திங்கள், 15 பிப்ரவரி, 2021

ஔவையாரும் பாரதியும் மதச்சார்பற்றவர்களா?

நமது பாரத பிரதமர் முத்தமிழ் மூதாட்டியான ஔவையாரையும், பாரதியாரையும் மேற்கோளிட்டு பேசியதிலிருந்து தெய்வப்புலவர் திருவள்ளுவரை மதச்சார்பற்றவர் பட்டியலில் சேர்த்ததைப்போல் இவர்களையும் சேர்க்கும் விதமான பதிவுகள் ஆங்காங்கே தென்படுகின்றன. அவரவர் அரசியல் ஆதாயங்களுக்காகவே இம்மண்ணின் ஆன்மீகத்தை மதச்சார்பின்மை என்ற பெயரில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர்....!
இதற்கான காரணம் என்னவெனில் தமிழுக்கு அடையாளம் திருவள்ளுவர், ஔவையார், பாரதியார் போன்ற கவிகள்தான் என்று நன்கறிந்த கயவர் கூட்டம் இவர்கள் சார்ந்த இறை நம்பிக்கையை சிறிது சிறிதாக உருவி தமிழன் மதச்சார்பற்றவன் என்றோ கடவுள் நம்பிக்கை அற்றவன் என்றோ நிறுவுவதே இவர்களின் தலையாய பணியாக தோன்றுகிறது...!

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா"

என்று முத்தமிழை விநாயகரிடம் கேட்ட ஔவையாரை இவர்கள் எப்படி மதச்சார்பற்றவர்களின் பட்டியலில் சேர்ப்பார்கள் என்பதிலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் ஔவையார் அருளிய திருக்குறள், நல்வழி, மூதுரை, போன்ற நூல்களை நாம் அறிந்திருக்காததன் காரணியை இவர்களின் மதச்சார்பற்ற அரசியலுடன் ஒப்பிட வேண்டும். ஏனெனில் இந்த காவியங்கள் அனைத்தும் சிவன் விநாயகர் என்று பாரதத்தின் ஆன்மீகத்தோடு தொடர்புடையதாக இருப்பதேயாகும் ...!

உடனே சில இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் நீ சொல்வது பிற்கால ஔவையார். ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற ஔவையார் என்று கூறியது சங்ககால ஔவையாரை என்று கதைப்பதையும் உணர்கிறேன். இவர்களுக்காகவே ஔவையாரால் பாடப்பட்ட சங்க இலக்கியப்பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகிறது அதாவது மரணமில்லா பெருவாழ்வு வாழ வழிவகை செய்யும் நெல்லிக்கனியை அதியமான் ஔவையாருக்கு கொடுத்த நிகழ்வை புறநானூற்றில் ஏந்திப்பாடுகையில் அதியமானை சிவபெருமானுடன் ஒப்பிட்டு பாடுகிறார்...!

"வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
10 ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே"

பொருள் : வெற்றி மிகுந்த, குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போர்க்களத்தில் வென்ற கழலணிந்த காலும், வளையணிந்த பெரிய கையையும், அழன்ற கள்ளையும் உடைய அதியர் தலைவனே! பகைவர்களைப் போரில் வெல்வதால் பெறும் செல்வத்தையும் பொன் மாலையையும் உடைய அஞ்சியே! பழைய பெரிய மலைப்பிளவின்கண் அரிய உயரத்தில் இருந்த சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியினால் விளையும் (சிறந்த) பயனைக் கூறாது தன்னுள் அடக்கிச் சாதல் நீங்க எனக்கு அளித்தாயே! நீ, பால் போன்ற பிறை நெற்றியிலே இருந்து அழகு செய்யும் தலையையும், நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய கடவுள் (சிவன்) போல் நிலைபெற்று வாழ்க!

ஔவையாருக்கே இந்த நிலையென்றால் பாரதியாரை குறித்து எழுதினால் பதிவின் நீளத்தை தடுக்க முடியாத சூழல் எழுவதால் இப்பாரத மண்ணின் ஆன்மீக தொடர்பை மதச்சார்பற்ற கவிகள் என்ற பெயரில் உங்கள் வாக்கு அரசியல்களுக்காக சிதைக்காதீர்கள். ஏற்கனவே திருவள்ளுவருக்கு கோவில் கட்டியும், "தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்" என்று ஔவையார் எடுத்துக்கூறியும் திருவள்ளுவரை மதச்சார்பற்றவர் என்ற பட்டியலில் அடைக்க அரும்பாடுபடுகிறீர்கள். அதனுடன் ஔவையாரையும், பாரதியாரையும் சேர்க்க நினைத்தால் சேதாரம் உங்களுக்கே என்பதை உணர்த்தவாவது என்னைப்போன்றவர்கள் வருவார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்...!

 -பா இந்துவன்
  14.02.2021

புதன், 10 பிப்ரவரி, 2021

சமஸ்கிருதம் தமிழுக்கு அந்நியமா

இங்கு சிலர் சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி என்றும் அது ஈரானில் இருந்து ஆரியர்களால் இங்கே புகுத்தப்பட்டது என்றும் தமிழுக்கு சமஸ்கிருதம் விரோதி மொழி என்றும் எழுதிவருகின்றனர். ஆனால் சமஸ்கிருதமானது  முற்காலத்தில் அதாவது ஆங்கிலேயர் வருகைக்கு முன்புவரை  அனைத்து தரப்பினரும் பயன்படுத்தினர் என்பதை ஏகமனதோடு ஒத்துக்கொள்ளும் சில தமிழ்மொழி ஆர்வலர்கள், பெரும்பான்மையாக இன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்  மட்டுமே அம்மொழியை பயன்படுத்துவதால் அது பிராமண மொழி என்றும் தமிழுக்கு அந்நியம்  என்றும் எழுதி வருகின்றனர்...!
ஆனால் எனக்கு என்ன சந்தேகமெனில்  ஒரு மொழியை ஒரு மதத்தைச் சார்ந்தவரோ அல்லது  ஒரு சாதியை சார்ந்தவர்களோ  அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அம்மொழியை  அச்சாதியினருக்கோ அல்லது அம்மதத்தினருக்கோ உரிமையாக்கிவிடும் என்று கூறுவது முட்டாள்தனமாக தோன்றவில்லையா??? நான் எனது  தமிழ் மொழியின் பெருமையை இன்னொரு மொழியை, அதன் மகத்துவத்தை  பழித்துப் பேசுவதன் மூலம்தான் உயர்த்தமுடியும் என்பது அறிவின்மையாகவே கருதுகிறேன். ஒருவேளை தனது தாய்மொழிக்காக இன்னொரு மொழியை அவமதிப்பவர்களால் நிச்சையமாக அம்மொழிக்கு தீங்குதான் விளையுமே அன்றி என்றும் நன்மை பயக்காது..!

ஆனால் கடவுளுக்கு தமிழ் தெரியாதா என்று நகைப்பாக நெல்லைக் கண்ணன் அவர்கள் பேசியிருந்தார். கடவுளுக்கு மொழிகள் கிடையாது. இந்த மொழிதான் எனக்கு உகந்தது மற்றவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இறைவன் எந்த இடத்திலும் யாரிடமும் கூறியதாக சரித்திர சான்றுகள் இல்லை. இதற்கு புராண, இதிகாச ஆதாரங்களும் இல்லை. இறைவனை வழிபடும் போது தமிழ் மொழியிலும் வழிபடலாம். சமஸ்கிருதத்திலும் வழிபடலாம். இதுவரை எழுத்து வடிவமே இல்லாத நரிக்குறவர் பாஷையிலும் வழிபாடு நடத்தலாம். இறைவன் அதை ஒரு போதும் ஏற்காமல் விலக்கி வைப்பது கிடையாது...!

