சனி, 6 பிப்ரவரி, 2021

சூத்திரன் என்றால் வேசிமகனா?

நான் எனது சிறு வயது முதல் முகநூலில் உலவ ஆரம்பித்த காலம்வரை சூத்திரன் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை என்றே கூறலாம். ஆனால் முகநூலிற்கு வந்தபின் ஒரு சமயம் ஒரு திக கழகத்தை சேர்ந்த நாத்திகரிடம் விவாதிக்க நேரிட்டபோது அவர் என்னை சூத்திரன் என்றார். அப்போது தான் அவ்வார்த்தையையே கேள்விப்பட்டேன். அதற்கு முன்பு அந்த வார்த்தையை கேள்விப்பட்டதில்லை என்பதே நிதர்சனம்....!
ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை எந்தவொரு பிராமணரும் என்னை சூத்திரன் என்று அழைத்ததில்லை. இத்தனைக்கும் எனக்கு எண்ணிலடங்கா பிராமண நண்பர்கள் உண்டு. அவர்கள் வாழ்வில் அந்த வாரத்தையை பயன்படுத்துகிறார்களா? என்பதே மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஆனால் இந்த  நாத்திகர்கள் போர்வையில் இருக்கும் மாற்று மதத்தவர்கள் #சூத்திரன் சூத்திரன் என்று கத்திக் கத்தி தமிழர்கள் அனைவருக்கும் சூத்திரன் என்ற பட்டத்தை சூட்டுவதோடு அதற்கு வேசிமகன் என்றொரு பொருளையும் தருகின்றனர்....!

ஆனால் சூத்திரன் என்ற செல்லை  என்னென்ன பொருள்களில் நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று தேடினால் சூடாமணி, பிங்கலம் போன்ற நிகண்டுகளில் பல பொருள்கள் உள்ளது. உதாரணமாக,

#சூடாமணி_நிகண்டு :

"மண்மகள் புதல்வர் வாய்ந்த
வளமையர், களமர் என்றும்
உண்மைசால் சதுர்த்தர் மாறா
உழவர், மேழியர், வேளாளர்
திண்மைகொள் ஏரின் வாழ்நர்
காராளர், வினைஞர் செம்மை
நண்ணுபின் னவர் பன் னொன்று
நவின்ற சூத்திரர்தம் பேரே"

விளக்கம் : 
சூத்திரர் என்றால் உயிர்களை இயக்கும் தொழில் புரிபவன் என்பது பொருள். 
வளமையர் என்றால் நிலவளம் உடையவர் என்றும், களமர் என்றால் உழவுக் களத்தில் உழைப்போர் என்றும், வர்ணாசிரமத்தின் அடிப்படையில் சதுர்த்தர் நான்காம் வருணத்தவர் என்றும், மேழியர்  என்றால் ஏர் பிடிப்பவர் என்றும், வேளாளர் என்றால் மண்ணை வளப்படுத்தி ஆள்பவர்கள் என்றும், காராளர்  என்றால் மழையால் பயன் விளைப்போர் என்றும், வினைஞர் என்றால் தொழில் புரிவோர் என்றும்,
பின்னவர்  என்றால் செம்மையான வாழ்வு பொருந்திய பின்னவர் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

ஆனால் இதே பொருள்களைத் தரும் மற்ற நிகண்டுகளிலோ எந்தவொரு தமிழ் இலக்கியங்களிலோ சூத்திரன் என்ற சொல்லாது வேசி மகன் என்றோ வைப்பாட்டி மகன் என்ற பொருளிலோ பயன்படுத்தப்படவில்லை. மாறாக சூத்ர என்ற சொல்லாடலானது வர்ணம் தவிர்த்து பல பொருள்களில் வழங்கப்படடிருந்தாலும் பெரியபுராணம் பாடிய #சேக்கிழார் பெருமான் அதில் வரும் #வாயிலார் புராணத்தில் "தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்" என்றும், இளையான்குடி மாற நாயனார் புராணத்தில், "வாய்மையில் நீடு சூத்திர நற்குலம்" என்றும் இரு நாயன்மார்களின் பழமையையும் வாய்மையையும் பெருமையையும் உடைய நல்ல #சூத்திரர் குலம் என்றும் மிகப் பெருமையாகவே பாடி உள்ளார்.

