண்டலும் || கூர்மபீட: ஸிரச்சக்கரம் யோக வேஷ்டிர லங்கர் தம்| பீதவஸ்த்ரஸித  ப்ரஷ்டம் விபூதிர்க் கந்தலேபநம் || ஸிவிவமந்த்ரம் ஸிவத்யாநம் ஸிவபூஜா  விதீயதே |  ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸாநாம் ஹ்ருத யேத்யாந ஸில்பிநாம்."

அதாவது எவனொருவன் நான்கு வேதங்களையும் அறிந்தவனாயும் ; மரம், செங்கல், கருங்கல், உலோகம், சாந்து , மண், சுக்கான்கல், தந்தம் முதலியனவற்றில் உருவங்களை அமைக்கும் ஆற்றல் வாய்ந்தவானாயும் ; இயந்திரம், படம் முதலியன எழுதும் திறமை வாய்ந்தவனாயும் ; தலையிற் சிகையை உடையவனாயும் ; பூணூலைத் தரித்தவனாயும் ; பீதாம்பரம் அணிந்தவனயும் ; விபூதியையும் வாசனைச் சந்தனத்தையும் அணிந்தவனாயும்   மிருத்தலோடு, சிவபூசை செய்பவனாய், பிரம்மா விஷ்ணு மகேசுரரை இருதயத்தில்  தியானிப்பவனாய்  இருக்கின்றானோ அவனே சிற்பியாவான் என்பது இதன் பொருளாகும்.

நண்பர் : சூத்திரன் என்பது இழிவான சொல் தானே? நாம் அனைவரும் சூத்திரர்கள் தானே?

இந்துவன் : அதாவது நீங்கள் மேலே கேட்ட கேள்விக்கு பதிலாக நான் கூறிய சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் சூத்திரனான சிற்பி நான்கு வேதங்களை கற்று, குடுமி வச்சி, பூநூல் அணிந்து பட்டு பீதாம்பரம் கொண்டு சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்துள்ளான் என்பதுதானே  பொருள்?

உதாரணமாக பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான் அதில் வரும் வாயிலார் புராணத்தில்,
"தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்" என்றும்,  இளையான்குடி மாற நாயனார் புராணத்தில்.
"வாய்மையில் நீடு சூத்திர நற்குலம்" என்றும் இரு நாயன்மார்களின் குணங்களை உயர் பதத்தில் தான் எழுதி இருப்பதை வைத்து சூத்திரன் என்ற சொல் வரலாற்றில் இழிநிலையில் பயன்படுத்தப்படவில்லை என்பதுதானே பொருள்?

நண்பர் : சமஸ்கிருதம் செத்த மொழிதானே? வழக்கொளிந்த மொழியை இன்னும் ஏன் தூக்கி பிடிக்கிறீங்க?

இந்துவன் : ஒருவேளை சமஸ்கிருதம் செத்த மொழி எனில் நான் கீழே குறிப்பிடும் சம்பவத்திற்கு என்ன சமாதானம் சொல்வீர்கள்???

இன்று நாம்மால் பரவலாக அறியப்படும் பெயர்களான  மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி, ஜெகதீசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், என்.கே.கே.பி.ராஜா, கீதா ஜீவன், சுரேஷ் ராஜன், ஜெகத்ரட்சகன், ஜெ. ஜெயலலிதா, சசிகலா நடராஜன், டி.டி.வி. தினகரன், இ. மதுசூதனன், டி. ஜெயகுமார், வா. மைத்ரேயன், விசாலாட்சி நெடுஞ்செழியன், மருத்துவர் ராமதாஸ், ஜி.கே. வாசன், எம். கிருஷ்ணசாமி, ப. சிதம்பரம், டி. சுதர்சனம், சி. ஞானசேகரன், டி.யசோதா, ஜே. ஹேமச்சந்திரன், வை. சிவ புண்ணியம், என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன், விஜயகாந்த், பண்ருட்டி எஸ். ரமச்சந்திரன், சொ.மு. வசந்தன், எல். கணேசன், செஞ்சி ந. ராமச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் கார்த்திக், பிரபு, அஜித், சரத்குமார், மாதவன், சூர்யா, விக்ரம், சத்தியராஜ், பார்த்திபன், பிரசாந்த், விவேக், ஜனகராஜ், ராதாரவி, அர்ஜுன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் மணிரத்னம், கே. பாக்யராஜ், எஸ்.பி. முத்துராமன், கே.எஸ் ரவிக்குமார், எம்.எஸ். விசுவநாதன். தேவா இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வாலி, பாலகுமாரன், இந்திரா செளந்தரராஜன், பா. விஜய் போன்ற பெயர்கள் சமஸ்கிருத தொடர்புடனேயே இருக்கும்போது  அது எப்படி செத்த மொழி ஆகும்?

அரசியல், திரைப்படம், இசை இலக்கியம் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சமஸ்க்ருதப் பெயர் இல்லாத துறைகள் எதாவது உள்ளதா?தமிழகமெங்கும் விரவிக்கிடக்கும் ஊர்ப் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது. ஆனால் அவை சமஸ்க்ருத பெயர்கள் என்பதுதான் உணரப்படவில்லை. உங்கள் கவனத்திற்காக இதோ அந்தப் பட்டியல்,

கோபாலபுரமும், கபிஸ்தலமும்
திரிசூலம், மகாபலிபுரம், ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், விருத்தாசலம், சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம், ஜெயங்கொண்டான், கங்கை கொண்ட சோழபுரம், சுவாமிமலை, வேதாரண்யம், மகாதானபுரம், கோவிந்தபுரம், ஸ்ரீ ரங்கம், தர்மபுரி, மகேந்திரமங்கலம், அம்பாசமுத்திரம், ராமகிரி, கிருஷ்ணாபுரம், தென்காசி, சதுர்வேதமங்கலம், திரிபுவனம், ஸ்ரீ வைகுண்டம், ராமேஸ்வரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, வாணசமுத்திரம், தனுஷ்கோடி, அனுமந்தபுரம், வாலிகண்டபுரம், ராஜபாளையாம், ஸ்ரீ வில்லிபுத்தூர், குலசேகரபட்டினம், உத்தமதானபுரம், சிவகாசி, பாபநாசம், ஸ்ரீ நிவாசநல்லூர், பசுமலை, பட்சிதீர்த்தம், சுந்தரபாண்டியபுரம், சுவேதகிரி, .. இதுமட்டுமா? முதன்மையான தமிழ் நாளிதழ்களின் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது? தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன் ஆகியவை முதன்மையான தமிழ் நாளிதழ்கள், தினம் என்பது சமஸ்க்ருதச் சொல் தான் எனில் சமஸ்கிருதம் எப்படி செத்த மொழி ஆகும்?

நண்பர் : சமஸ்கிருதம் பிராமணர்களுடைய மொழி அல்லவா? 

இந்துவன் :  கர்நாடகத்தில் பிராமணரல்லாதோர் நடத்தும் சமஸ்க்ருதப் பள்ளிகள் 30 உள்ளன. தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு பிளஸ்2 தேர்வில்
சம்ஸ்க்ருத மொழிப் பிரிவில் செல்வி முஸிபிரா மைமூன் என்ற இஸ்லாமிய பெண் 200 க்கு 198 மதிப்பெண் பெற்றார்.

கௌரிசங்கர் என்ற தொழிலாளி சென்னைப் பல்கலைக் கழகத்தில் சம்ஸ்க்ருத முனைவர் பட்டத்திற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவர் பிராமணரல்லாத வகுப்பைச் சேர்ந்தவர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த லுப்னா மரியம் என்ற எழுத்தாளர் சம்ஸ்க்ருதம் படிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார். இவருடைய மார்க்கம் இஸ்லாம்.

’ஏசு காவியம்’ என்ற சம்ஸ்க்ருத நூலை எழுதிய பாதிரியார் ஒருவர் அதற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார். சென்ற வருடம் சென்னையில் நடந்த வால்மீகி ராமாயணம் வினாடி-வினா நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரி கல்லூரி மாணவிகள் முதல் பரிசு பெற்றனர். மின்னநூருதின் என்ற இஸ்லாமிய அறிஞர் ஆதிசங்கரரின் ஆன்ம போதத்தை தமிழ் செய்யுளாக எழுதியுள்ளார். அந்த நூலை ரமண பகவானுக்கு அவர் சமர்ப்பணம் செய்ததாக ரமணரின் வரலாற்றில் சொல்லப்படுகிறது.

உபநிடதங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி விவேகானந்தர் பிராமணரில்லை.இதிகாச தலைவர்களான ராமனும், கிருஷ்ணனும் பிராமணர்கள் இல்லை. ராமன் க்ஷத்திரியன், கிருஷ்ணன் யாதவன். வேதங்களைத் தொகுத்துக் கொடுத்த மகரிஷி வியாசர் பிராமணர் அல்லர். தெய்வீக அருள் பெற்ற கவிஞர்களான வால்மீகியும் காளிதாசனும் பிராமணர்கள் அல்ல.

இத்தாலியைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் வால்மீகி ராமாயணப் பதிப்பிற்காக 30 வருடங்கள் உழைத்திருக்கிறார். ஜெர்மன் அறிஞர்கள் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் சம்ஸ்க்ருதத்துறையில் அளித்த உழைப்பை மறக்க முடியாது. இவர்கள் யாவரும் பிராமணர்கள் அல்ல.

சீனாவின் ஷங்காய் நகரில் காளிதாசருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இருப்பவர்கள் பிராமணர்கள் அல்ல. பிராமணரல்லாத சம்ஸ்க்ருத அறிஞர் ஒருவரைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்; அவர் அம்பேத்கர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காகக் கூடிய அவையில் 10.09.1949 அன்று டாக்டர் அம்பேத்கர் தீர்மானமொன்றைக் கொண்டுவந்தார். டாக்டர் பி.வி. கேஸ்கர் மற்றும் நஸிமத்தீன் அஹ்மத் ஆகிய உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

சமஸ்க்ருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். அரசியல் காரணங்களுக்குகாக அம்பேத்கரின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
சோஷலிஸ்ட் தலைவரான ராம் மனோகர் லோகியாவும் சம்ஸ்க்ருத ஆதரவாளர்தான். இவரும் பிராமணரல்ல. ‘உலகிலேயே புராண இதிகாசச் செழிப்புமிக்க நாடு இந்தியாதான். இந்தியாவின் மகத்தான இதிகாசங்களும் புராணங்களும் நூற்றாண்டுகளாக இந்திய மக்களின் உள்ளங்களில் அறுபடாத பிடிப்பைக் கொண்டுள்ளன’ என்றார் டாக்டர் லோகியா.

