சனி, 12 செப்டம்பர், 2020

ஆரியர்கள் என்பவர்கள் பிராமணர்களா?

ஆரியர்கள் என்றதும் கைபர் கணவாய் வழியாக வந்த பிராமணர்கள் தான் என்று நிறுவுவதில் சிலர் அயராது பாடுபடுகின்றனர். ஆனால் அவர்கள் உண்மைகளை தேடி அறிய முற்படுவதில்லை போலும். அந்த வகையில் எனது தேடுதலின் அடிப்படையில் ஆரியர்கள் என்பவர்கள் யார் என்று எழுத முயற்சிக்கிறேன்....!

முதலாவதாக நமக்கு ஆரியர்கள் பற்றி  தகவல்கள்  கிடைைப்பது சங்க இலக்கியங்கள். ஆக சங்க இலக்கியங்களை ஆராய்ந்தால் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் என்று "ஆரிய" என்ற சொல்லாடல் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இலக்கியங்களில் ஒரு இடத்தில் கூட பிராமணர்கள் தான் ஆரியர்கள் என்று எங்கும் குறிப்பிடவில்லை....!

இதில் குறிப்பாக சிலப்பதிகாரத்தில் மட்டும் 15 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ய என்ற செல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரு இடத்தில் கூட பிராமணர்களை குறிக்க அச்சொல்லாடல் பயன்படுத்தப்படவில்லையே அன்றி வடநாட்டு அரசர்களை குறிக்கவும் அதாவது ஆரிய அரசர், ஆரிய மன்னர், ஆரிய பேடி, ஆரிய நாடு என்ற பொருள்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது....!

உதாரணமாக,

"வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர்
மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை-தன்னில்"

"ஆரிய மன்னன் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு ஒருநீ யாகிய செருவெங் கோலம்"

"ஆரிய மன்னன் அழகுற அமைத்த தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண்"

"பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும்"
இதுபோல் அகநானூற்றிலும் யானையை பழக்குவோர், ஆரியப்பொருநன் மற்றும் ஆரிய அரசர்கள், இமயமலைப் பகுதியில் வாழ்வோர் என்ற பொருளில் ஆரிய என்ற சொல்லாடல் பயன்படுத்தப் பட்டிருக்குமே அன்றி  பிராமணர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை...!

உதாரணமாக,

"தாரும் தானையும் பற்றி, ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல"

"ஆரியர் படையின் உடைக, என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே"

"யானே பாணன்
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்"

"ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
தொன்று முதிர் வடவரை"

"அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
மாரி புறந்தர நந்தி,ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை பல் பூங் கானத்து அல்கி"
இது தவிர்த்து நற்றிணை மற்றும் பதிற்றுப்பத்து போன்ற இலக்கியங்களிலும் இதே பொருளில் தான் பயன்படுத்தப்பட்டிருக்குமே அன்றி பிராமணர்கள் தான் ஆரியர்கள் என்ற பொருளில் எங்கும் பயன்படுத்தப் படவில்லை...!

அதோடு மிக முக்கியமாக மணிமேகலையில் புத்தரை ஆரியர் என்று குறிப்பிடுவார் சீத்தலை சாத்தனார்...!

"ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு
'பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்"

அதோடு புத்தர் தம் சமயத்திற்கே  ஆர்ய தர்மம்’என்று தான் பெயரிட்டார். ஆக இங்கு ஆரிய என்ற சொல்லானது மதிப்பிற்குரிய உயர் பொருளில் பயன்படுத்தப்படுகிறதே அன்றி பிராமணர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை...!

அடுத்ததாக 6 மற்றும் 7ஆம் நூற்றாண்டில் துவங்கிய பக்தி இலக்கியங்களிலும் ஆரியர் என்ற சொல்லாடல் மதிப்பிற்குரிய உயர் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே  அன்றி பிராமணர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை...!