தமிழ் மொழியில் அழகான பாடல்கள் உண்டு. அருமையான கருத்துக்கள் உண்டு. நிகரற்ற திருக்குறளும், நெஞ்சை நெகிழ்விக்கும் பாசுரங்களும் தமிழில் மட்டுமே உண்டு. அதுபோல சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இதிகாசங்களும், காவியங்களும், சிற்றிலக்கியங்களும் உண்டு என்றாலும் அவைகள் தமிழோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவுதான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்....!

தக்க அந்தணர்களை வைத்து, நிலம் தானம் கொடுத்து, பசு தானம் கொடுத்து சொர்ண தானம் கொடுத்து வேத பாடசாலை வைத்து வடமொழியை வளர்க்க தெரிந்த தமிழ் மன்னர்களுக்கு வடமொழி தமிழுக்கு அந்நியம் என்ற உண்மை தெரியாமல் சென்றதற்கான காரணத்தை தன்னை அறிவில் சிறந்தவர்களாக கருதிக்கொண்டு தமிழ் மொழி காப்பாளர்களாக பிரகடனப்படுத்துபவர்கள் கூறத்தான் வேண்டும். தமிழ் வேதம் என்று போற்றுகின்ற திருமுறைகளிலேயே வேதாகமங்கள் போற்றப்படுகின்றன. இந்த ஆகமமே சைவத்திற்கு ப்ரமாணம். இந்த ஆகமங்கள் இன்றி சைவம் முற்று பெறாது
இந்த ஆகமங்கள் வடமொழியிலேயே உள்ளன. இதை திருமந்திரம் இயற்றிய திருமூலர் தாம் #வடமொழி #ஆகமங்களை தமிழில் சிவபெருமான் அருளியதாகவே குறிப்பிடுகிறார். ஆகமங்கள் மொத்தம் இருபத்து எட்டு. இந்த இருபத்து எட்டு ஆகமங்கள் எது எதுவென்றுகூட பட்டியலிடுகிறார் திருமூலர்.

"பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே"

திருமுறைகளிலேயே ஆகமம், நால்வேதம், மந்திரம், ஆகுதி, வேள்வி என்று வடமொழி சம்பந்தமான அனைத்தும் புதைந்திருக்கும்போது தமிழிலிருந்து வடமொழியை அந்நியப்படுத்த நினைப்பது மிகவும் தவறாகும்...!

‘தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை
மண்ணின் மிசைத்திருமூலர் திருவாக்கால் தமிழ்வகுப்ப’

என்று கூறியதன் மூலம் இறைவன் வடமொழியில் அருளிச்செய்த ஆகமங்களின் பொருளை தமிழில் தரவே, திருமூலரைத் திருவருள் தந்தது என்று விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். இதை திருந்திரத்தின் வழியே பார்த்தோமேயானால்,

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

என்று குறிப்பிடுகின்றார். இங்கே சேக்கிழாரும் திருமூலரும் வடமொழி ஆகமங்களை தமிழ்ப்படுத்துவதற்காக சிவபெருமானே திருமூலரை அனுப்பியதாக தனது திருப்பதிகங்கள் மூலம் உறுதி செய்கின்றனர். இனி சமஸ்கிருதம் அந்நிய மொழியா? என்பதையும் தமிழ் இலக்கியங்களில்  இது எங்கெங்கு பயின்று வந்துள்ளது என்பதையும் சுருக்கமாக காண்போம்...!

முதலில் தொல்காப்பியத்தில் ஆரிய கலப்பு இல்லை என்றும் தொல்காப்பிய காலத்திற்கு பின்தான் ஆரியர் வருகை என்பதும் இங்கு இருக்கும் பெரும்பான்மை கூற்று. அதன் அடிப்படையில்,

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் மூலம் தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல் தமிழில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. வடசொற்களைத் தமிழில் எடுத்தெழுதுவது பற்றியும் தொல்காப்பியர் சிந்தித்துள்ளார். இதை விளக்குகையில்,

"சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்"

அதாவது தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும் என்றும், சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார். ஆக இங்கு தொல்காப்பியர் வடமொழி அந்நிய மொழி  என்றோ அது தமிழர்கள் பயன்படுத்தக்கூடாது என்றோ பதிவு செய்யவில்லை. ஆனால் அதற்கு பின் வந்த இலக்கியங்களில் எது ஏது நமது மொழி எது எது பிறநாட்டு மொழிகள் என்பதையும் நம் முன்னோர்கள் ஆங்காங்கே நமக்கு ஊட்டியே சென்றுள்ளனர் அதாவது,

12 ஆவது திருமுறையில் பரமனையே பாடுவோர் புராணத்தில்😊👇

"தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும்
வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும்
உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார்"

அதாவது இங்கு #சேக்கிழார் பெருமான் என்ன சொல்கிறார் எனில், #தென்_தமிழ், #வடமொழி, #பிறநாட்டு மொழிகள் ஆகிய மொழிகளுள் யாதொன்றில் தமக்குப் பயிற்சியிருப்பினும் அவற்றுள், ஒன்றில் இறைவனை வணங்கலாம் என்கிறார். அதாவது அவர் இங்கு தமிழையும் வடமொழியையும் நம் நாட்டு மொழிகளாக குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அடுத்தாக #திருவிளையாடல் புராணத்தில்,

"வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்
தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்
கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

என்று இரு மொழிகளின் பிறப்பிடம் எது என்பதையும் தெளிவாக உணர்த்தி விட்டனர். ஆனால் மொழிப்பேதம் பார்த்து பிரிவினை பேசுபவர்களை அதாவது வடமொழியோடு தமிழ் மொழியையும் சிறப்பிக்காதவர்களை குரங்குக்கு சமமாகவும் பாடியுள்ளனர். அதாவது இங்கே வடமொழியை உயர்வாக பேசுபவர்களுக்கே இந்த சவுக்கடியை கொடுத்துள்ளார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது இரண்டு மொழியையும் சமமாக பாவித்துள்ளார் என்பதே.

"மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்”

ஆக ஒவ்வொரு மலருக்கும், தனித்தனி வாசனை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிதனி இயல்புகள் உண்டு. அதே போன்று ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொல் அசைவிற்கு ஏற்ப தனித்தனி சக்திகள் உண்டு. இந்த சக்திகள் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கையின் ஆற்றலினால் மொழி தோன்றும் போதே கூடவே தோன்றுவது உண்டு....!

ஆனால் இங்கு பிரிவினை பேசித்திரியும்  கோஷ்டிகளை விட நம் முன்னோர்கள் ஒன்றும் #மூடர்கள் அல்ல எதையும் தெளிவாக சிந்தித்து செயல்படுகின்ற ஆற்றல் அவர்களுக்கு நம்மை விட சற்று அதிகமாகவே இருந்திருகிறது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி இருந்ததனால் தான் அவர்கள் தமிழ் மொழி காதலர்களாக இருந்தாலும் கூட சமஸ்கிருதத்தின் காவலர்களாகவும் இருந்திருக்கிறார். ஆகவே தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை அவர்கள்,

"வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி" 

என்று வாழ்த்தி இரண்டுமே நமது மொழி என்கிறார். அதோடு திரு.வி.க  வரும் இதே கருத்தை தான் முன்மெழிகிறார்.

"அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே"

என்று ஆசான் #திருமூலர் இருமொழிக்கு உண்டான ஒற்றுமையை உணர்த்தி இரண்டு நம் மொழியே என்று ஒற்றுமை பேசுகிறார்....!

"மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத் #தமிழ்ச்சொலும்
#வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே"

என்று #திருஞானசம்பநத்ர் இரு மொழிகளிலும் இறைவன் பாதத்தை பணிய வேண்டும் என்கிறார்....!

‘’வடமொழி தமிழ் மொழி எனும் இரு மொழியினும்
இலக்கணமொன்றே என்றே எண்ணுக’’

என்கிறார் ஈசான தேசிகர். ஆனால் எங்கேயுமே வடமொழியை தமிழுக்கு அந்நியம் என்றோ அது பிராமணர்களின் மொழி என்றோ குறிப்பிடவில்லை என்பதை அறிக. ஆக மீண்டும் சொல்கிறேன். இவைகளை எல்லாம் நமது முன்னோர்கள் அறியாதது அல்ல. நமது மன்னர்கள் மடையர்களும் அல்ல. எல்லாம் அறிந்தே, எல்லாம் தெளிந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்தார்கள்.  இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இரண்டு மொழியையும் இரண்டு கண்களாகவே பார்த்தார்கள்.....!

இறுதியாக ஆரிய இனவாத கோட்பாட்டை கால்டுவெல்லும் மேக்ஸ் மில்லரும் ஆரம்பிப்பதற்கு முன்புவரை சமஸ்கிருதம் கைபர் கணவாய் வழியாக வந்தது என்றோ அது தமிழுக்கு விரோதி மொழி என்றோ எந்த தமிழ் அறிஞரும் பதிவு செய்யாதபோது இந்த பதிவின் பின்னூட்டத்தில் தமிழ்மொழியின் விசுவாசிகள் என்று தன்னை கூறிக்கொள்பவர்கள் கதற வேண்டாம். அதோடு மாற்றுமத அன்பர்களும் ஒதுங்கிச்செல்லுங்கள். ஏனெனில் கிறிஸ்தவத்தில் இன்று நமது கைகளில் புழங்கும் பைபிளும், இஸ்லாமின்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குரானும் சமஸ்கிருதமின்றி முழுமையாக இயங்காது. அவ்வளவு ஏன் சமஸ்கிருதம் இன்றி அந்த இரு மதப்பெயர்களுமே முழுமை அடையாது. புரியவில்லை எனில் #கிறிஸ்தவம், #இஸ்லாம் இந்த இரு சொற்களிலுள்ள சமஸ்கிருத சொற்களை நீக்கிவிட்டு எழுதிப்பாருங்கள் புரியும்....!

 -பா இந்துவன்
   09.02.2021

சனி, 6 பிப்ரவரி, 2021

சூத்திரன் என்றால் வேசிமகனா?

நான் எனது சிறு வயது முதல் முகநூலில் உலவ ஆரம்பித்த காலம்வரை சூத்திரன் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை என்றே கூறலாம். ஆனால் முகநூலிற்கு வந்தபின் ஒரு சமயம் ஒரு திக கழகத்தை சேர்ந்த நாத்திகரிடம் விவாதிக்க நேரிட்டபோது அவர் என்னை சூத்திரன் என்றார். அப்போது தான் அவ்வார்த்தையையே கேள்விப்பட்டேன். அதற்கு முன்பு அந்த வார்த்தையை கேள்விப்பட்டதில்லை என்பதே நிதர்சனம்....!
ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை எந்தவொரு பிராமணரும் என்னை சூத்திரன் என்று அழைத்ததில்லை. இத்தனைக்கும் எனக்கு எண்ணிலடங்கா பிராமண நண்பர்கள் உண்டு. அவர்கள் வாழ்வில் அந்த வாரத்தையை பயன்படுத்துகிறார்களா? என்பதே மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஆனால் இந்த  நாத்திகர்கள் போர்வையில் இருக்கும் மாற்று மதத்தவர்கள் #சூத்திரன் சூத்திரன் என்று கத்திக் கத்தி தமிழர்கள் அனைவருக்கும் சூத்திரன் என்ற பட்டத்தை சூட்டுவதோடு அதற்கு வேசிமகன் என்றொரு பொருளையும் தருகின்றனர்....!

ஆனால் சூத்திரன் என்ற செல்லை  என்னென்ன பொருள்களில் நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று தேடினால் சூடாமணி, பிங்கலம் போன்ற நிகண்டுகளில் பல பொருள்கள் உள்ளது. உதாரணமாக,

#சூடாமணி_நிகண்டு :

"மண்மகள் புதல்வர் வாய்ந்த
வளமையர், களமர் என்றும்
உண்மைசால் சதுர்த்தர் மாறா
உழவர், மேழியர், வேளாளர்
திண்மைகொள் ஏரின் வாழ்நர்
காராளர், வினைஞர் செம்மை
நண்ணுபின் னவர் பன் னொன்று
நவின்ற சூத்திரர்தம் பேரே"

விளக்கம் : 
சூத்திரர் என்றால் உயிர்களை இயக்கும் தொழில் புரிபவன் என்பது பொருள். 
வளமையர் என்றால் நிலவளம் உடையவர் என்றும், களமர் என்றால் உழவுக் களத்தில் உழைப்போர் என்றும், வர்ணாசிரமத்தின் அடிப்படையில் சதுர்த்தர் நான்காம் வருணத்தவர் என்றும், மேழியர்  என்றால் ஏர் பிடிப்பவர் என்றும், வேளாளர் என்றால் மண்ணை வளப்படுத்தி ஆள்பவர்கள் என்றும், காராளர்  என்றால் மழையால் பயன் விளைப்போர் என்றும், வினைஞர் என்றால் தொழில் புரிவோர் என்றும்,
பின்னவர்  என்றால் செம்மையான வாழ்வு பொருந்திய பின்னவர் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

ஆனால் இதே பொருள்களைத் தரும் மற்ற நிகண்டுகளிலோ எந்தவொரு தமிழ் இலக்கியங்களிலோ சூத்திரன் என்ற சொல்லாது வேசி மகன் என்றோ வைப்பாட்டி மகன் என்ற பொருளிலோ பயன்படுத்தப்படவில்லை. மாறாக சூத்ர என்ற சொல்லாடலானது வர்ணம் தவிர்த்து பல பொருள்களில் வழங்கப்படடிருந்தாலும் பெரியபுராணம் பாடிய #சேக்கிழார் பெருமான் அதில் வரும் #வாயிலார் புராணத்தில் "தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்" என்றும், இளையான்குடி மாற நாயனார் புராணத்தில், "வாய்மையில் நீடு சூத்திர நற்குலம்" என்றும் இரு நாயன்மார்களின் பழமையையும் வாய்மையையும் பெருமையையும் உடைய நல்ல #சூத்திரர் குலம் என்றும் மிகப் பெருமையாகவே பாடி உள்ளார்.