மேற்கத்திய சாஸ்திரீய இசைமேதையான பீதோவன் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தின் சாராம்சத்தை தமது கைப்பட எழுதி தம் மேஜையின் மேல் வைத்திருந்தாரம். இவர் பிராமணரல்ல. உண்மை இப்படி இருக்க எப்படி சமஸ்கிருதத்தை எப்படி பிராமணர்களின் மொழி என்கிறீர்கள்?

தொடரும் : 🧘🚶🚶🚶

(Source : எழுத்தாளர் சுப்பு அவர்கள் தமிழ் இந்து என்ற  இணையதளத்திலிருந்து  சமஸ்கிருதமும் சில கேள்விகளும் என்ற கட்டுரையிலிருந்து)

இராமர் பாலம் இருந்தது உண்மையா?

மர்பாலம் இருந்தது உண்மையா?

இராமர் பாலம் இருந்ததா? வரலாறுகள் என்ன சொல்கிறது என்பது பற்றிய வரலாற்று தொகுப்புகளை காண்போம்.....!😊

இராமர் பாலம் கட்டியது பற்றிக் கம்பராமாயணத்தில் கம்பன் சேதுபந்தனப் படலம்” என்று ஒரு படலத்தில் 72 பாடல்கள் மூலம் இராமசேது பாலம் கட்டியது பற்றி விவரிக்கிறார். இதில் முக்கியமாக  இராவணன் இறந்த பின்பு அவன் சடலத்தைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டே மண்டோதரி இவ்வாறு கூறுகிறாள்...!

"என்று குரங்குகளைக் கொண்டு கடல் மேல் அணையைக் கட்டினாரோ, அன்றே எனக்குத்தெரிந்துவிட்டது, ராமன் ஒரு சாதாரண மானிடப் பிறவி அல்ல என்பது"

என்ற கம்பராமாயண வரிகள் மூலம் இராமர் பாலம் கட்டியது பற்றிய தகவல்களை அறியலாம்...!

அதோடு மகாகவி பாரதியார் 'சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்றுதான் கூறியுள்ளார்.....!

மேலே கம்பர் மற்றும் பாரதியாரின் இராமர் பாலம் பற்றிய தகவல்களை பார்த்தோம். இனிமேல் இலக்கிய ஆதாரங்கள் விடுத்து வரலாற்று ஆதாரங்களை காண்போம். 

முதலாவதாக திருவாலங்காடு செப்பேடுகளில் இராம சேது பாலம் இருந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளது....!

அதாவது இராஜேந்திர சோழன்  ஆண்டு வந்த காலத்தில் வெளியிடப்பட்ட இந்தச் செப்பெடுகளில் அவனுடைய தந்தையான இராஜராஜ சோழன் என்னும் அருள்மொழி வர்மனைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன......!

அந்தக் குறிப்புகள் இராஜராஜ சோழனின் வெற்றியைத் தெரிவிக்கின்றன. அவற்றில் ஒரு இடத்தில், இராஜராஜ சோழனின் இலங்கைப் படையெடுப்பைப் பற்றிய குறிப்பு உள்ளது. அந்தப் போரில் இலங்கை அரசன் சத்யாஸ்ரயனை தோற்கடித்தான் என்பது பற்றி கூறுகிறது....!

அந்த #செப்பேடு கூறுவதாவது👇👇👇

"ராகவர்களின் நாயகன் (ராமர்) குரங்குகளின் உதவியோடு கடலில் அணையைக் கட்டி, மிகுந்த சிரமத்துடன் இலங்கை அரசனை (இராவணனை) கூரிய அம்புகளால் கொன்றான்; ஆனால், இந்த வீரத்தளபதி (அருள்மொழி வர்மன்), கப்பல்கள் மூலம் கடலைக் கடந்து இலங்கையை எரித்தானே, ராமனைக் காட்டிலும் இவனே சிறந்தவன்"

அடுத்ததாக கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு ஒன்று விஜயநகரப் பேரரசு சேதுவிலிருந்து விஜயநகரம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறது.....!

பராந்தக சோழரின் பத்தாம் நூற்றாண்டில் வெளியிட்ட செப்பேடுகளில் அபராஜிதவர்மன் சேதுதீர்த்திற்குச் சென்றதாகக் குறிப்பிடுகிறார்......!

உலகப் புகழ் பெற்ற இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் டாக்டர் கல்யாணராமன் அவர்கள் “ஆடம்ஸ் பாலம்" தான் உண்மையில் இராமர் சேது பாலம் என்று எடுத்துக்காட்ட தொல்லியல், அறிவியல், வரைபடம் மற்றும் நூல்கள் போன்ற ஆதாரங்கள் உதவுகின்றன” என்று கூறியுள்ளார்.....!

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் 1747 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு டச்சு நிலப்படவியலாளர் தயாரித்த வரைபடங்கள் இப்பகுதியை இராமன்கோயில் என்று காட்டுகின்றன. பேச்சுத் தமிழில் இராமன்கோயில் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப் பட்டுள்ளது.....!

ஈரானிய அறிஞரும், வரலாற்றாய்வாளரும், காலவரிசையாளரும், மொழியறிஞரும், இந்தியவியலின் தந்தையுமான அபு ரெய்ஹன் அல் பிருணி (கி.பி. 973 – 1048) தனது குறிப்புகளில் ஆடம்ஸ் பாலம் என்ற பெயரால் முதன்முதலில் குறிப்பிட்டு இப்பாலத்தைப் பற்றி விவரித்துள்ளார்.....!

இபின் கோர்டாட்பே என்ற  ஒரு பெர்சிய புவியியல் வல்லுநர் (கி.பி. 846-847) ஆண்டுகளில் எழுதி வெளியிட்ட நூல் கிதாப் அல் மசாலிக் வால் மமாலிக் இந்நூலின் இரண்டாம் பதிப்பில்  “சேத் பந்தாய்” அல்லது கடல் பாலம் என்று இப்பாலத்தைக் குறிப்பிட்டுள்ளார்......!

அமெரிக்க விஞ்ஞானிகள் இராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான். இது  கட்டுக்கதையல்ல என்ற முடிவை வெளியிட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்....!

அதாவது இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகம் ஆகிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவை அறிய👇


அதோடு செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் கள ஆய்வுகள் இராமர் பாலம் மனிதர்களால் அமைக்கப்பட்ட பாலமே என்று சான்று பகர்கின்றனவாம். இம்முடிவு குறித்துச் செல்சியா ரோஸ், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர்  கூறிய கருத்தாகும்....!

ஆக வரலாற்றின் அடிப்படையிலும் அப்பகுதியில் இராமர் பாலம் இருந்தது என்ற நம்பிக்கைகளும் மக்களுடனேயே பயணிக்கின்றன என்பதை வைத்து இராமர் பாலம் இருந்தது என்பதாக முடிவு செய்யலாம்...!

கோமியம் என்றால் மாட்டின் சிறுநீரா??? சோழர் கால மருத்துவமனைகளில் மாட்டின் சிறுநீரை பயன்படுத்தி செய்யப்பட்ட மருந்து இருந்ததா???

கோமியம் என்ற பெயரில் எந்தவிதமான அடிப்படை புரிதலும் இல்லாத விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. வடநாடுகளில் கோமியத்தை குடிக்கிறார்களாம். அதனால் கோரோனா சரியாகுமா என்று இஸ்லாமிய நண்பர் ஒருவர் என்னிடம் வினவியதோடு கோமியம் குடிப்பவன் சங்கி என்றும் மூடநம்பிக்கைகளின் கூடாரம்தான் இந்துமதம் என்றும் பேசினார். நான் அவருக்கு பதில் சொல்லாமல் கடந்துவந்துவிட்டேன். ஏனெனில் கோமயத்தை எப்படி குடிக்க முடியும்?? கோமயம் என்பது மாட்டின் சாணம். கோ மூத்ரம் என்பதுதான் மாட்டின் சிறுநீர். இதற்கே வித்யாசம் தெரியாமல் உருட்டிக்கொண்டிருக்கும் அந்நபர்களிடம் எனக்கு தென்பட்டது வெறும் இந்து மத வெறுப்பே என்பதால் எதை எதை எழுதக்கூடாது என்றெண்ணியுள்ளேனோ அதெல்லாம் பொது தளத்தில் எழுதும் நிலைக்கு தள்ளப்படுகிறேன்...!

பொதுவாக பசுவின் #சிறுநீர் மற்றும் சாணத்தை 'கோமூத்ரா மற்றும் கோமியம் என்ற பெயரில் அழைத்து வருகின்றனர். அதிகாலையில், வீட்டு வாசலில் சாணம் கரைத்த நீர் தெளித்து, மெழுகித் தூய்மை செய்வார்கள். இதைக் கிருமிநாசினி என்பார்கள். இது இன்றும் எங்கள் ஊர்ப்பகுதியில் வழக்கில் உள்ளது. அதோடு பசுவின் மூத்ரத்தை  வீடுகளில் தெளிப்பது இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது. பசுஞ்சாணத்தைக் கெட்டியாகத் தட்டை வடிவில் தட்டி, காய வைத்து, வரட்டியாக்கி சமைப்பதற்கான எரிபொருளாகவும், ஹோமங்களிலும், யாகங்களில் நெருப்பை வளர்க்கப் பயன்படுத்துவது நம் முன்னோர்களின் வழக்கம்...!
பசுவின் பால், மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், நெய்யுடன் பசுவின்  சிறுநீர், சாணம் ஆகியவற்றைக் கலந்தே பஞ்சகாவ்யம்' என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இது மூளை தொடர்பான நோய்களுக்கு  மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிக முக்கியமாக இன்றும் நடைமுறையில் உள்ளது. பசுவிடம்  இருந்து உருவாகும்  ஐந்து பொருள்களால் தயாராகும் இந்த  பஞ்சகவ்யம் வாதம், பித்தம், கபம், தோல் நோய்,நீரிழிவு நோய்,சிறுநீரகப் பிரச்சினை போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. மேலும் நினைவாற்றலை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது..!