அதோடு சூத்திரன் என்ற சொல் இராஜராஜ சோழனுக்கு நிகராக உயர் பொருளில் வழங்கப்பட்டது தொடர்பாக சோழர் கால செப்பேடுகளில் உள்ளது. ஆனால் அங்கும் வேசிமகன் என்றோ வைப்பாட்டி மகன் என்றோ இல்லாமல் உயர்ந்த பொருளில் சூத்திரன் பெருமைப் படுத்தப்படுகிறார்.
 அதாவது கடைநிலை ஊழியனான சூத்திரனும், பேரரசர் இராஜராஜனும், ஒரே நிலையில் அடையாளப்படுத்தபட்டுள்ளது.

இப்பகுதியானது  திருவாலங்காடுச் செப்பேட்டின் சமஸ்கிருத ஸ்லோகங்கள் உள்ள பகுதியில் 62 மற்றும் 135 ம் ஸ்லோகங்கள் நமக்குத்தேவையான சூத்திரன் பற்றிய தகவல்களை தருகிறது. அதாவது நில தான வேலைகளின் முக்கிய நிகழ்வான பிடிசூழ்தல் என்னும் நிலத்தை அளக்கும் அளவின்போது இந்த பிடி சூழ்தல் வேலையை செய்பவர் பெயர் சூத்திரன் அரனெறி என்று குறிக்கப்படடுள்ளது.
இந்த சூத்திரன் #ஸ்ரீமான் அரனெறி என அழைக்கப்படுகிறார். அதாவது உயர்திரு என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். இவர் மங்கலவாயில் என்னும் கிராமத்தைச்சேர்ந்த மாயானன் என்பவரின் மகன் என்றும் அச்செப்பேடு சான்று பகர்கிறது...!

இச்செப்பேட்டின் அடுத்த வரிகளில்,

தந்தை வழி, தாய்வழி, என்று இருவழிகளிலும் தூய்மையானவன் இந்த சூத்திரன் உயர்திரு அரனெறி அவர்கள் என்றும், மாயனின் மகனும், மங்களவாயில் என்னும் கிராமத்தின் முழு நிலவு போன்றவனும் தந்தை வழி தாய் வழி என்று இரு மரபிலும் தூயவனுமான சூத்திரன் சீமான் அரனெறி என்பவர் பிடிசூழ்தல் வேலையை செய்தார் என்று சூத்திரனை சிறப்பித்து கூறுகிறது அந்த செப்பேடு...!

#செப்பேட்டு_வரிகள் : 

"மாயானஸ்ய ஸூத்ர ஸ்ரீமான் அறனெறி"

மற்றும் இதேச் செப்பேட்டில் சுந்தரச்சோழரின் மகனாக இராஜராஜன் அவதரித்ததை நிகழ்வை விளக்கும்போது 
இராஜராஜன் தந்தை வழி தாய் வழி இருமரபுகளிலும் தூயவனாக பிறந்தான் என்கிறது. ஒரு அரசனை சிறப்பித்துக் கூறப்படும் அதே  சொற்களால் 
ஒரு ஊழியனான சூத்திரனும் குறிப்பிடப்படுகிறார். அதாவது இராஜராஜனுக்கு என்ன சிறப்பு கொடுக்கப்படடதோ, அவனது தாய் தந்தையர்கள் எவ்வாறு  சிறப்பிக்கப்பட்டார்களோ அதே சிறப்பை ஸ்ரீமான் அரனெறியான சூத்திரனும் அவரது தாய்  தந்தையும் பெறுகின்றனர்.....!