அதோடு சூத்திரன் என்ற சொல் இராஜராஜ சோழனுக்கு நிகராக உயர் பொருளில் வழங்கப்பட்டது தொடர்பாக சோழர் கால செப்பேடுகளில் உள்ளது. ஆனால் அங்கும் வேசிமகன் என்றோ வைப்பாட்டி மகன் என்றோ இல்லாமல் உயர்ந்த பொருளில் சூத்திரன் பெருமைப் படுத்தப்படுகிறார்.
 அதாவது கடைநிலை ஊழியனான சூத்திரனும், பேரரசர் இராஜராஜனும், ஒரே நிலையில் அடையாளப்படுத்தபட்டுள்ளது.

இப்பகுதியானது  திருவாலங்காடுச் செப்பேட்டின் சமஸ்கிருத ஸ்லோகங்கள் உள்ள பகுதியில் 62 மற்றும் 135 ம் ஸ்லோகங்கள் நமக்குத்தேவையான சூத்திரன் பற்றிய தகவல்களை தருகிறது. அதாவது நில தான வேலைகளின் முக்கிய நிகழ்வான பிடிசூழ்தல் என்னும் நிலத்தை அளக்கும் அளவின்போது இந்த பிடி சூழ்தல் வேலையை செய்பவர் பெயர் சூத்திரன் அரனெறி என்று குறிக்கப்படடுள்ளது.
இந்த சூத்திரன் #ஸ்ரீமான் அரனெறி என அழைக்கப்படுகிறார். அதாவது உயர்திரு என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். இவர் மங்கலவாயில் என்னும் கிராமத்தைச்சேர்ந்த மாயானன் என்பவரின் மகன் என்றும் அச்செப்பேடு சான்று பகர்கிறது...!

இச்செப்பேட்டின் அடுத்த வரிகளில்,

தந்தை வழி, தாய்வழி, என்று இருவழிகளிலும் தூய்மையானவன் இந்த சூத்திரன் உயர்திரு அரனெறி அவர்கள் என்றும், மாயனின் மகனும், மங்களவாயில் என்னும் கிராமத்தின் முழு நிலவு போன்றவனும் தந்தை வழி தாய் வழி என்று இரு மரபிலும் தூயவனுமான சூத்திரன் சீமான் அரனெறி என்பவர் பிடிசூழ்தல் வேலையை செய்தார் என்று சூத்திரனை சிறப்பித்து கூறுகிறது அந்த செப்பேடு...!

#செப்பேட்டு_வரிகள் : 

"மாயானஸ்ய ஸூத்ர ஸ்ரீமான் அறனெறி"

மற்றும் இதேச் செப்பேட்டில் சுந்தரச்சோழரின் மகனாக இராஜராஜன் அவதரித்ததை நிகழ்வை விளக்கும்போது 
இராஜராஜன் தந்தை வழி தாய் வழி இருமரபுகளிலும் தூயவனாக பிறந்தான் என்கிறது. ஒரு அரசனை சிறப்பித்துக் கூறப்படும் அதே  சொற்களால் 
ஒரு ஊழியனான சூத்திரனும் குறிப்பிடப்படுகிறார். அதாவது இராஜராஜனுக்கு என்ன சிறப்பு கொடுக்கப்படடதோ, அவனது தாய் தந்தையர்கள் எவ்வாறு  சிறப்பிக்கப்பட்டார்களோ அதே சிறப்பை ஸ்ரீமான் அரனெறியான சூத்திரனும் அவரது தாய்  தந்தையும் பெறுகின்றனர்.....!

(கல்வெட்டுத் தகவல் : தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன்)

ஆனால் இப்படி தமிழ் இலக்கியங்களிலும் செப்பேடுகளிலும் சிறப்பித்து கூறப்படும் சூத்திரன் என்ற சொல்லுக்கு பொருளாக வேசிமகன் என்பதற்கு ஆதாரமாக  ராமசாமி நாயக்கர் வகையறாக்கள் கூறுவதாவது  மனுசா ஸ்திரம், அத்தியாயம்-8ன் 415 ஆவது ஸ்லோகமாகும்,

"த்வஜாஹ்ருʼதோ பக்ததா³ஸோ க்ருʼஹஜ: க்ரீதத³த்த்ரிமௌ ।
பைத்ரிகோ தண்ட³தாஸஶ்ச ஸப்தைதே தாஸயோநய"

இதை   ராமசாமி நாயக்கரின பார்வையில் வேசி மகன் யார் என்பதை மனுவை அடிப்படையாக கொண்டு  பார்க்கலாம்👇

இவர்கள் மேற்கூறிய ஸ்லோகத்திற்கு விளக்கமாக சொல்வதாவது சூத்திரன் என்பவன் 7 வகைப்படுவானாம். அதாவது,

1.யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.

2.யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்.

3.பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.

4.விபச்சாரி மகன்.

5.விலைக்கு வாங்கப்பட்டவன்.

6.விலைக்கு கொடுக்கப்பட்டவன்.

7.தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.

ஆதாரம் : ( https://youtu.be/vmfwQ94sZCs )

இதற்கு ராமசாமி நாயக்கர் கூறிய ஏழு வகையினருக்கான விளக்கத்தை பார்ப்போம்.

1.யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.

(அதாவது உங்களில் யார் யாரெல்லாம் போரில் புறங்காட்டி ஓடியிருக்கிறீர்கள்?? ஒருவேளை ஓடி இருந்தால் நீங்கள் சூத்திரன் என்று பெரியார் சொல்ல வருகிறார். ஒருவேளை நீங்கள் போரில் புறமுதுகிட்டு ஓடவில்லை எனில் ராம்சாமி நாயக்கரின் சூத்திரன் என்ற லிஸ்ட்க்குள் வரமாட்டீர்கள்.)

2.யுத்தத்தில் கைதியாக பிக்கப்பட்டவன்.

(உங்களில் யாராவது போரில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளீர்களா?? ஒருவேளை இருந்தால் நீங்கள் சூத்திரன் என்று ராம்சாமி நாயக்கர் சொல்கிறார். )

3.பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.

(ஊழியம் என்பதே கூலிக்கான வேலையை கூலி இன்றி செய்வது. அதையும் பிராமணன் என ஒரு தனிமனிதன் மேல் உள்ள  பக்தியினால் செய்பவர் உங்களில் யாராச்சும் இருக்கீங்களா?? இதில் இருந்தால் நீங்களும் சூத்திரன் என்று  பெரியார் சொல்றார்.)

4.விபச்சாரி மகன்🤣

(யாராச்சும் இருக்கீங்களா?? இருந்தால் நீங்களும் சூத்திரன்தானாம்.🤒)

5.விலைக்கு வாங்கப்பட்டவன்.

(யாராச்சும் இருக்கீங்களா? விலை போனவர்கள்?? இருந்தால் நீங்களும் சூத்திரன் தானாம்.)

6.விலைக்கு கொடுக்கப்பட்டவன்.

(யாராச்சும் இருக்கீங்களா??  அதாவது உங்களை யாராவது விலைக்கு விற்றிருந்தால் நீங்களும் சூத்திரன் தானாம். )

7.தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.

(ஊழியம் என்பது கூலிக்கான வேலையை கூலியே வாங்காம பண்ணுறது அதையும் தலைமுறை தலைமுறையாக பண்ணும் யாராச்சும் இருக்கீங்களா?? இருந்தால் நீங்களும் சூத்திரன்தானாம்‌.)