சித்தர்கள் இந்த பஞ்சகவியத்தினைக் கொண்டு #பஞ்சகாவிய_கிருதம் என்ற மருத்தினைத் தயாரித்தனர். இதையே தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் நம்மாழ்வாரும் முன்மொழிந்தார். மேலும், பசுவின் சிறுநீரைக் கொதிக்கவைத்து, அதன் நீராவியைச் சேகரித்து, அதிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வேதிப்பொருள்களைச் சுத்திகரிக்க பசுவின் சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இனிமாவாகவும்(Enema) பயன்படுத்தப்படுகிறது..!

பசுவின் சிறுநீரில் மருத்துவ குணங்கள் இருப்பதாக  அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற ஆயுர்வேத நூலில் குறிப்புகள் இருக்கின்றன.பசுவின் சிறுநீருடன் கடுக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் #கோமூத்ரா_ஹர்தகி' என்ற மருந்து வயிற்று உப்புசம், கல்லீரல் பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட இலவச மருத்துவமனைகளில் இருந்த மருந்து வகைகளில் ஒன்றாகும். கோமூத்ரம் மற்றும் கடுக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த மருந்துக்கு 1000 ஆண்டுகால வரலாறு உண்டு. இதற்கு தகுந்த கல்வெட்டு சான்றுகளே உண்டு...!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்களில்  ஒருவர் என்ன மருந்து பயன்படுத்தி தனது கேன்சர் வியாதியை குணப்படுத்தியதாக ராஜ்யசபாவில்  சொல்கிறார் என்பதை நீங்களே கேளுங்கள்..!


ஆக இந்துக்களின் நம்பிக்கைகள் அடஙகியுள்ளது என்பதற்காக வீண் விமர்ச்சனங்களை அள்ளி வீசும் மாற்று மதத்தவர்களை காணும்போது சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் என்னிடம் இந்த கேள்வியை வைத்த இஸ்லாமிய நண்பருக்கு நான் ஒன்றை கூற கடமைப்பட்டுள்ளேன். இம்மண் சார்ந்த ஆயுர்வேத மருத்துவ முறைகளை விமர்ச்சிப்பீர்களேயானால் நானும் உங்களுக்கு ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதாவது,

மாட்டு மூத்திரத்தில் மருத்துவ பயன்கள் உள்ளது என்பதை கண்டுபிடித்து அதனுடன் கடுக்காய் சேர்த்து கோமூத்ர ஹரிதஹி என்ற பெயரில் நமது மக்களுக்கு இலவசமாக கொடுத்த நமது முப்பாட்டன் இராஜராக சோழனிடம் மாட்டு மூத்ரம் வாங்கி குடித்தவர்கள் இன்று உங்கள் வம்சாவழிகளிலும் வந்திருக்கலாம் என்பதை கூறிக்கொண்டு ஏதோ ஹதீஸாம் அதில் ஒட்டக மூத்திரத்திற்கு மருத்துவ குணம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இதன் உண்மைத்தன்மையை ஆய்ந்து எனக்கு விளக்கியபின் கோமூத்ரம் குடிப்பவர்களை ஏளனம் செய்யுங்கள்...!

புஹாரி 1501ஆவது ஹதீஸ்:

 அனஸ்(ரலி) அறிவித்தார். 
உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் #சிறுநீரையும் குடிப்பதற்கு அவர்களை நபி(ஸல) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால், அவர்கள் அங்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றனர். செய்தியறிந்த நபி(ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்துவர ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும் அவர்களின் கைகளையும் காகளையும் வெட்டினார்கள்; கண் (இமை)களின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர்களைக் கருங்கற்கள் நிறைந்த ஹர்ரா எனுமிடத்தில் (பற்களால்) கற்களைப் (பற்றிப்) பிடித்துக் கொண்டிருக்கும்படிவிட்டுவிட்டார்கள்.



இறுதியாக மாட்டின் சிறுநீரை நேரடியாக பயன்படுத்தவேண்டும் என்று எந்த சித்த வைத்திய குறிப்புகளிலும் இல்லை என்பதையும், இதை இதை நேரடியாக அருந்தினாலோ, பசுஞ்சாணத்தை நேரடியாக உடம்பில் பூசிக்கொண்டாலோ கோரோனா போய்விடும் என்பதெல்லாம் எந்த அடிப்படை ஆதாரமும் அற்ற  அவரவர் நம்பிக்கை சார்ந்த விசயங்களாகும். இதைச்செய்பவனே இதைப்பற்றி கவலைப்படாதபோது இதை பெரிதுபடுத்தி உங்கள் மத வெறுப்புகளை உமிழாதீர்கள் என்பதை கூறிக்கொள்கிறேன்...!


 -பா #இந்துவன்.
   20.05.2021

திங்கள், 15 பிப்ரவரி, 2021

ஔவையாரும் பாரதியும் மதச்சார்பற்றவர்களா?

நமது பாரத பிரதமர் முத்தமிழ் மூதாட்டியான ஔவையாரையும், பாரதியாரையும் மேற்கோளிட்டு பேசியதிலிருந்து தெய்வப்புலவர் திருவள்ளுவரை மதச்சார்பற்றவர் பட்டியலில் சேர்த்ததைப்போல் இவர்களையும் சேர்க்கும் விதமான பதிவுகள் ஆங்காங்கே தென்படுகின்றன. அவரவர் அரசியல் ஆதாயங்களுக்காகவே இம்மண்ணின் ஆன்மீகத்தை மதச்சார்பின்மை என்ற பெயரில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர்....!
இதற்கான காரணம் என்னவெனில் தமிழுக்கு அடையாளம் திருவள்ளுவர், ஔவையார், பாரதியார் போன்ற கவிகள்தான் என்று நன்கறிந்த கயவர் கூட்டம் இவர்கள் சார்ந்த இறை நம்பிக்கையை சிறிது சிறிதாக உருவி தமிழன் மதச்சார்பற்றவன் என்றோ கடவுள் நம்பிக்கை அற்றவன் என்றோ நிறுவுவதே இவர்களின் தலையாய பணியாக தோன்றுகிறது...!

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா"

என்று முத்தமிழை விநாயகரிடம் கேட்ட ஔவையாரை இவர்கள் எப்படி மதச்சார்பற்றவர்களின் பட்டியலில் சேர்ப்பார்கள் என்பதிலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் ஔவையார் அருளிய திருக்குறள், நல்வழி, மூதுரை, போன்ற நூல்களை நாம் அறிந்திருக்காததன் காரணியை இவர்களின் மதச்சார்பற்ற அரசியலுடன் ஒப்பிட வேண்டும். ஏனெனில் இந்த காவியங்கள் அனைத்தும் சிவன் விநாயகர் என்று பாரதத்தின் ஆன்மீகத்தோடு தொடர்புடையதாக இருப்பதேயாகும் ...!

உடனே சில இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் நீ சொல்வது பிற்கால ஔவையார். ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற ஔவையார் என்று கூறியது சங்ககால ஔவையாரை என்று கதைப்பதையும் உணர்கிறேன். இவர்களுக்காகவே ஔவையாரால் பாடப்பட்ட சங்க இலக்கியப்பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகிறது அதாவது மரணமில்லா பெருவாழ்வு வாழ வழிவகை செய்யும் நெல்லிக்கனியை அதியமான் ஔவையாருக்கு கொடுத்த நிகழ்வை புறநானூற்றில் ஏந்திப்பாடுகையில் அதியமானை சிவபெருமானுடன் ஒப்பிட்டு பாடுகிறார்...!

"வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
10 ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே"

பொருள் : வெற்றி மிகுந்த, குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போர்க்களத்தில் வென்ற கழலணிந்த காலும், வளையணிந்த பெரிய கையையும், அழன்ற கள்ளையும் உடைய அதியர் தலைவனே! பகைவர்களைப் போரில் வெல்வதால் பெறும் செல்வத்தையும் பொன் மாலையையும் உடைய அஞ்சியே! பழைய பெரிய மலைப்பிளவின்கண் அரிய உயரத்தில் இருந்த சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியினால் விளையும் (சிறந்த) பயனைக் கூறாது தன்னுள் அடக்கிச் சாதல் நீங்க எனக்கு அளித்தாயே! நீ, பால் போன்ற பிறை நெற்றியிலே இருந்து அழகு செய்யும் தலையையும், நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய கடவுள் (சிவன்) போல் நிலைபெற்று வாழ்க!

ஔவையாருக்கே இந்த நிலையென்றால் பாரதியாரை குறித்து எழுதினால் பதிவின் நீளத்தை தடுக்க முடியாத சூழல் எழுவதால் இப்பாரத மண்ணின் ஆன்மீக தொடர்பை மதச்சார்பற்ற கவிகள் என்ற பெயரில் உங்கள் வாக்கு அரசியல்களுக்காக சிதைக்காதீர்கள். ஏற்கனவே திருவள்ளுவருக்கு கோவில் கட்டியும், "தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்" என்று ஔவையார் எடுத்துக்கூறியும் திருவள்ளுவரை மதச்சார்பற்றவர் என்ற பட்டியலில் அடைக்க அரும்பாடுபடுகிறீர்கள். அதனுடன் ஔவையாரையும், பாரதியாரையும் சேர்க்க நினைத்தால் சேதாரம் உங்களுக்கே என்பதை உணர்த்தவாவது என்னைப்போன்றவர்கள் வருவார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்...!

 -பா இந்துவன்
  14.02.2021

புதன், 10 பிப்ரவரி, 2021

சமஸ்கிருதம் தமிழுக்கு அந்நியமா

இங்கு சிலர் சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி என்றும் அது ஈரானில் இருந்து ஆரியர்களால் இங்கே புகுத்தப்பட்டது என்றும் தமிழுக்கு சமஸ்கிருதம் விரோதி மொழி என்றும் எழுதிவருகின்றனர். ஆனால் சமஸ்கிருதமானது  முற்காலத்தில் அதாவது ஆங்கிலேயர் வருகைக்கு முன்புவரை  அனைத்து தரப்பினரும் பயன்படுத்தினர் என்பதை ஏகமனதோடு ஒத்துக்கொள்ளும் சில தமிழ்மொழி ஆர்வலர்கள், பெரும்பான்மையாக இன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்  மட்டுமே அம்மொழியை பயன்படுத்துவதால் அது பிராமண மொழி என்றும் தமிழுக்கு அந்நியம்  என்றும் எழுதி வருகின்றனர்...!
ஆனால் எனக்கு என்ன சந்தேகமெனில்  ஒரு மொழியை ஒரு மதத்தைச் சார்ந்தவரோ அல்லது  ஒரு சாதியை சார்ந்தவர்களோ  அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அம்மொழியை  அச்சாதியினருக்கோ அல்லது அம்மதத்தினருக்கோ உரிமையாக்கிவிடும் என்று கூறுவது முட்டாள்தனமாக தோன்றவில்லையா??? நான் எனது  தமிழ் மொழியின் பெருமையை இன்னொரு மொழியை, அதன் மகத்துவத்தை  பழித்துப் பேசுவதன் மூலம்தான் உயர்த்தமுடியும் என்பது அறிவின்மையாகவே கருதுகிறேன். ஒருவேளை தனது தாய்மொழிக்காக இன்னொரு மொழியை அவமதிப்பவர்களால் நிச்சையமாக அம்மொழிக்கு தீங்குதான் விளையுமே அன்றி என்றும் நன்மை பயக்காது..!