உதாரணமாக,

"பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே"

"அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்
வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றாயிரம் இயல்பின தாகி"

இங்கு சிவனை ஆரியன் என்று உயர்ந்த மதிப்பிற்குரிய பொருளில் சுட்டுவதோடு இக்காலங்களில் முருகன் இராவணன் மற்றும் இராமன் போன்றோர்களையும்  உயர்ந்த மதிப்பிற்குரிய பொருளில் குறிக்க ஆரிய என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டதே அன்றி பிராமணர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை...!

கிருஷ்ணா நதிக்கு தென்பகுதியில், கொண்டமுடி, மாயடவோலு, ஹீரஹடகல்லி, கந்தனேருவில்  நந்திவர்மனால் தானம் கொடுக்க பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் “ஆர்ய” என்ற சொல் மதிப்பிக்குறியதாக பெயர்களுக்குக் கடைசியில் உபயோகிக்கப் பட்டது.....!

மேலும் ஆர்ய, ஆரிய என்ற சொல் பெயருக்கு முன்பாக, ஜைன-புத்த துறவியர், குருக்கள், மற்றும்  ஆசிரியர்களுக்கு உபயோகிக்கப் பட்டுள்ளதை இந்தியா முழுவதிலும் உள்ள கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன.....!

குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், மணிமேகலையே புத்தனை “ஆரியன்” (25:6) என்று கூறியதை மேலே பார்த்தோம்...! 

இதையே பகவத்கீதை அத்யாயம் 2 : 2 ல் சொல்கிறது...!

"ஸ்ரீ-பகவான் உவாச
குதஸ்த்வா கஷ்மலம் இதம்
விஷமே ஸமுபஸ்திதம்
அனார்ய-ஜுஷ்டம் அஸ்வர்க்யம்
அகீர்த்தி-கரம் அர்ஜுன"

அதாவது👇👇👇

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதருமை அர்ஜுனனே, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு (ஆர்யனுக்கு) இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தை கொடுக்கின்றன.

அதாவது இந்த வசனத்தில்  ஆரியன் என்றால் என்ன அர்த்தம் என்று பகவான் கூறுகிறார் ஆரியர்கள் என்றால் வாழ்க்கையினுடைய நோக்கங்களை புரிந்து கொண்டவர்கள் என்று அர்த்தம். அனாரியன் என்றால் வாழ்க்கையின் நோக்கங்களை தெரிந்தும் அதை செயல்படுத்தாதவனே என்பது பொருளாகிறது...!

வரலாறுகள் இப்படி இருக்க அதாவது ஆரியர் என்ற சொல்லாடல் இலக்கியங்களின் அடிப்படையில் 

👉வடநாட்டரசர்
👉இமயமலை பகுதியில் வாழ்ந்த மக்கள்.
👉பேரிசை மரபின் ஆரியர்
👉இமய மாகத் தென்னங்குமரியொடு ஆயிடை அரசர்
👉தமிழகத்திற்கு வடதிசையிலுள்ள மக்கள் மற்றும் அரசர்.
👉 யானையை பழக்குபவர்கள்.
👉 உயர்ந்த மதிப்பிற்குரிய பொருள்.

இப்படி பயன்படுத்தப்பட்ட  ஆரிய என்ற சொல்லானது ஒரு தனித்த இனமாக, கைபர் கணவாய் வழியாக வந்த பிராமணர்களாக திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (கி.பி. 1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரியாரால் சித்தரிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த திராவிட கட்சிகள் இதை உண்மை என்று கூறி திணித்து வந்து இன்று அது ஒரு பெரிய அரசியல் பின்னணியாக மாறி நிற்கிறது....!

ஆனால் இராஜ இராஜ சோழன் காலத்து கல்வெட்டு ஒன்று ஆரியரும் பிராமணரும் வேறு வேறு என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது....!
இந்த தரவுகளின் அடிப்படையில் ஆரியரும் பிராமணரும் வேறு வேறு என்பதையும், பிராமணர்கள் கைபர் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் இல்லை என்ற கூற்றையும் திண்ணமாக நிறுவலாம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...