மேற்கூறிய பட்டியலில்  நீங்கள் இல்லையென்றால் நீங்கள் அந்த பட்டியலில்   இருப்பதாக கூறி உங்களை சூத்திரன் என்று  சொல்பவர்மேல் (ராம்சாமி நாயக்கர்) உங்களுக்கு கோபம் வரவேண்டுமா?..?? அல்லது அந்த அட்டவணை மேல் உங்களுக்கு கோபம் வர வேண்டுமா என்று சிந்தியுங்கள் மக்களே...!

(அதோடு பிராமணர்களை தவிர அனைவரும் சூத்திரர்கள்தான் என்று கூறிய ராம்சாமி நாயக்கரின் பார்வையில் அவரே ஒரு சூத்திரன்தான் என்பது வேறு கதை அதை தனியாக தேவைப்பட்டால் இன்னொருநாள் பார்க்கலாம் 🤨)

இனி ராம்சாமி நாயக்கர் கூறிய அந்த மனுவின் ஸ்லோகத்திற்கான உண்மையான பொருள் என்ன என்பதை பார்க்கலாம்,

#மனுசாஸ்திரம், #அத்தியாயம்-8, #ஸ்லோகம்-415 :

"த்வஜாஹ்ருʼதோ பக்ததா³ஸோ க்ருʼஹஜ: க்ரீதத³த்த்ரிமௌ ।
பைத்ரிகோ தண்ட³தாஸஶ்ச ஸப்தைதே தாஸயோநய"

ஏழு வகையான #சேவை செய்பவர்கள் உள்ளனர்.

(குறிப்பு :  இச்சுலோகத்தில் #சூத்திரன் என்ற சொல்லாடல் இல்லை. ஆக இது சூத்திரனுக்கு உண்டான குணங்கள் என்பது பெரியாரிய இயக்கங்கள் எடுத்து கட்டிய கட்டுக்கதை. இல்லை இல்லை அது சூத்திரனைத்தான் குறிக்கிறது என்போர் தாராளமாக அவர் கூறிய பட்டியலில் ஏறி உக்காந்துக்கோங்க😏)

1.ஒரு பதாகையின் கீழ் கைப்பற்றப்பட்டவர். அல்லது ஒரு தரத்தின் கீழ் சிறைபிடிக்கப்பட்டவர்.

2.சேவை செய்ய விருப்பமுடையவன்.

3. தனது மனைவியை தவிர இன்னொரு பெண்ணுடனான தவறான உறவின் மூலம் பிறப்பவர்கள் ( வைப்பாட்டி மகன்)

4.விலைக்கு வாங்கப்பட்டவர்.

5.விலைக்கு கொடுக்கப்பட்டவர்.

6.பரம்பரை பரம்பரையாக ஊழியம் செய்பவன்.

7.தண்டனையால் அடிமை அல்லது தண்டனையின் மூலம் அடிமைப் படுத்தப்பட்டவன்.

மேலே, கொடுத்த வசனங்களில், சூத்திரன் என்ற வார்த்தை இல்லை. மேலும், விபச்சாரி மகன் என்று சூத்திரனை அர்த்தம் கூறுகிற எந்த வார்த்தையும் இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க பொய் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். அதோடு இன்று நமது கைகளில் புழங்கும் மனுஸ்மிருதியைப்பற்றி  காந்தியடிகள் போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டாலும், மனு ஸ்மிருதியைப் பற்றி கம்பனும், தமிழ்க் கல்வெட்டுகளும் பேசியிருந்தாலும் 1794 ஆம் ஆண்டிற்கு முன்பு இதை ஏற்றிருக்கலாம். ஏனெனில்  இதை வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிறகு அல்லது பல இடைச்செருகல்களின் காரணமாக சூத்திரர்கள் பற்றிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால் எனக்கு மனுஸ்மிருதியில் முரண்பட்ட கருத்துகள் உண்டு. இன்று நமது கைகளில் புழங்கும் மனுவில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வரலாற்றுச்சான்றுகள் இல்லை. ஆனால் மனுவின் அடிப்படையில் மனுஸ்மிருதியானது  க்ருதயுகத்துக்கானது என்பதால் இதை தூக்கி பிடிக்க அவசிமில்லை என்பது எனது கருத்தாகும்...!

"க்ருதே து மானவா: ப்ரோக்தாஸ் த்ரேதாயாம் யாக்ஞவல்க்யஜா:
த்வாபரே சங்கலிகிதா: கலௌ பராசரா: ஸ்ம்ருதா"

ஆக மனுவின் அடிப்படையில் இந்துக்களை விமர்ச்சிப்பது தேவை இல்லாத ஆணியே. ஆனால் வர்ணாசிரம கோட்பாடுகள் சங்ககாலத்திலேயே இங்கு இருந்தது. இதை மறுப்போரும் உண்டு. ஆனால் தொல்காப்பியத்திலேயே வர்ணாசிரம கோட்பாடு உண்டு அங்கே பிராமணர், சூத்திரர் என்ற சொல்லாடலுக்கு பதிலாக அந்தணர், வேளாளர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சங்க காலத்திலேயே வர்ணாசிரம கோட்பாடுகள் இருந்தது என்பதற்கு சான்றாக,

#புறநானூறு :

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"

#விளக்கம் : தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் “மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.

உடனே அதென்ன கீழ்க்குலம் மேல்குலம் என்று யோசிக்காதீர்கள் இதுபற்றி தெளிவாக திருவள்ளுவர் உரைக்கிறார். உதாரணமாக,

#திருக்குறள் :

"மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு"

விளக்கம் : கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

ஆக பிறப்பின் அடிப்படையில் சிறப்புகள் இங்கு தீர்மானிக்கப்படுவதில்லை. புறநானூறானது கல்வியில் சிறந்தவனிடம் உயர் குடியில் பிறந்த ஒருவன் கல்வி கற்றுக்கொள்ள வருவான் என்கிறது. அதே சமயம் திருக்குறளானது கல்வியறிவில்லாத ஒருவன் உயர் குடியில் பிறந்தாலும் அவன் கீழ்க்குலத்தை சேர்ந்தவனாகவே கருதப்படுகிறான் என்கிறது. ஆக வடமொழி நூல்களாகட்டும் புராணங்களிலுள்ள இடைச்செருகல்களாகட்டும் இன்றைய சூழலில் பிறப்பின் அடிப்படையில் சிறப்பை கூறினால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதை வலியுறுத்துவோர் இருந்தால் இந்த பதிவை கடந்து செல்க. அது அவரவர் புரிதலை பொறுத்தது....!

ஒருகாலத்தில் மேல்குடி கீழ்குடி என்ற பிரிவுகள் இருந்ததாக வள்ளுவரே கூறினாலும் அன்று அந்தந்த குடிகளுக்கு உண்டான தர்மத்தை போற்றி பாதுகாத்து வந்தனர். ஆனால் இன்று யாரும் அந்தந்த குடிகளுக்கு உண்டான தர்மத்தை பின்பற்றாத சமயத்தில் குடிப்பிறப்பின் சிறப்பு பற்றி பேசுவது ஏற்புடையது அன்று...!