ஆனால் கடவுளுக்கு தமிழ் தெரியாதா என்று நகைப்பாக நெல்லைக் கண்ணன் அவர்கள் பேசியிருந்தார். கடவுளுக்கு மொழிகள் கிடையாது. இந்த மொழிதான் எனக்கு உகந்தது மற்றவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இறைவன் எந்த இடத்திலும் யாரிடமும் கூறியதாக சரித்திர சான்றுகள் இல்லை. இதற்கு புராண, இதிகாச ஆதாரங்களும் இல்லை. இறைவனை வழிபடும் போது தமிழ் மொழியிலும் வழிபடலாம். சமஸ்கிருதத்திலும் வழிபடலாம். இதுவரை எழுத்து வடிவமே இல்லாத நரிக்குறவர் பாஷையிலும் வழிபாடு நடத்தலாம். இறைவன் அதை ஒரு போதும் ஏற்காமல் விலக்கி வைப்பது கிடையாது...!

தமிழ் மொழியில் அழகான பாடல்கள் உண்டு. அருமையான கருத்துக்கள் உண்டு. நிகரற்ற திருக்குறளும், நெஞ்சை நெகிழ்விக்கும் பாசுரங்களும் தமிழில் மட்டுமே உண்டு. அதுபோல சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இதிகாசங்களும், காவியங்களும், சிற்றிலக்கியங்களும் உண்டு என்றாலும் அவைகள் தமிழோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவுதான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்....!

தக்க அந்தணர்களை வைத்து, நிலம் தானம் கொடுத்து, பசு தானம் கொடுத்து சொர்ண தானம் கொடுத்து வேத பாடசாலை வைத்து வடமொழியை வளர்க்க தெரிந்த தமிழ் மன்னர்களுக்கு வடமொழி தமிழுக்கு அந்நியம் என்ற உண்மை தெரியாமல் சென்றதற்கான காரணத்தை தன்னை அறிவில் சிறந்தவர்களாக கருதிக்கொண்டு தமிழ் மொழி காப்பாளர்களாக பிரகடனப்படுத்துபவர்கள் கூறத்தான் வேண்டும். தமிழ் வேதம் என்று போற்றுகின்ற திருமுறைகளிலேயே வேதாகமங்கள் போற்றப்படுகின்றன. இந்த ஆகமமே சைவத்திற்கு ப்ரமாணம். இந்த ஆகமங்கள் இன்றி சைவம் முற்று பெறாது
இந்த ஆகமங்கள் வடமொழியிலேயே உள்ளன. இதை திருமந்திரம் இயற்றிய திருமூலர் தாம் #வடமொழி #ஆகமங்களை தமிழில் சிவபெருமான் அருளியதாகவே குறிப்பிடுகிறார். ஆகமங்கள் மொத்தம் இருபத்து எட்டு. இந்த இருபத்து எட்டு ஆகமங்கள் எது எதுவென்றுகூட பட்டியலிடுகிறார் திருமூலர்.

"பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே"

திருமுறைகளிலேயே ஆகமம், நால்வேதம், மந்திரம், ஆகுதி, வேள்வி என்று வடமொழி சம்பந்தமான அனைத்தும் புதைந்திருக்கும்போது தமிழிலிருந்து வடமொழியை அந்நியப்படுத்த நினைப்பது மிகவும் தவறாகும்...!

‘தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை
மண்ணின் மிசைத்திருமூலர் திருவாக்கால் தமிழ்வகுப்ப’

என்று கூறியதன் மூலம் இறைவன் வடமொழியில் அருளிச்செய்த ஆகமங்களின் பொருளை தமிழில் தரவே, திருமூலரைத் திருவருள் தந்தது என்று விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். இதை திருந்திரத்தின் வழியே பார்த்தோமேயானால்,

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

என்று குறிப்பிடுகின்றார். இங்கே சேக்கிழாரும் திருமூலரும் வடமொழி ஆகமங்களை தமிழ்ப்படுத்துவதற்காக சிவபெருமானே திருமூலரை அனுப்பியதாக தனது திருப்பதிகங்கள் மூலம் உறுதி செய்கின்றனர். இனி சமஸ்கிருதம் அந்நிய மொழியா? என்பதையும் தமிழ் இலக்கியங்களில்  இது எங்கெங்கு பயின்று வந்துள்ளது என்பதையும் சுருக்கமாக காண்போம்...!

முதலில் தொல்காப்பியத்தில் ஆரிய கலப்பு இல்லை என்றும் தொல்காப்பிய காலத்திற்கு பின்தான் ஆரியர் வருகை என்பதும் இங்கு இருக்கும் பெரும்பான்மை கூற்று. அதன் அடிப்படையில்,

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் மூலம் தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல் தமிழில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. வடசொற்களைத் தமிழில் எடுத்தெழுதுவது பற்றியும் தொல்காப்பியர் சிந்தித்துள்ளார். இதை விளக்குகையில்,

"சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்"

அதாவது தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும் என்றும், சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார். ஆக இங்கு தொல்காப்பியர் வடமொழி அந்நிய மொழி  என்றோ அது தமிழர்கள் பயன்படுத்தக்கூடாது என்றோ பதிவு செய்யவில்லை. ஆனால் அதற்கு பின் வந்த இலக்கியங்களில் எது ஏது நமது மொழி எது எது பிறநாட்டு மொழிகள் என்பதையும் நம் முன்னோர்கள் ஆங்காங்கே நமக்கு ஊட்டியே சென்றுள்ளனர் அதாவது,

12 ஆவது திருமுறையில் பரமனையே பாடுவோர் புராணத்தில்😊👇

"தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும்
வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும்
உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார்"

அதாவது இங்கு #சேக்கிழார் பெருமான் என்ன சொல்கிறார் எனில், #தென்_தமிழ், #வடமொழி, #பிறநாட்டு மொழிகள் ஆகிய மொழிகளுள் யாதொன்றில் தமக்குப் பயிற்சியிருப்பினும் அவற்றுள், ஒன்றில் இறைவனை வணங்கலாம் என்கிறார். அதாவது அவர் இங்கு தமிழையும் வடமொழியையும் நம் நாட்டு மொழிகளாக குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அடுத்தாக #திருவிளையாடல் புராணத்தில்,

"வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்
தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்
கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

என்று இரு மொழிகளின் பிறப்பிடம் எது என்பதையும் தெளிவாக உணர்த்தி விட்டனர். ஆனால் மொழிப்பேதம் பார்த்து பிரிவினை பேசுபவர்களை அதாவது வடமொழியோடு தமிழ் மொழியையும் சிறப்பிக்காதவர்களை குரங்குக்கு சமமாகவும் பாடியுள்ளனர். அதாவது இங்கே வடமொழியை உயர்வாக பேசுபவர்களுக்கே இந்த சவுக்கடியை கொடுத்துள்ளார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது இரண்டு மொழியையும் சமமாக பாவித்துள்ளார் என்பதே.

"மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்”

ஆக ஒவ்வொரு மலருக்கும், தனித்தனி வாசனை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிதனி இயல்புகள் உண்டு. அதே போன்று ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொல் அசைவிற்கு ஏற்ப தனித்தனி சக்திகள் உண்டு. இந்த சக்திகள் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கையின் ஆற்றலினால் மொழி தோன்றும் போதே கூடவே தோன்றுவது உண்டு....!

ஆனால் இங்கு பிரிவினை பேசித்திரியும்  கோஷ்டிகளை விட நம் முன்னோர்கள் ஒன்றும் #மூடர்கள் அல்ல எதையும் தெளிவாக சிந்தித்து செயல்படுகின்ற ஆற்றல் அவர்களுக்கு நம்மை விட சற்று அதிகமாகவே இருந்திருகிறது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி இருந்ததனால் தான் அவர்கள் தமிழ் மொழி காதலர்களாக இருந்தாலும் கூட சமஸ்கிருதத்தின் காவலர்களாகவும் இருந்திருக்கிறார். ஆகவே தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை அவர்கள்,

"வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி" 

என்று வாழ்த்தி இரண்டுமே நமது மொழி என்கிறார். அதோடு திரு.வி.க  வரும் இதே கருத்தை தான் முன்மெழிகிறார்.

"அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே"

என்று ஆசான் #திருமூலர் இருமொழிக்கு உண்டான ஒற்றுமையை உணர்த்தி இரண்டு நம் மொழியே என்று ஒற்றுமை பேசுகிறார்....!

"மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத் #தமிழ்ச்சொலும்
#வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே"

என்று #திருஞானசம்பநத்ர் இரு மொழிகளிலும் இறைவன் பாதத்தை பணிய வேண்டும் என்கிறார்....!

‘’வடமொழி தமிழ் மொழி எனும் இரு மொழியினும்
இலக்கணமொன்றே என்றே எண்ணுக’’

என்கிறார் ஈசான தேசிகர். ஆனால் எங்கேயுமே வடமொழியை தமிழுக்கு அந்நியம் என்றோ அது பிராமணர்களின் மொழி என்றோ குறிப்பிடவில்லை என்பதை அறிக. ஆக மீண்டும் சொல்கிறேன். இவைகளை எல்லாம் நமது முன்னோர்கள் அறியாதது அல்ல. நமது மன்னர்கள் மடையர்களும் அல்ல. எல்லாம் அறிந்தே, எல்லாம் தெளிந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்தார்கள்.  இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இரண்டு மொழியையும் இரண்டு கண்களாகவே பார்த்தார்கள்.....!