(கல்வெட்டுத் தகவல் : தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன்)

ஆனால் இப்படி தமிழ் இலக்கியங்களிலும் செப்பேடுகளிலும் சிறப்பித்து கூறப்படும் சூத்திரன் என்ற சொல்லுக்கு பொருளாக வேசிமகன் என்பதற்கு ஆதாரமாக  ராமசாமி நாயக்கர் வகையறாக்கள் கூறுவதாவது  மனுசா ஸ்திரம், அத்தியாயம்-8ன் 415 ஆவது ஸ்லோகமாகும்,

"த்வஜாஹ்ருʼதோ பக்ததா³ஸோ க்ருʼஹஜ: க்ரீதத³த்த்ரிமௌ ।
பைத்ரிகோ தண்ட³தாஸஶ்ச ஸப்தைதே தாஸயோநய"

இதை   ராமசாமி நாயக்கரின பார்வையில் வேசி மகன் யார் என்பதை மனுவை அடிப்படையாக கொண்டு  பார்க்கலாம்👇

இவர்கள் மேற்கூறிய ஸ்லோகத்திற்கு விளக்கமாக சொல்வதாவது சூத்திரன் என்பவன் 7 வகைப்படுவானாம். அதாவது,

1.யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.

2.யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்.

3.பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.

4.விபச்சாரி மகன்.

5.விலைக்கு வாங்கப்பட்டவன்.

6.விலைக்கு கொடுக்கப்பட்டவன்.

7.தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.

ஆதாரம் : ( https://youtu.be/vmfwQ94sZCs )

இதற்கு ராமசாமி நாயக்கர் கூறிய ஏழு வகையினருக்கான விளக்கத்தை பார்ப்போம்.

1.யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.

(அதாவது உங்களில் யார் யாரெல்லாம் போரில் புறங்காட்டி ஓடியிருக்கிறீர்கள்?? ஒருவேளை ஓடி இருந்தால் நீங்கள் சூத்திரன் என்று பெரியார் சொல்ல வருகிறார். ஒருவேளை நீங்கள் போரில் புறமுதுகிட்டு ஓடவில்லை எனில் ராம்சாமி நாயக்கரின் சூத்திரன் என்ற லிஸ்ட்க்குள் வரமாட்டீர்கள்.)

2.யுத்தத்தில் கைதியாக பிக்கப்பட்டவன்.

(உங்களில் யாராவது போரில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளீர்களா?? ஒருவேளை இருந்தால் நீங்கள் சூத்திரன் என்று ராம்சாமி நாயக்கர் சொல்கிறார். )

3.பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.

(ஊழியம் என்பதே கூலிக்கான வேலையை கூலி இன்றி செய்வது. அதையும் பிராமணன் என ஒரு தனிமனிதன் மேல் உள்ள  பக்தியினால் செய்பவர் உங்களில் யாராச்சும் இருக்கீங்களா?? இதில் இருந்தால் நீங்களும் சூத்திரன் என்று  பெரியார் சொல்றார்.)

4.விபச்சாரி மகன்🤣

(யாராச்சும் இருக்கீங்களா?? இருந்தால் நீங்களும் சூத்திரன்தானாம்.🤒)

5.விலைக்கு வாங்கப்பட்டவன்.

(யாராச்சும் இருக்கீங்களா? விலை போனவர்கள்?? இருந்தால் நீங்களும் சூத்திரன் தானாம்.)

6.விலைக்கு கொடுக்கப்பட்டவன்.

(யாராச்சும் இருக்கீங்களா??  அதாவது உங்களை யாராவது விலைக்கு விற்றிருந்தால் நீங்களும் சூத்திரன் தானாம். )

7.தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.

(ஊழியம் என்பது கூலிக்கான வேலையை கூலியே வாங்காம பண்ணுறது அதையும் தலைமுறை தலைமுறையாக பண்ணும் யாராச்சும் இருக்கீங்களா?? இருந்தால் நீங்களும் சூத்திரன்தானாம்‌.)

மேற்கூறிய பட்டியலில்  நீங்கள் இல்லையென்றால் நீங்கள் அந்த பட்டியலில்   இருப்பதாக கூறி உங்களை சூத்திரன் என்று  சொல்பவர்மேல் (ராம்சாமி நாயக்கர்) உங்களுக்கு கோபம் வரவேண்டுமா?..?? அல்லது அந்த அட்டவணை மேல் உங்களுக்கு கோபம் வர வேண்டுமா என்று சிந்தியுங்கள் மக்களே...!