இப்படியாக தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலமாக  ஒன்றை மட்டும் அறிந்துகொண்டேன். அதாவது சூத்திரன் என்ற பெயருக்கு இத்தகு மேம்பட்ட பொருள்கள் இருந்தபோதும் இக்காலத்திலேயே இத்தனை தவறான விமர்ச்சனங்களை வைக்கின்றனர் எனில் சைவ சமண மோதல்கள் இருந்த காலங்களில் எந்த அளவுக்கு விமர்ச்சனங்கள் இருந்திருக்கும்.? இதன் அடிப்படையிலேயே இன்று நமது கைகளில் புழங்கும் இந்து தர்ம நூல்களில் பலவற்றுள் இடைச்செருகல்களுடனும் கட்டுக்கதைகளுடனும் திருத்தி எழுதப்பட்டுள்ளன என்பதற்கு ராம்சாமி இயக்கங்களே ஆகச்சிறந்த உதாரணம்.....!

இப்படி தமிழ் இலக்கியங்களில் உயர்ந்த பொருளில் நன்மதிப்பிற்குரிய இடங்களில் இராஜராஜ சோழனுக்கே நிகரான மதிப்புடைய இடங்களில் பயன்படுத்தப்படுள்ள சூத்திரன் என்ற சொல்லை வேசி மகன் என்றோ அல்லது வேறு எந்த தவறான விளக்கஙகளுடன் வரலாறுகளில் பதியப்பட்டிருந்தாலும் அவற்றில் எமக்கு உடன்பாடில்லை. நல்லவற்றை ஏற்றுக்கொள்ள கற்றுத்தந்த இந்த சமூகம் தேவையற்றவற்றை புறந்தள்ளவும் கற்றுத்தந்துள்ளது. ஆக இதுபோன்ற கயவர்களிடம் சற்று ஒதுங்கியே இருங்கள் மக்களே...!

 -பா இந்துவன் 
  04.02.2021

தமிழர்களின் பழமையான இலக்கியங்கள் கடவுளைப்பற்றி அதிகம் பேசவில்லையா???

BBC தமிழ் இணையதளத்தில் ஒரு செய்தி வாசிக்க நேரிட்டது. அதாவது தமிழர்களின் பழமையான இலக்கியங்கள் கடவுளைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவை என்று தலைப்பிட்டு ஆரம்பித்த அந்த கட்டுரையை படித்தேன். அந்த கட்டுரையில் தமிழர்களின் பண்டைய இலக்கியங்கள் மதம் சாராதவை என்று கூறுவதை கூட ஏற்கலாம். ஆனால் கடவுளைப்பற்றி அதிகம் பேசாதவை என்பதை ஏற்க முடியாது. பெயரளவில் இலக்கியங்களின் பெயர்களை அறிந்தவர்களாலேயே இச்செய்தியை கடந்துசெல்ல இயலாது. அவ்வகையில் ஓரளவேனும் இலக்கியங்களை புரட்டியவன் என்ற நம்பிக்கையில்  BBC தமிழில் வந்த இந்த கடடுரையை இரண்டாவது முறையாக மறுக்கிறேன். ஏற்கனவே தமிழர்களின் பழமையான இலக்கியங்களில் இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பது போன்ற கூற்றுகள் இல்லை என்று கூறிய ஒரு கட்டுரைக்கு மறுப்பு எழுதியிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது....!
https://m.facebook.com/story.php?story_fbid=1545540462283391&id=100004823560851

இதுபோன்ற கூற்றுகள் தமிழர்களை அவர்களின் பண்பாட்டு கலாச்சாரங்களிலிருந்து பிரித்து அடையாளமற்றவர்களாக தனித்து காட்ட வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்படுகின்றன என்பது எனது அபிப்பிராயம். இதற்கெல்லாம் மறுப்பு எழுதவேண்டி வரும் என்று முகநூலுக்கு வந்த ஆரம்பகாலத்தில் அறிந்திருக்கவில்லை. எனினும் இதற்கான மறுப்பும் காலத்தின் கட்டாயம் என்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில் இங்கு இந்துக்களின் நம்பிக்கைகள் மட்டுமே மொழியின் பெயரால் பிரிக்கப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற பேதங்களை கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ காண்பதில்லை என்பதிலிருந்து நடுநிலை இந்துக்கள் அவர்களிடமிருந்து ஒற்றுமையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது எண்ணம்....!

இதற்கு மறுப்பு எழுதினால் பதிவின் நீளத்தை குறைப்பது மிகவும் கடினம்
 இருந்தாலும் முயற்சிக்கிறேன். முதலாவதாக இன்று பெரும்பான்மையாக அனைவராலும் ஏற்கப்படும் மிகப் பழமையான இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்தே ஆரம்பிக்கலாம் என்றுள்ளேன். அதன் அடிப்படையில் கடவுள் பற்றிய தகவல்கள் தொல்காப்பியத்திலேயே அதிகம் உண்டு. தொல்காப்பியத்தில் உள்ள கடவுள் பற்றிய தகவல்களை பார்ப்பதற்கு முன்பு  நாம் கவனிக்கவேண்டியது என்னவெனில் தொல்காப்பியம் என்பது ஒரு இலக்கணநூல். அதாவது ஒரு இலக்கண நூலிலேயே கடவுளைப் பற்றிய தகவல்கள் வருகிறது எனில் தமிழர்கள் இறைசார்ந்த பண்பாட்டு கலாச்சாரங்களுக்கு எத்தனை முக்தியத்துவம் கொடுத்திருப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தொல்காப்பியத்தில் திணை தெய்வங்களாக #திருமால், #முருகன், #இந்திரன், #வருணன், #கொற்றவை போன்ற தெய்வங்களை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக,

"மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே"

#விளக்கம் : மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும், சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும், வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும், இந்நிலங்கள் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லப்படும் என்கிறார்...!

"மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
#கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”

மேற்கூறிய தொல்காப்பிய நூற்பாவின் மூலம் பாலை நிலத்திற்குரிய கடவுளாக கொற்றவை இருந்துள்ளாள் என்பதை அறிவதோடு இந்த திணை தெய்வங்களை தாண்டி தத்துவப்பொருளாகவும் இறைவன் இருந்துள்ளார் என்பதை கீழ்ககாணும் வரிகள் மூலம் உறுதி செய்யலாம்,

"காமப்பகுதி கடவுளும், வரையார்,
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்"

இப்படியாக ஐந்து திணைகளை வகுத்து ஒவ்வொரு திணைக்கும் தனித்தனி தெய்வங்களை வகுக்கும் தொல்காப்பியர் திணை தெய்வங்களை தவிர்த்து தத்துவப்பொருளாகவும் இறைவனை சுட்டுவதை காண்க. இது தவிர்த்து கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வரும் மூன்று சிறப்பியல்புகள் பற்றி கூறுகையில்,

"கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

இவ்வாறாக தொல்காப்பியமானது ஐந்து திணை தெய்வஙகளையும் தத்துவப்பொருளாக இறைவனையும் கடவுள் வாழ்த்தோடு சேரந்து வரும் சிறப்பியல்புகள் பற்றி கூறுவதோடு நில்லாமல் பால்வரை தெய்வம் என்று #அர்த்தநாரீஸ்வரரான சிவபெருமானையும் குறிப்பிடுவதாக கீழ்க்காணும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய தெய்வச்சிலையார் குறிப்பிடுகிறார்....!