இறுதியாக ஆரிய இனவாத கோட்பாட்டை கால்டுவெல்லும் மேக்ஸ் மில்லரும் ஆரம்பிப்பதற்கு முன்புவரை சமஸ்கிருதம் கைபர் கணவாய் வழியாக வந்தது என்றோ அது தமிழுக்கு விரோதி மொழி என்றோ எந்த தமிழ் அறிஞரும் பதிவு செய்யாதபோது இந்த பதிவின் பின்னூட்டத்தில் தமிழ்மொழியின் விசுவாசிகள் என்று தன்னை கூறிக்கொள்பவர்கள் கதற வேண்டாம். அதோடு மாற்றுமத அன்பர்களும் ஒதுங்கிச்செல்லுங்கள். ஏனெனில் கிறிஸ்தவத்தில் இன்று நமது கைகளில் புழங்கும் பைபிளும், இஸ்லாமின்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குரானும் சமஸ்கிருதமின்றி முழுமையாக இயங்காது. அவ்வளவு ஏன் சமஸ்கிருதம் இன்றி அந்த இரு மதப்பெயர்களுமே முழுமை அடையாது. புரியவில்லை எனில் #கிறிஸ்தவம், #இஸ்லாம் இந்த இரு சொற்களிலுள்ள சமஸ்கிருத சொற்களை நீக்கிவிட்டு எழுதிப்பாருங்கள் புரியும்....!

 -பா இந்துவன்
   09.02.2021

சனி, 6 பிப்ரவரி, 2021

சூத்திரன் என்றால் வேசிமகனா?

நான் எனது சிறு வயது முதல் முகநூலில் உலவ ஆரம்பித்த காலம்வரை சூத்திரன் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை என்றே கூறலாம். ஆனால் முகநூலிற்கு வந்தபின் ஒரு சமயம் ஒரு திக கழகத்தை சேர்ந்த நாத்திகரிடம் விவாதிக்க நேரிட்டபோது அவர் என்னை சூத்திரன் என்றார். அப்போது தான் அவ்வார்த்தையையே கேள்விப்பட்டேன். அதற்கு முன்பு அந்த வார்த்தையை கேள்விப்பட்டதில்லை என்பதே நிதர்சனம்....!
ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை எந்தவொரு பிராமணரும் என்னை சூத்திரன் என்று அழைத்ததில்லை. இத்தனைக்கும் எனக்கு எண்ணிலடங்கா பிராமண நண்பர்கள் உண்டு. அவர்கள் வாழ்வில் அந்த வாரத்தையை பயன்படுத்துகிறார்களா? என்பதே மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஆனால் இந்த  நாத்திகர்கள் போர்வையில் இருக்கும் மாற்று மதத்தவர்கள் #சூத்திரன் சூத்திரன் என்று கத்திக் கத்தி தமிழர்கள் அனைவருக்கும் சூத்திரன் என்ற பட்டத்தை சூட்டுவதோடு அதற்கு வேசிமகன் என்றொரு பொருளையும் தருகின்றனர்....!

ஆனால் சூத்திரன் என்ற செல்லை  என்னென்ன பொருள்களில் நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று தேடினால் சூடாமணி, பிங்கலம் போன்ற நிகண்டுகளில் பல பொருள்கள் உள்ளது. உதாரணமாக,

#சூடாமணி_நிகண்டு :

"மண்மகள் புதல்வர் வாய்ந்த
வளமையர், களமர் என்றும்
உண்மைசால் சதுர்த்தர் மாறா
உழவர், மேழியர், வேளாளர்
திண்மைகொள் ஏரின் வாழ்நர்
காராளர், வினைஞர் செம்மை
நண்ணுபின் னவர் பன் னொன்று
நவின்ற சூத்திரர்தம் பேரே"

விளக்கம் : 
சூத்திரர் என்றால் உயிர்களை இயக்கும் தொழில் புரிபவன் என்பது பொருள். 
வளமையர் என்றால் நிலவளம் உடையவர் என்றும், களமர் என்றால் உழவுக் களத்தில் உழைப்போர் என்றும், வர்ணாசிரமத்தின் அடிப்படையில் சதுர்த்தர் நான்காம் வருணத்தவர் என்றும், மேழியர்  என்றால் ஏர் பிடிப்பவர் என்றும், வேளாளர் என்றால் மண்ணை வளப்படுத்தி ஆள்பவர்கள் என்றும், காராளர்  என்றால் மழையால் பயன் விளைப்போர் என்றும், வினைஞர் என்றால் தொழில் புரிவோர் என்றும்,
பின்னவர்  என்றால் செம்மையான வாழ்வு பொருந்திய பின்னவர் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

ஆனால் இதே பொருள்களைத் தரும் மற்ற நிகண்டுகளிலோ எந்தவொரு தமிழ் இலக்கியங்களிலோ சூத்திரன் என்ற சொல்லாது வேசி மகன் என்றோ வைப்பாட்டி மகன் என்ற பொருளிலோ பயன்படுத்தப்படவில்லை. மாறாக சூத்ர என்ற சொல்லாடலானது வர்ணம் தவிர்த்து பல பொருள்களில் வழங்கப்படடிருந்தாலும் பெரியபுராணம் பாடிய #சேக்கிழார் பெருமான் அதில் வரும் #வாயிலார் புராணத்தில் "தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்" என்றும், இளையான்குடி மாற நாயனார் புராணத்தில், "வாய்மையில் நீடு சூத்திர நற்குலம்" என்றும் இரு நாயன்மார்களின் பழமையையும் வாய்மையையும் பெருமையையும் உடைய நல்ல #சூத்திரர் குலம் என்றும் மிகப் பெருமையாகவே பாடி உள்ளார்.

அதோடு சூத்திரன் என்ற சொல் இராஜராஜ சோழனுக்கு நிகராக உயர் பொருளில் வழங்கப்பட்டது தொடர்பாக சோழர் கால செப்பேடுகளில் உள்ளது. ஆனால் அங்கும் வேசிமகன் என்றோ வைப்பாட்டி மகன் என்றோ இல்லாமல் உயர்ந்த பொருளில் சூத்திரன் பெருமைப் படுத்தப்படுகிறார்.
 அதாவது கடைநிலை ஊழியனான சூத்திரனும், பேரரசர் இராஜராஜனும், ஒரே நிலையில் அடையாளப்படுத்தபட்டுள்ளது.

இப்பகுதியானது  திருவாலங்காடுச் செப்பேட்டின் சமஸ்கிருத ஸ்லோகங்கள் உள்ள பகுதியில் 62 மற்றும் 135 ம் ஸ்லோகங்கள் நமக்குத்தேவையான சூத்திரன் பற்றிய தகவல்களை தருகிறது. அதாவது நில தான வேலைகளின் முக்கிய நிகழ்வான பிடிசூழ்தல் என்னும் நிலத்தை அளக்கும் அளவின்போது இந்த பிடி சூழ்தல் வேலையை செய்பவர் பெயர் சூத்திரன் அரனெறி என்று குறிக்கப்படடுள்ளது.
இந்த சூத்திரன் #ஸ்ரீமான் அரனெறி என அழைக்கப்படுகிறார். அதாவது உயர்திரு என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். இவர் மங்கலவாயில் என்னும் கிராமத்தைச்சேர்ந்த மாயானன் என்பவரின் மகன் என்றும் அச்செப்பேடு சான்று பகர்கிறது...!

இச்செப்பேட்டின் அடுத்த வரிகளில்,

தந்தை வழி, தாய்வழி, என்று இருவழிகளிலும் தூய்மையானவன் இந்த சூத்திரன் உயர்திரு அரனெறி அவர்கள் என்றும், மாயனின் மகனும், மங்களவாயில் என்னும் கிராமத்தின் முழு நிலவு போன்றவனும் தந்தை வழி தாய் வழி என்று இரு மரபிலும் தூயவனுமான சூத்திரன் சீமான் அரனெறி என்பவர் பிடிசூழ்தல் வேலையை செய்தார் என்று சூத்திரனை சிறப்பித்து கூறுகிறது அந்த செப்பேடு...!

#செப்பேட்டு_வரிகள் : 

"மாயானஸ்ய ஸூத்ர ஸ்ரீமான் அறனெறி"

மற்றும் இதேச் செப்பேட்டில் சுந்தரச்சோழரின் மகனாக இராஜராஜன் அவதரித்ததை நிகழ்வை விளக்கும்போது 
இராஜராஜன் தந்தை வழி தாய் வழி இருமரபுகளிலும் தூயவனாக பிறந்தான் என்கிறது. ஒரு அரசனை சிறப்பித்துக் கூறப்படும் அதே  சொற்களால் 
ஒரு ஊழியனான சூத்திரனும் குறிப்பிடப்படுகிறார். அதாவது இராஜராஜனுக்கு என்ன சிறப்பு கொடுக்கப்படடதோ, அவனது தாய் தந்தையர்கள் எவ்வாறு  சிறப்பிக்கப்பட்டார்களோ அதே சிறப்பை ஸ்ரீமான் அரனெறியான சூத்திரனும் அவரது தாய்  தந்தையும் பெறுகின்றனர்.....!

(கல்வெட்டுத் தகவல் : தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன்)

ஆனால் இப்படி தமிழ் இலக்கியங்களிலும் செப்பேடுகளிலும் சிறப்பித்து கூறப்படும் சூத்திரன் என்ற சொல்லுக்கு பொருளாக வேசிமகன் என்பதற்கு ஆதாரமாக  ராமசாமி நாயக்கர் வகையறாக்கள் கூறுவதாவது  மனுசா ஸ்திரம், அத்தியாயம்-8ன் 415 ஆவது ஸ்லோகமாகும்,

"த்வஜாஹ்ருʼதோ பக்ததா³ஸோ க்ருʼஹஜ: க்ரீதத³த்த்ரிமௌ ।
பைத்ரிகோ தண்ட³தாஸஶ்ச ஸப்தைதே தாஸயோநய"

இதை   ராமசாமி நாயக்கரின பார்வையில் வேசி மகன் யார் என்பதை மனுவை அடிப்படையாக கொண்டு  பார்க்கலாம்👇

இவர்கள் மேற்கூறிய ஸ்லோகத்திற்கு விளக்கமாக சொல்வதாவது சூத்திரன் என்பவன் 7 வகைப்படுவானாம். அதாவது,

1.யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.

2.யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்.

3.பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.

4.விபச்சாரி மகன்.

5.விலைக்கு வாங்கப்பட்டவன்.

6.விலைக்கு கொடுக்கப்பட்டவன்.

7.தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.

ஆதாரம் : ( https://youtu.be/vmfwQ94sZCs )

இதற்கு ராமசாமி நாயக்கர் கூறிய ஏழு வகையினருக்கான விளக்கத்தை பார்ப்போம்.