(அதோடு பிராமணர்களை தவிர அனைவரும் சூத்திரர்கள்தான் என்று கூறிய ராம்சாமி நாயக்கரின் பார்வையில் அவரே ஒரு சூத்திரன்தான் என்பது வேறு கதை அதை தனியாக தேவைப்பட்டால் இன்னொருநாள் பார்க்கலாம் 🤨)

இனி ராம்சாமி நாயக்கர் கூறிய அந்த மனுவின் ஸ்லோகத்திற்கான உண்மையான பொருள் என்ன என்பதை பார்க்கலாம்,

#மனுசாஸ்திரம், #அத்தியாயம்-8, #ஸ்லோகம்-415 :

"த்வஜாஹ்ருʼதோ பக்ததா³ஸோ க்ருʼஹஜ: க்ரீதத³த்த்ரிமௌ ।
பைத்ரிகோ தண்ட³தாஸஶ்ச ஸப்தைதே தாஸயோநய"

ஏழு வகையான #சேவை செய்பவர்கள் உள்ளனர்.

(குறிப்பு :  இச்சுலோகத்தில் #சூத்திரன் என்ற சொல்லாடல் இல்லை. ஆக இது சூத்திரனுக்கு உண்டான குணங்கள் என்பது பெரியாரிய இயக்கங்கள் எடுத்து கட்டிய கட்டுக்கதை. இல்லை இல்லை அது சூத்திரனைத்தான் குறிக்கிறது என்போர் தாராளமாக அவர் கூறிய பட்டியலில் ஏறி உக்காந்துக்கோங்க😏)

1.ஒரு பதாகையின் கீழ் கைப்பற்றப்பட்டவர். அல்லது ஒரு தரத்தின் கீழ் சிறைபிடிக்கப்பட்டவர்.

2.சேவை செய்ய விருப்பமுடையவன்.

3. தனது மனைவியை தவிர இன்னொரு பெண்ணுடனான தவறான உறவின் மூலம் பிறப்பவர்கள் ( வைப்பாட்டி மகன்)

4.விலைக்கு வாங்கப்பட்டவர்.

5.விலைக்கு கொடுக்கப்பட்டவர்.

6.பரம்பரை பரம்பரையாக ஊழியம் செய்பவன்.

7.தண்டனையால் அடிமை அல்லது தண்டனையின் மூலம் அடிமைப் படுத்தப்பட்டவன்.

மேலே, கொடுத்த வசனங்களில், சூத்திரன் என்ற வார்த்தை இல்லை. மேலும், விபச்சாரி மகன் என்று சூத்திரனை அர்த்தம் கூறுகிற எந்த வார்த்தையும் இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க பொய் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். அதோடு இன்று நமது கைகளில் புழங்கும் மனுஸ்மிருதியைப்பற்றி  காந்தியடிகள் போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டாலும், மனு ஸ்மிருதியைப் பற்றி கம்பனும், தமிழ்க் கல்வெட்டுகளும் பேசியிருந்தாலும் 1794 ஆம் ஆண்டிற்கு முன்பு இதை ஏற்றிருக்கலாம். ஏனெனில்  இதை வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிறகு அல்லது பல இடைச்செருகல்களின் காரணமாக சூத்திரர்கள் பற்றிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால் எனக்கு மனுஸ்மிருதியில் முரண்பட்ட கருத்துகள் உண்டு. இன்று நமது கைகளில் புழங்கும் மனுவில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வரலாற்றுச்சான்றுகள் இல்லை. ஆனால் மனுவின் அடிப்படையில் மனுஸ்மிருதியானது  க்ருதயுகத்துக்கானது என்பதால் இதை தூக்கி பிடிக்க அவசிமில்லை என்பது எனது கருத்தாகும்...!

"க்ருதே து மானவா: ப்ரோக்தாஸ் த்ரேதாயாம் யாக்ஞவல்க்யஜா:
த்வாபரே சங்கலிகிதா: கலௌ பராசரா: ஸ்ம்ருதா"

ஆக மனுவின் அடிப்படையில் இந்துக்களை விமர்ச்சிப்பது தேவை இல்லாத ஆணியே. ஆனால் வர்ணாசிரம கோட்பாடுகள் சங்ககாலத்திலேயே இங்கு இருந்தது. இதை மறுப்போரும் உண்டு. ஆனால் தொல்காப்பியத்திலேயே வர்ணாசிரம கோட்பாடு உண்டு அங்கே பிராமணர், சூத்திரர் என்ற சொல்லாடலுக்கு பதிலாக அந்தணர், வேளாளர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சங்க காலத்திலேயே வர்ணாசிரம கோட்பாடுகள் இருந்தது என்பதற்கு சான்றாக,

#புறநானூறு :

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"

#விளக்கம் : தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் “மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.