"காலம் உலகம் உயிரே உடம்பே
#பால்வரை_தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயிரைந் தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉங் கிளவியெல்லாம்
பால்பரிந் திசையா உயர்திணை மேன"
(சொல்லதிகாரம்-58)

இங்கு #பால்வரை தெய்வம் என்பது வினைகளை வகுக்கும் முழுமுதற் கடவுள் அதாவது  ஆணாகவும்  பெணாகவும் திருநங்கை எனும் வடிவிலும் அருள் பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரரே பரம்பொருள் என்று தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களில் முக்கியமானவரான தெய்வச்சிலையார் குறிப்பிடுகிறார். தெய்வச்சிலையாரின் ஒத்த கருத்தையே  #நச்சினார்க்கினியரும் #சேனாவரையரும் சொல்கின்றனர். அதாவது வினைகளை வகுக்கும் பரம்பொருளைத் தான் தொல்காப்பியர் பால்வரை தெய்வம் என்று சொல்வதாக உரை எழுதியுள்ளனர்.....! 

இவ்வாறாக தமிழர்களின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே இத்தனை கடவுள் பற்றிய குறிப்புகள் எனும்போது தமிழர்களின் பழமையான இலக்கியங்கள் கடவுள் பற்றி பெரிதாக பேசவால்லை என்ற BBC ன் அந்த கட்டுரையை எப்படி ஏற்க முடியும்???? இப்படியாக திருக்குறள், அகநானூறு, புறநானூறு என்று ஒவ்வொரு பழமையான இலக்கியங்களை தொகுத்து அதில் வரும் இறைவன் பற்றிய தொன்மங்களை எழுதினால் BBC க்கு மறுப்பு என்று 100 பாகங்கள் எழுதினாலும் முடியாத அளவுக்கு தமிழர்களின் வாழ்வியலில் இறை நம்பிக்கை முக்கியமானது. அடுத்ததாக திருக்குறளை எடுத்துக்கொண்டால் உலகக்காரணனான இறைவனில் துவங்கி, திருமால், இந்திரன், எமன், லட்சுமி, அலட்சுமி, வேதம், வேள்வி, தேவர்களுக்கு பூஜை செய்தலில் துவங்கி இறைவன் பற்றிய தகவல்கள் ஏராளமாக உள்ளது. உதாரணமாக,

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

#பொருள் : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

"பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்"

#மணக்குடவர்_உரை: பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர்கள் இறைவனுடைய திருவடியை பற்றுபவர்களே ஆனால் இறைவனது திருவடியைச் சேராதவர்களால் பிறவியாகிய பெருங்கடலை கடக்க முடியாது. இவை தவிர்த்து தனித்தனி இறைவனாக குறிப்பிடவேண்டுமானால்,

#சிவன் : முதல் பத்து குறள்களும் திருமாலுக்கும், சிவனுக்கும் பொதுமையான உவமைகளே ஆகும். அதிலும் ஆதிபகவன் என்பது சிவனையே குறிக்கும். இருந்தாலும் தனித்து கூறவேண்டுமாயின்,

"பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க 
நாகரிகம் வேண்டு பவர்"

🔴இதில் எங்கே சிவன் வருகிறார் என்று கேட்பவரகள் ஓரமாக செல்லவும், முதல் குறளில் வரும் ஆதிபகவன் முதற்கொண்டு எண்குணத்தான் முதலான நஞ்சுண்டவர் வரை சிவனுக்கு உவமையாக எழுதப்பட்டதுதான் என்பது எனது புரிதல்

#அகரமுதலோன்:

https://m.facebook.com/story.php?story_fbid=1576410872529683&id=100004823560851

ஔவையார் நேரடியாக சிவனை குறிக்கும் திருக்குறள்:

https://m.facebook.com/story.php?story_fbid=1650617255109044&id=100004823560851

திருவள்ளுவர் திருநாள் எது?:

https://m.facebook.com/story.php?story_fbid=1659282530909183&id=100004823560851 🔴

#திருக்குறளில்_திருமால் :

https://m.facebook.com/story.php?story_fbid=1543431112494326&id=100004823560851

"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு"

இதில் வரும் அடி அளந்தான் என்பது திருமாலையே குறிக்கும் என்பதை பரணர் திருக்குறளுக்கான புகழ்மாலையான திருவள்ளுவமாலையில் எழுதிய பாடல்கள் மூலம் அறியலாம்.

"மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான்-வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவஎல் லாம்அளந்தார் ஓர்ந்து"

அதாவது திருமாலே குறளைக்கொண்டு  இரண்டடியால் உலகை அளந்தான். என தமிழ்ப்புலவன் திருவள்ளுவரை திருமால் என்கிறார். இது தவிர்த்து,

"தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்?
தாமரைக் கண்ணான் உலகு"

#திருக்குறளில்_லட்சுமி :

"அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்"

"மடியுளான் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்"

"அறனறிந்து வெஃகா  அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே  திரு"

(விளக்கங்கள் வேண்டுமாயின் பின்னூட்டத்தில் வினவுங்கள்)

#திருக்குறளில்_இந்திரன் :

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி"

#திருக்குறளில்_எமன் :

"கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்"

"கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து"

"கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று"

"கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை"

#பிரம்மா : (உலகியற்றியான்)

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்"

#வானோர்கள் : (தேவர்கள்)

"சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு"

இப்படியாக திருக்குறளிலும், தொல்காப்பியத்திலும் உள்ள கடவுள் பற்றிய பகுதிகளை தனித்து குறிப்பிட்டு செல்லுமிடத்தெல்லாம் இவர்களெல்லாம் தமிழ் கடவுள்கள், ஆங்கில கடவுள்கள் என்றொரு கூட்டம் வந்தாலும்,
இவர்களை கடந்துசென்று நமது பதிவை முடிப்பதற்காக அடுத்த இலக்கியமாக கண்ணில் படுவது புறநானூறு. ஆக புறநானூற்றில் கடவுள் பறறிய தகவல்கள் உண்டா என்பதையும், யார் யாரை கடவுளாக குறிப்பிடுகிறது என்பதையும் பார்ப்போம்....!

#புறநானூறு : வழக்கம்போல புறநானூற்றிலும் சிவன், திருமால் முருகன் இந்திரன் போன்ற தெய்வங்களின் உவமைகளே மிகுதியாக உள்ளன என்பதை கூறிக்கொண்டு தொடர்வோம்🧘🚶🚶🚶

#சிவபெருமான்:

"கண்ணி கார்நறுங் கொன்றை, காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ஏறே, சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று, அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே"

பாரதம் பாடிய பெருந்தேவனார் போற்றும் இந்த தெய்வமானது எம்பெருமான் சிவனே ஆகும். இதற்கெல்லாம் தனித்தனியாக விளக்கம் எழுதினால் பதிவு நீண்டுகொண்டேச் செல்லும் என்பதால் தவிர்க்கிறேன்.

#திருமாலும்_பலராமனும் :

"பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமி யோனும்என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ?"