1.யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.

(அதாவது உங்களில் யார் யாரெல்லாம் போரில் புறங்காட்டி ஓடியிருக்கிறீர்கள்?? ஒருவேளை ஓடி இருந்தால் நீங்கள் சூத்திரன் என்று பெரியார் சொல்ல வருகிறார். ஒருவேளை நீங்கள் போரில் புறமுதுகிட்டு ஓடவில்லை எனில் ராம்சாமி நாயக்கரின் சூத்திரன் என்ற லிஸ்ட்க்குள் வரமாட்டீர்கள்.)

2.யுத்தத்தில் கைதியாக பிக்கப்பட்டவன்.

(உங்களில் யாராவது போரில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளீர்களா?? ஒருவேளை இருந்தால் நீங்கள் சூத்திரன் என்று ராம்சாமி நாயக்கர் சொல்கிறார். )

3.பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.

(ஊழியம் என்பதே கூலிக்கான வேலையை கூலி இன்றி செய்வது. அதையும் பிராமணன் என ஒரு தனிமனிதன் மேல் உள்ள  பக்தியினால் செய்பவர் உங்களில் யாராச்சும் இருக்கீங்களா?? இதில் இருந்தால் நீங்களும் சூத்திரன் என்று  பெரியார் சொல்றார்.)

4.விபச்சாரி மகன்🤣

(யாராச்சும் இருக்கீங்களா?? இருந்தால் நீங்களும் சூத்திரன்தானாம்.🤒)

5.விலைக்கு வாங்கப்பட்டவன்.

(யாராச்சும் இருக்கீங்களா? விலை போனவர்கள்?? இருந்தால் நீங்களும் சூத்திரன் தானாம்.)

6.விலைக்கு கொடுக்கப்பட்டவன்.

(யாராச்சும் இருக்கீங்களா??  அதாவது உங்களை யாராவது விலைக்கு விற்றிருந்தால் நீங்களும் சூத்திரன் தானாம். )

7.தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.

(ஊழியம் என்பது கூலிக்கான வேலையை கூலியே வாங்காம பண்ணுறது அதையும் தலைமுறை தலைமுறையாக பண்ணும் யாராச்சும் இருக்கீங்களா?? இருந்தால் நீங்களும் சூத்திரன்தானாம்‌.)

மேற்கூறிய பட்டியலில்  நீங்கள் இல்லையென்றால் நீங்கள் அந்த பட்டியலில்   இருப்பதாக கூறி உங்களை சூத்திரன் என்று  சொல்பவர்மேல் (ராம்சாமி நாயக்கர்) உங்களுக்கு கோபம் வரவேண்டுமா?..?? அல்லது அந்த அட்டவணை மேல் உங்களுக்கு கோபம் வர வேண்டுமா என்று சிந்தியுங்கள் மக்களே...!

(அதோடு பிராமணர்களை தவிர அனைவரும் சூத்திரர்கள்தான் என்று கூறிய ராம்சாமி நாயக்கரின் பார்வையில் அவரே ஒரு சூத்திரன்தான் என்பது வேறு கதை அதை தனியாக தேவைப்பட்டால் இன்னொருநாள் பார்க்கலாம் 🤨)

இனி ராம்சாமி நாயக்கர் கூறிய அந்த மனுவின் ஸ்லோகத்திற்கான உண்மையான பொருள் என்ன என்பதை பார்க்கலாம்,

#மனுசாஸ்திரம், #அத்தியாயம்-8, #ஸ்லோகம்-415 :

"த்வஜாஹ்ருʼதோ பக்ததா³ஸோ க்ருʼஹஜ: க்ரீதத³த்த்ரிமௌ ।
பைத்ரிகோ தண்ட³தாஸஶ்ச ஸப்தைதே தாஸயோநய"

ஏழு வகையான #சேவை செய்பவர்கள் உள்ளனர்.

(குறிப்பு :  இச்சுலோகத்தில் #சூத்திரன் என்ற சொல்லாடல் இல்லை. ஆக இது சூத்திரனுக்கு உண்டான குணங்கள் என்பது பெரியாரிய இயக்கங்கள் எடுத்து கட்டிய கட்டுக்கதை. இல்லை இல்லை அது சூத்திரனைத்தான் குறிக்கிறது என்போர் தாராளமாக அவர் கூறிய பட்டியலில் ஏறி உக்காந்துக்கோங்க😏)

1.ஒரு பதாகையின் கீழ் கைப்பற்றப்பட்டவர். அல்லது ஒரு தரத்தின் கீழ் சிறைபிடிக்கப்பட்டவர்.

2.சேவை செய்ய விருப்பமுடையவன்.

3. தனது மனைவியை தவிர இன்னொரு பெண்ணுடனான தவறான உறவின் மூலம் பிறப்பவர்கள் ( வைப்பாட்டி மகன்)

4.விலைக்கு வாங்கப்பட்டவர்.

5.விலைக்கு கொடுக்கப்பட்டவர்.

6.பரம்பரை பரம்பரையாக ஊழியம் செய்பவன்.

7.தண்டனையால் அடிமை அல்லது தண்டனையின் மூலம் அடிமைப் படுத்தப்பட்டவன்.

மேலே, கொடுத்த வசனங்களில், சூத்திரன் என்ற வார்த்தை இல்லை. மேலும், விபச்சாரி மகன் என்று சூத்திரனை அர்த்தம் கூறுகிற எந்த வார்த்தையும் இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க பொய் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். அதோடு இன்று நமது கைகளில் புழங்கும் மனுஸ்மிருதியைப்பற்றி  காந்தியடிகள் போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டாலும், மனு ஸ்மிருதியைப் பற்றி கம்பனும், தமிழ்க் கல்வெட்டுகளும் பேசியிருந்தாலும் 1794 ஆம் ஆண்டிற்கு முன்பு இதை ஏற்றிருக்கலாம். ஏனெனில்  இதை வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிறகு அல்லது பல இடைச்செருகல்களின் காரணமாக சூத்திரர்கள் பற்றிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால் எனக்கு மனுஸ்மிருதியில் முரண்பட்ட கருத்துகள் உண்டு. இன்று நமது கைகளில் புழங்கும் மனுவில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வரலாற்றுச்சான்றுகள் இல்லை. ஆனால் மனுவின் அடிப்படையில் மனுஸ்மிருதியானது  க்ருதயுகத்துக்கானது என்பதால் இதை தூக்கி பிடிக்க அவசிமில்லை என்பது எனது கருத்தாகும்...!

"க்ருதே து மானவா: ப்ரோக்தாஸ் த்ரேதாயாம் யாக்ஞவல்க்யஜா:
த்வாபரே சங்கலிகிதா: கலௌ பராசரா: ஸ்ம்ருதா"

ஆக மனுவின் அடிப்படையில் இந்துக்களை விமர்ச்சிப்பது தேவை இல்லாத ஆணியே. ஆனால் வர்ணாசிரம கோட்பாடுகள் சங்ககாலத்திலேயே இங்கு இருந்தது. இதை மறுப்போரும் உண்டு. ஆனால் தொல்காப்பியத்திலேயே வர்ணாசிரம கோட்பாடு உண்டு அங்கே பிராமணர், சூத்திரர் என்ற சொல்லாடலுக்கு பதிலாக அந்தணர், வேளாளர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சங்க காலத்திலேயே வர்ணாசிரம கோட்பாடுகள் இருந்தது என்பதற்கு சான்றாக,

#புறநானூறு :

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"

#விளக்கம் : தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் “மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.

உடனே அதென்ன கீழ்க்குலம் மேல்குலம் என்று யோசிக்காதீர்கள் இதுபற்றி தெளிவாக திருவள்ளுவர் உரைக்கிறார். உதாரணமாக,

#திருக்குறள் :

"மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு"

விளக்கம் : கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

ஆக பிறப்பின் அடிப்படையில் சிறப்புகள் இங்கு தீர்மானிக்கப்படுவதில்லை. புறநானூறானது கல்வியில் சிறந்தவனிடம் உயர் குடியில் பிறந்த ஒருவன் கல்வி கற்றுக்கொள்ள வருவான் என்கிறது. அதே சமயம் திருக்குறளானது கல்வியறிவில்லாத ஒருவன் உயர் குடியில் பிறந்தாலும் அவன் கீழ்க்குலத்தை சேர்ந்தவனாகவே கருதப்படுகிறான் என்கிறது. ஆக வடமொழி நூல்களாகட்டும் புராணங்களிலுள்ள இடைச்செருகல்களாகட்டும் இன்றைய சூழலில் பிறப்பின் அடிப்படையில் சிறப்பை கூறினால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதை வலியுறுத்துவோர் இருந்தால் இந்த பதிவை கடந்து செல்க. அது அவரவர் புரிதலை பொறுத்தது....!

ஒருகாலத்தில் மேல்குடி கீழ்குடி என்ற பிரிவுகள் இருந்ததாக வள்ளுவரே கூறினாலும் அன்று அந்தந்த குடிகளுக்கு உண்டான தர்மத்தை போற்றி பாதுகாத்து வந்தனர். ஆனால் இன்று யாரும் அந்தந்த குடிகளுக்கு உண்டான தர்மத்தை பின்பற்றாத சமயத்தில் குடிப்பிறப்பின் சிறப்பு பற்றி பேசுவது ஏற்புடையது அன்று...!

இப்படியாக தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலமாக  ஒன்றை மட்டும் அறிந்துகொண்டேன். அதாவது சூத்திரன் என்ற பெயருக்கு இத்தகு மேம்பட்ட பொருள்கள் இருந்தபோதும் இக்காலத்திலேயே இத்தனை தவறான விமர்ச்சனங்களை வைக்கின்றனர் எனில் சைவ சமண மோதல்கள் இருந்த காலங்களில் எந்த அளவுக்கு விமர்ச்சனங்கள் இருந்திருக்கும்.? இதன் அடிப்படையிலேயே இன்று நமது கைகளில் புழங்கும் இந்து தர்ம நூல்களில் பலவற்றுள் இடைச்செருகல்களுடனும் கட்டுக்கதைகளுடனும் திருத்தி எழுதப்பட்டுள்ளன என்பதற்கு ராம்சாமி இயக்கங்களே ஆகச்சிறந்த உதாரணம்.....!