உடனே அதென்ன கீழ்க்குலம் மேல்குலம் என்று யோசிக்காதீர்கள் இதுபற்றி தெளிவாக திருவள்ளுவர் உரைக்கிறார். உதாரணமாக,

#திருக்குறள் :

"மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு"

விளக்கம் : கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

ஆக பிறப்பின் அடிப்படையில் சிறப்புகள் இங்கு தீர்மானிக்கப்படுவதில்லை. புறநானூறானது கல்வியில் சிறந்தவனிடம் உயர் குடியில் பிறந்த ஒருவன் கல்வி கற்றுக்கொள்ள வருவான் என்கிறது. அதே சமயம் திருக்குறளானது கல்வியறிவில்லாத ஒருவன் உயர் குடியில் பிறந்தாலும் அவன் கீழ்க்குலத்தை சேர்ந்தவனாகவே கருதப்படுகிறான் என்கிறது. ஆக வடமொழி நூல்களாகட்டும் புராணங்களிலுள்ள இடைச்செருகல்களாகட்டும் இன்றைய சூழலில் பிறப்பின் அடிப்படையில் சிறப்பை கூறினால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதை வலியுறுத்துவோர் இருந்தால் இந்த பதிவை கடந்து செல்க. அது அவரவர் புரிதலை பொறுத்தது....!

ஒருகாலத்தில் மேல்குடி கீழ்குடி என்ற பிரிவுகள் இருந்ததாக வள்ளுவரே கூறினாலும் அன்று அந்தந்த குடிகளுக்கு உண்டான தர்மத்தை போற்றி பாதுகாத்து வந்தனர். ஆனால் இன்று யாரும் அந்தந்த குடிகளுக்கு உண்டான தர்மத்தை பின்பற்றாத சமயத்தில் குடிப்பிறப்பின் சிறப்பு பற்றி பேசுவது ஏற்புடையது அன்று...!

இப்படியாக தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலமாக  ஒன்றை மட்டும் அறிந்துகொண்டேன். அதாவது சூத்திரன் என்ற பெயருக்கு இத்தகு மேம்பட்ட பொருள்கள் இருந்தபோதும் இக்காலத்திலேயே இத்தனை தவறான விமர்ச்சனங்களை வைக்கின்றனர் எனில் சைவ சமண மோதல்கள் இருந்த காலங்களில் எந்த அளவுக்கு விமர்ச்சனங்கள் இருந்திருக்கும்.? இதன் அடிப்படையிலேயே இன்று நமது கைகளில் புழங்கும் இந்து தர்ம நூல்களில் பலவற்றுள் இடைச்செருகல்களுடனும் கட்டுக்கதைகளுடனும் திருத்தி எழுதப்பட்டுள்ளன என்பதற்கு ராம்சாமி இயக்கங்களே ஆகச்சிறந்த உதாரணம்.....!

இப்படி தமிழ் இலக்கியங்களில் உயர்ந்த பொருளில் நன்மதிப்பிற்குரிய இடங்களில் இராஜராஜ சோழனுக்கே நிகரான மதிப்புடைய இடங்களில் பயன்படுத்தப்படுள்ள சூத்திரன் என்ற சொல்லை வேசி மகன் என்றோ அல்லது வேறு எந்த தவறான விளக்கஙகளுடன் வரலாறுகளில் பதியப்பட்டிருந்தாலும் அவற்றில் எமக்கு உடன்பாடில்லை. நல்லவற்றை ஏற்றுக்கொள்ள கற்றுத்தந்த இந்த சமூகம் தேவையற்றவற்றை புறந்தள்ளவும் கற்றுத்தந்துள்ளது. ஆக இதுபோன்ற கயவர்களிடம் சற்று ஒதுங்கியே இருங்கள் மக்களே...!

 -பா இந்துவன் 
  04.02.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...