#முருகன்_சிவன்_முதலான_நாற்பெரும்_தெய்வங்கள் :

"ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, 
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்"

#வஜ்ரமுடையானான_இந்திரன் :

"திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசும் கறங்க
ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே"

#இராமன் :

"கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு"

இப்படியாக தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு முதலான மூன்று நூல்களில் ஆங்காங்கே ஒவ்வொரு பாடல்வீதம் பார்த்ததற்கே பதிவு இவ்வளவு நீளமாகிறது. இது தவிர்த்து நற்றிணை, குறுந்தொகை,
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு,பட்டினப்பாலை , மலைபடுகடாம் போன்ற எட்டுத்தொகை நூல்களிலும்,

நாலடியார், நான்மணிக்கடிகை,
இன்னா நாற்பது, இனியவை நாற்பது,
களவழி நாற்பது, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது,
ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களிலும் உள்ள கடவுளர் பற்றிய தகவல்களை தொகுத்தால் வாழ்நாள் முழுவதும் பாகம் பாகமாக எழுதிக்கொண்டே இருக்கும் நிலை உருவாகும் என்பதால்  இம்மூன்று நூல்களுடன் பதிவை நிறைவு செய்கிறேன்.....!

கூடுதல் தகவலாக ஒருசில இலக்கியங்கள் தனித்தனி தெய்வங்களை சிறப்பிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. ஒரு தெய்வத்திற்காக ஒரு தனித்தமிழ் இலக்கியம் படக்க வேண்டுமெனில் தமிழர்கள் தெய்வங்களுக்கு எத்தகு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை அறியலாம். உதாரணமாக,

முருகன் : திருமுருகாற்றுப்படை, திருப்புகழ்.
திருமால், முருகன் : பரிபாடல்.
சிவன் : திருமுறைகள்.
திருமால் : நாலாயிர திவ்ய பிரபந்தங்கள்.

இறுதியாக இல்லை இல்லை இதெல்லாம் தமிழ் கடவுள்கள் ஆரிய பார்ப்பான் இந்து கடவுள் ஆக்கிவிட்டான் என்று கதறாதீர்கள். ஏனெனில் ஒரு இஸ்லாமியர் அவர்களின் நம்பிக்கைக்கு உட்பட்ட கடவுளை அரேபிய கடவுள், தமிழ் கடவுள், ஹிந்தி கடவுள் என்று பிரிக்காமல் உலகத்திற்கான, அனைத்து மொழிக்குமான ஒரே இறைவன் #அல்லாஹ் என்று ஒருமித்த குரலுடன் இஸ்லாம் என்ற பெயரில் அழைப்பதோடு அதை கொண்டாடுகிறார்கள். அதுபோல கிறிஸ்தவர்களும் அவர்களின் நமபிக்கைக்கு உட்பட்ட தெய்வங்களை ஹிப்ரு கடவுள், லத்தீன் கடவுள் , ஆங்கில கடவுள், தமிழ் கடவுள் என்று பிரிக்காமல் உலக மக்களுக்கான ஒரே இறைவன் #கர்த்தரே என்று கிறிஸ்தவம் என்ற பெயரில் ஒருமிக்கிறார்கள். அதோடு உலகின் பெரும்பகுதி மக்களை தனதுவசம் கொண்ட இந்த இரு மதங்கள் தன்னை மொழி ரீதியாக பிரிக்காதபோது நாம் மட்டும் ஏன் இத்தகு பிரிவினைகளை காண வேண்டும் என்று சிந்தியுங்கள். இத்தகு  இக்கூற்றுகளை உங்களால் ஏற்க முடியவில்லை எனில் நீங்கள் தமிழ் கடவுள் என்று தாராளமாக அழையுங்கள்.  ஆனால் முப்பாட்டன் பெரும்பாட்டன், ஆதிப்பாட்டன் என்று கூறி தமிழன் கடவுள் நம்பிக்கை அற்றவன் என்ற முட்டாள்த்தனமான வாதங்களை விதைக்காதீர்கள். அதே சமயம் இவை இந்து தெய்வங்கள் என்றோ, இந்தியாவின் தெய்வங்கள் என்றோ, உலகத்திற்கான தெய்வங்கள் என்றோ எழுதும் என்னை தடையாதீர்கள். நீங்கள் தடுத்தாலும் எனது எழுத்துக்கள் நிற்கப்போவதில்லை. ஏனெனில் நான் ஆதரவுகளை விட விமர்ச்சனங்களை எதிர்கொண்டே இந்நிலைக்கு வந்துள்ளேன்....!

ஓம் நமசிவாய 🔥

 -பா இந்துவன்,
  06.02.2021.

புதன், 3 பிப்ரவரி, 2021

மாணிக்கவாசகர் மெக்காவில் உள்ள காபா கல்லை பற்றி பாடினாரா?

அனைவருக்கும் வணக்கம்🙂🙏...!

நேரம் போகல னு மூஞ்சி புக்கை SCROLL பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போது ஒரு பதிவைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அது வேறு ஒன்றும் இல்லை மக்களே...!👇

நமது மாணிக்கவாசக பெருமான்  மெக்காவில் இருக்கும் காபாக் கல்லை பற்றி எழுதியபோது அது "சொர்க்க வானில் இருந்து ஒழிப்பிழம்போடு வந்து இறங்கியதாம்" என்று அக்கல்லைப்பற்றி திருவாசகத்தில் எழுதி இருப்பதாக  பாடல் போட்டு விளக்கமும் எழுதி உள்ளார்....!

விலாசம்:😁👇

https://m.facebook.com/story.php?story_fbid=1827893427326397&id=100003172710722

இதற்கு மறுப்புப்பதிவே இது...!👇👇👇

ஆனால் இப்பாடல் வரும் பகுதி எது என்று பார்த்தால் திருவாசகத்தின் சிவபுராணப் பகுதியில் கீர்த்தித் திரு அகவலில் வருகிறது...!

"தானே ஆகிய தயாபரன் எம் இறை
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி
அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன்"

#விளக்கம்:

எல்லாருடைய குணங்களும் தன்னிடத்து அடக்கித்தானொருவனே முதல்வனாய் நிற்கிற அருளினால் மேம்பட்ட எம் தலைவன் சந்திரதீபம் என்னும் தலத்தில் சாத்திரப் பொருளை உபதேசிப் பவனாய், ஆகாயத்தினின்றும் இறங்கி வந்து அழகு வாய்ந்த திருக் கழிப்பாலை என்னும் தலத்தில் அழகிய திருக்கோலத்தோடு பொருந்தி யிருந்தருளியும்; மறைமொழிகள் வெளிப்படுவதற்கு இடமான பெரிய மலையாகிய, மகேந்திர மலையையுடையவன் முடிவற்ற பெருமையையும் அருளையும் உடைய பெரியோனே என்று எம்பெருமானே என்று பாடுகிறார்....!

இதில் பாலை என்ற ஒரு வார்த்தையை தூக்கிக்கொண்டு பாலை நிலமாக அரேபியாவை சுட்டுகிறார் அண்ணன். அண்ணே அது எம்பெருமான் எழுந்தருளிய #திருக்கழிப்பாலை எனும் இடமாகும்👇👇👇

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

https://temple.dinamalar.com/New.php?id=849

மேலே கொடுத்த விலாசத்தில் சென்றால் மாணிக்கவாசகபெருமான் பாடிய திருக்கழிப்பாலை எனும் இடத்தின் வரலாற்றை அறியலாம்....!

இப்படிதான் கல்கி அவதாரம் தான் நபி அவர்கள் என்று ஒரு பெரிய ரைட்டப்பை தூக்கிக்கொண்டு சுற்றினார்கள். இங்கு என்னடான்னா திருவாசகத்திலும் கைவைக்க ஆரம்பித்து விட்டனர்...!😥🚶🚶🚶

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...