இப்படி தமிழ் இலக்கியங்களில் உயர்ந்த பொருளில் நன்மதிப்பிற்குரிய இடங்களில் இராஜராஜ சோழனுக்கே நிகரான மதிப்புடைய இடங்களில் பயன்படுத்தப்படுள்ள சூத்திரன் என்ற சொல்லை வேசி மகன் என்றோ அல்லது வேறு எந்த தவறான விளக்கஙகளுடன் வரலாறுகளில் பதியப்பட்டிருந்தாலும் அவற்றில் எமக்கு உடன்பாடில்லை. நல்லவற்றை ஏற்றுக்கொள்ள கற்றுத்தந்த இந்த சமூகம் தேவையற்றவற்றை புறந்தள்ளவும் கற்றுத்தந்துள்ளது. ஆக இதுபோன்ற கயவர்களிடம் சற்று ஒதுங்கியே இருங்கள் மக்களே...!

 -பா இந்துவன் 
  04.02.2021

தமிழர்களின் பழமையான இலக்கியங்கள் கடவுளைப்பற்றி அதிகம் பேசவில்லையா???

BBC தமிழ் இணையதளத்தில் ஒரு செய்தி வாசிக்க நேரிட்டது. அதாவது தமிழர்களின் பழமையான இலக்கியங்கள் கடவுளைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவை என்று தலைப்பிட்டு ஆரம்பித்த அந்த கட்டுரையை படித்தேன். அந்த கட்டுரையில் தமிழர்களின் பண்டைய இலக்கியங்கள் மதம் சாராதவை என்று கூறுவதை கூட ஏற்கலாம். ஆனால் கடவுளைப்பற்றி அதிகம் பேசாதவை என்பதை ஏற்க முடியாது. பெயரளவில் இலக்கியங்களின் பெயர்களை அறிந்தவர்களாலேயே இச்செய்தியை கடந்துசெல்ல இயலாது. அவ்வகையில் ஓரளவேனும் இலக்கியங்களை புரட்டியவன் என்ற நம்பிக்கையில்  BBC தமிழில் வந்த இந்த கடடுரையை இரண்டாவது முறையாக மறுக்கிறேன். ஏற்கனவே தமிழர்களின் பழமையான இலக்கியங்களில் இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பது போன்ற கூற்றுகள் இல்லை என்று கூறிய ஒரு கட்டுரைக்கு மறுப்பு எழுதியிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது....!
https://m.facebook.com/story.php?story_fbid=1545540462283391&id=100004823560851

இதுபோன்ற கூற்றுகள் தமிழர்களை அவர்களின் பண்பாட்டு கலாச்சாரங்களிலிருந்து பிரித்து அடையாளமற்றவர்களாக தனித்து காட்ட வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்படுகின்றன என்பது எனது அபிப்பிராயம். இதற்கெல்லாம் மறுப்பு எழுதவேண்டி வரும் என்று முகநூலுக்கு வந்த ஆரம்பகாலத்தில் அறிந்திருக்கவில்லை. எனினும் இதற்கான மறுப்பும் காலத்தின் கட்டாயம் என்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில் இங்கு இந்துக்களின் நம்பிக்கைகள் மட்டுமே மொழியின் பெயரால் பிரிக்கப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற பேதங்களை கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ காண்பதில்லை என்பதிலிருந்து நடுநிலை இந்துக்கள் அவர்களிடமிருந்து ஒற்றுமையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது எண்ணம்....!

இதற்கு மறுப்பு எழுதினால் பதிவின் நீளத்தை குறைப்பது மிகவும் கடினம்
 இருந்தாலும் முயற்சிக்கிறேன். முதலாவதாக இன்று பெரும்பான்மையாக அனைவராலும் ஏற்கப்படும் மிகப் பழமையான இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்தே ஆரம்பிக்கலாம் என்றுள்ளேன். அதன் அடிப்படையில் கடவுள் பற்றிய தகவல்கள் தொல்காப்பியத்திலேயே அதிகம் உண்டு. தொல்காப்பியத்தில் உள்ள கடவுள் பற்றிய தகவல்களை பார்ப்பதற்கு முன்பு  நாம் கவனிக்கவேண்டியது என்னவெனில் தொல்காப்பியம் என்பது ஒரு இலக்கணநூல். அதாவது ஒரு இலக்கண நூலிலேயே கடவுளைப் பற்றிய தகவல்கள் வருகிறது எனில் தமிழர்கள் இறைசார்ந்த பண்பாட்டு கலாச்சாரங்களுக்கு எத்தனை முக்தியத்துவம் கொடுத்திருப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தொல்காப்பியத்தில் திணை தெய்வங்களாக #திருமால், #முருகன், #இந்திரன், #வருணன், #கொற்றவை போன்ற தெய்வங்களை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக,

"மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே"

#விளக்கம் : மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும், சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும், வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும், இந்நிலங்கள் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லப்படும் என்கிறார்...!

"மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
#கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”

மேற்கூறிய தொல்காப்பிய நூற்பாவின் மூலம் பாலை நிலத்திற்குரிய கடவுளாக கொற்றவை இருந்துள்ளாள் என்பதை அறிவதோடு இந்த திணை தெய்வங்களை தாண்டி தத்துவப்பொருளாகவும் இறைவன் இருந்துள்ளார் என்பதை கீழ்ககாணும் வரிகள் மூலம் உறுதி செய்யலாம்,

"காமப்பகுதி கடவுளும், வரையார்,
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்"

இப்படியாக ஐந்து திணைகளை வகுத்து ஒவ்வொரு திணைக்கும் தனித்தனி தெய்வங்களை வகுக்கும் தொல்காப்பியர் திணை தெய்வங்களை தவிர்த்து தத்துவப்பொருளாகவும் இறைவனை சுட்டுவதை காண்க. இது தவிர்த்து கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வரும் மூன்று சிறப்பியல்புகள் பற்றி கூறுகையில்,

"கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

இவ்வாறாக தொல்காப்பியமானது ஐந்து திணை தெய்வஙகளையும் தத்துவப்பொருளாக இறைவனையும் கடவுள் வாழ்த்தோடு சேரந்து வரும் சிறப்பியல்புகள் பற்றி கூறுவதோடு நில்லாமல் பால்வரை தெய்வம் என்று #அர்த்தநாரீஸ்வரரான சிவபெருமானையும் குறிப்பிடுவதாக கீழ்க்காணும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய தெய்வச்சிலையார் குறிப்பிடுகிறார்....!

"காலம் உலகம் உயிரே உடம்பே
#பால்வரை_தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயிரைந் தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉங் கிளவியெல்லாம்
பால்பரிந் திசையா உயர்திணை மேன"
(சொல்லதிகாரம்-58)

இங்கு #பால்வரை தெய்வம் என்பது வினைகளை வகுக்கும் முழுமுதற் கடவுள் அதாவது  ஆணாகவும்  பெணாகவும் திருநங்கை எனும் வடிவிலும் அருள் பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரரே பரம்பொருள் என்று தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களில் முக்கியமானவரான தெய்வச்சிலையார் குறிப்பிடுகிறார். தெய்வச்சிலையாரின் ஒத்த கருத்தையே  #நச்சினார்க்கினியரும் #சேனாவரையரும் சொல்கின்றனர். அதாவது வினைகளை வகுக்கும் பரம்பொருளைத் தான் தொல்காப்பியர் பால்வரை தெய்வம் என்று சொல்வதாக உரை எழுதியுள்ளனர்.....! 

இவ்வாறாக தமிழர்களின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே இத்தனை கடவுள் பற்றிய குறிப்புகள் எனும்போது தமிழர்களின் பழமையான இலக்கியங்கள் கடவுள் பற்றி பெரிதாக பேசவால்லை என்ற BBC ன் அந்த கட்டுரையை எப்படி ஏற்க முடியும்???? இப்படியாக திருக்குறள், அகநானூறு, புறநானூறு என்று ஒவ்வொரு பழமையான இலக்கியங்களை தொகுத்து அதில் வரும் இறைவன் பற்றிய தொன்மங்களை எழுதினால் BBC க்கு மறுப்பு என்று 100 பாகங்கள் எழுதினாலும் முடியாத அளவுக்கு தமிழர்களின் வாழ்வியலில் இறை நம்பிக்கை முக்கியமானது. அடுத்ததாக திருக்குறளை எடுத்துக்கொண்டால் உலகக்காரணனான இறைவனில் துவங்கி, திருமால், இந்திரன், எமன், லட்சுமி, அலட்சுமி, வேதம், வேள்வி, தேவர்களுக்கு பூஜை செய்தலில் துவங்கி இறைவன் பற்றிய தகவல்கள் ஏராளமாக உள்ளது. உதாரணமாக,

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

#பொருள் : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

"பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்"

#மணக்குடவர்_உரை: பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர்கள் இறைவனுடைய திருவடியை பற்றுபவர்களே ஆனால் இறைவனது திருவடியைச் சேராதவர்களால் பிறவியாகிய பெருங்கடலை கடக்க முடியாது. இவை தவிர்த்து தனித்தனி இறைவனாக குறிப்பிடவேண்டுமானால்,

#சிவன் : முதல் பத்து குறள்களும் திருமாலுக்கும், சிவனுக்கும் பொதுமையான உவமைகளே ஆகும். அதிலும் ஆதிபகவன் என்பது சிவனையே குறிக்கும். இருந்தாலும் தனித்து கூறவேண்டுமாயின்,

"பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க 
நாகரிகம் வேண்டு பவர்"

🔴இதில் எங்கே சிவன் வருகிறார் என்று கேட்பவரகள் ஓரமாக செல்லவும், முதல் குறளில் வரும் ஆதிபகவன் முதற்கொண்டு எண்குணத்தான் முதலான நஞ்சுண்டவர் வரை சிவனுக்கு உவமையாக எழுதப்பட்டதுதான் என்பது எனது புரிதல்

#அகரமுதலோன்:

https://m.facebook.com/story.php?story_fbid=1576410872529683&id=100004823560851

ஔவையார் நேரடியாக சிவனை குறிக்கும் திருக்குறள்:

https://m.facebook.com/story.php?story_fbid=1650617255109044&id=100004823560851

திருவள்ளுவர் திருநாள் எது?:

https://m.facebook.com/story.php?story_fbid=1659282530909183&id=100004823560851 🔴

#திருக்குறளில்_திருமால் :

https://m.facebook.com/story.php?story_fbid=1543431112494326&id=100004823560851

"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு"

இதில் வரும் அடி அளந்தான் என்பது திருமாலையே குறிக்கும் என்பதை பரணர் திருக்குறளுக்கான புகழ்மாலையான திருவள்ளுவமாலையில் எழுதிய பாடல்கள் மூலம் அறியலாம்.

"மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான்-வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவஎல் லாம்அளந்தார் ஓர்ந்து"

அதாவது திருமாலே குறளைக்கொண்டு  இரண்டடியால் உலகை அளந்தான். என தமிழ்ப்புலவன் திருவள்ளுவரை திருமால் என்கிறார். இது தவிர்த்து,

"தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்?
தாமரைக் கண்ணான் உலகு"

#திருக்குறளில்_லட்சுமி :

"அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்"

"மடியுளான் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்"

"அறனறிந்து வெஃகா  அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே  திரு"

(விளக்கங்கள் வேண்டுமாயின் பின்னூட்டத்தில் வினவுங்கள்)

#திருக்குறளில்_இந்திரன் :

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி"

#திருக்குறளில்_எமன் :

"கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்"

"கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து"

"கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று"

"கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை"

#பிரம்மா : (உலகியற்றியான்)

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்"

#வானோர்கள் : (தேவர்கள்)

"சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு"

இப்படியாக திருக்குறளிலும், தொல்காப்பியத்திலும் உள்ள கடவுள் பற்றிய பகுதிகளை தனித்து குறிப்பிட்டு செல்லுமிடத்தெல்லாம் இவர்களெல்லாம் தமிழ் கடவுள்கள், ஆங்கில கடவுள்கள் என்றொரு கூட்டம் வந்தாலும்,
இவர்களை கடந்துசென்று நமது பதிவை முடிப்பதற்காக அடுத்த இலக்கியமாக கண்ணில் படுவது புறநானூறு. ஆக புறநானூற்றில் கடவுள் பறறிய தகவல்கள் உண்டா என்பதையும், யார் யாரை கடவுளாக குறிப்பிடுகிறது என்பதையும் பார்ப்போம்....!

#புறநானூறு : வழக்கம்போல புறநானூற்றிலும் சிவன், திருமால் முருகன் இந்திரன் போன்ற தெய்வங்களின் உவமைகளே மிகுதியாக உள்ளன என்பதை கூறிக்கொண்டு தொடர்வோம்🧘🚶🚶🚶

#சிவபெருமான்:

"கண்ணி கார்நறுங் கொன்றை, காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ஏறே, சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று, அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே"

பாரதம் பாடிய பெருந்தேவனார் போற்றும் இந்த தெய்வமானது எம்பெருமான் சிவனே ஆகும். இதற்கெல்லாம் தனித்தனியாக விளக்கம் எழுதினால் பதிவு நீண்டுகொண்டேச் செல்லும் என்பதால் தவிர்க்கிறேன்.

#திருமாலும்_பலராமனும் :

"பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமி யோனும்என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ?"

#முருகன்_சிவன்_முதலான_நாற்பெரும்_தெய்வங்கள் :

"ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, 
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்"

#வஜ்ரமுடையானான_இந்திரன் :

"திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசும் கறங்க
ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே"

#இராமன் :

"கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு"

இப்படியாக தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு முதலான மூன்று நூல்களில் ஆங்காங்கே ஒவ்வொரு பாடல்வீதம் பார்த்ததற்கே பதிவு இவ்வளவு நீளமாகிறது. இது தவிர்த்து நற்றிணை, குறுந்தொகை,
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு,பட்டினப்பாலை , மலைபடுகடாம் போன்ற எட்டுத்தொகை நூல்களிலும்,

நாலடியார், நான்மணிக்கடிகை,
இன்னா நாற்பது, இனியவை நாற்பது,
களவழி நாற்பது, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது,
ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களிலும் உள்ள கடவுளர் பற்றிய தகவல்களை தொகுத்தால் வாழ்நாள் முழுவதும் பாகம் பாகமாக எழுதிக்கொண்டே இருக்கும் நிலை உருவாகும் என்பதால்  இம்மூன்று நூல்களுடன் பதிவை நிறைவு செய்கிறேன்.....!

கூடுதல் தகவலாக ஒருசில இலக்கியங்கள் தனித்தனி தெய்வங்களை சிறப்பிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. ஒரு தெய்வத்திற்காக ஒரு தனித்தமிழ் இலக்கியம் படக்க வேண்டுமெனில் தமிழர்கள் தெய்வங்களுக்கு எத்தகு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை அறியலாம். உதாரணமாக,

முருகன் : திருமுருகாற்றுப்படை, திருப்புகழ்.
திருமால், முருகன் : பரிபாடல்.
சிவன் : திருமுறைகள்.
திருமால் : நாலாயிர திவ்ய பிரபந்தங்கள்.

இறுதியாக இல்லை இல்லை இதெல்லாம் தமிழ் கடவுள்கள் ஆரிய பார்ப்பான் இந்து கடவுள் ஆக்கிவிட்டான் என்று கதறாதீர்கள். ஏனெனில் ஒரு இஸ்லாமியர் அவர்களின் நம்பிக்கைக்கு உட்பட்ட கடவுளை அரேபிய கடவுள், தமிழ் கடவுள், ஹிந்தி கடவுள் என்று பிரிக்காமல் உலகத்திற்கான, அனைத்து மொழிக்குமான ஒரே இறைவன் #அல்லாஹ் என்று ஒருமித்த குரலுடன் இஸ்லாம் என்ற பெயரில் அழைப்பதோடு அதை கொண்டாடுகிறார்கள். அதுபோல கிறிஸ்தவர்களும் அவர்களின் நமபிக்கைக்கு உட்பட்ட தெய்வங்களை ஹிப்ரு கடவுள், லத்தீன் கடவுள் , ஆங்கில கடவுள், தமிழ் கடவுள் என்று பிரிக்காமல் உலக மக்களுக்கான ஒரே இறைவன் #கர்த்தரே என்று கிறிஸ்தவம் என்ற பெயரில் ஒருமிக்கிறார்கள். அதோடு உலகின் பெரும்பகுதி மக்களை தனதுவசம் கொண்ட இந்த இரு மதங்கள் தன்னை மொழி ரீதியாக பிரிக்காதபோது நாம் மட்டும் ஏன் இத்தகு பிரிவினைகளை காண வேண்டும் என்று சிந்தியுங்கள். இத்தகு  இக்கூற்றுகளை உங்களால் ஏற்க முடியவில்லை எனில் நீங்கள் தமிழ் கடவுள் என்று தாராளமாக அழையுங்கள்.  ஆனால் முப்பாட்டன் பெரும்பாட்டன், ஆதிப்பாட்டன் என்று கூறி தமிழன் கடவுள் நம்பிக்கை அற்றவன் என்ற முட்டாள்த்தனமான வாதங்களை விதைக்காதீர்கள். அதே சமயம் இவை இந்து தெய்வங்கள் என்றோ, இந்தியாவின் தெய்வங்கள் என்றோ, உலகத்திற்கான தெய்வங்கள் என்றோ எழுதும் என்னை தடையாதீர்கள். நீங்கள் தடுத்தாலும் எனது எழுத்துக்கள் நிற்கப்போவதில்லை. ஏனெனில் நான் ஆதரவுகளை விட விமர்ச்சனங்களை எதிர்கொண்டே இந்நிலைக்கு வந்துள்ளேன்....!

ஓம் நமசிவாய 🔥

 -பா இந்துவன்,
  06.02.2021.

புதன், 3 பிப்ரவரி, 2021

மாணிக்கவாசகர் மெக்காவில் உள்ள காபா கல்லை பற்றி பாடினாரா?

அனைவருக்கும் வணக்கம்🙂🙏...!

நேரம் போகல னு மூஞ்சி புக்கை SCROLL பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போது ஒரு பதிவைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அது வேறு ஒன்றும் இல்லை மக்களே...!👇

நமது மாணிக்கவாசக பெருமான்  மெக்காவில் இருக்கும் காபாக் கல்லை பற்றி எழுதியபோது அது "சொர்க்க வானில் இருந்து ஒழிப்பிழம்போடு வந்து இறங்கியதாம்" என்று அக்கல்லைப்பற்றி திருவாசகத்தில் எழுதி இருப்பதாக  பாடல் போட்டு விளக்கமும் எழுதி உள்ளார்....!

விலாசம்:😁👇

https://m.facebook.com/story.php?story_fbid=1827893427326397&id=100003172710722

இதற்கு மறுப்புப்பதிவே இது...!👇👇👇

ஆனால் இப்பாடல் வரும் பகுதி எது என்று பார்த்தால் திருவாசகத்தின் சிவபுராணப் பகுதியில் கீர்த்தித் திரு அகவலில் வருகிறது...!

"தானே ஆகிய தயாபரன் எம் இறை
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி
அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன்"

#விளக்கம்:

எல்லாருடைய குணங்களும் தன்னிடத்து அடக்கித்தானொருவனே முதல்வனாய் நிற்கிற அருளினால் மேம்பட்ட எம் தலைவன் சந்திரதீபம் என்னும் தலத்தில் சாத்திரப் பொருளை உபதேசிப் பவனாய், ஆகாயத்தினின்றும் இறங்கி வந்து அழகு வாய்ந்த திருக் கழிப்பாலை என்னும் தலத்தில் அழகிய திருக்கோலத்தோடு பொருந்தி யிருந்தருளியும்; மறைமொழிகள் வெளிப்படுவதற்கு இடமான பெரிய மலையாகிய, மகேந்திர மலையையுடையவன் முடிவற்ற பெருமையையும் அருளையும் உடைய பெரியோனே என்று எம்பெருமானே என்று பாடுகிறார்....!

இதில் பாலை என்ற ஒரு வார்த்தையை தூக்கிக்கொண்டு பாலை நிலமாக அரேபியாவை சுட்டுகிறார் அண்ணன். அண்ணே அது எம்பெருமான் எழுந்தருளிய #திருக்கழிப்பாலை எனும் இடமாகும்👇👇👇

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

https://temple.dinamalar.com/New.php?id=849

மேலே கொடுத்த விலாசத்தில் சென்றால் மாணிக்கவாசகபெருமான் பாடிய திருக்கழிப்பாலை எனும் இடத்தின் வரலாற்றை அறியலாம்....!

இப்படிதான் கல்கி அவதாரம் தான் நபி அவர்கள் என்று ஒரு பெரிய ரைட்டப்பை தூக்கிக்கொண்டு சுற்றினார்கள். இங்கு என்னடான்னா திருவாசகத்திலும் கைவைக்க ஆரம்பித்து விட்டனர்...!😥🚶🚶🚶

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...