திங்கள், 15 பிப்ரவரி, 2021

ஔவையாரும் பாரதியும் மதச்சார்பற்றவர்களா?

நமது பாரத பிரதமர் முத்தமிழ் மூதாட்டியான ஔவையாரையும், பாரதியாரையும் மேற்கோளிட்டு பேசியதிலிருந்து தெய்வப்புலவர் திருவள்ளுவரை மதச்சார்பற்றவர் பட்டியலில் சேர்த்ததைப்போல் இவர்களையும் சேர்க்கும் விதமான பதிவுகள் ஆங்காங்கே தென்படுகின்றன. அவரவர் அரசியல் ஆதாயங்களுக்காகவே இம்மண்ணின் ஆன்மீகத்தை மதச்சார்பின்மை என்ற பெயரில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர்....!
இதற்கான காரணம் என்னவெனில் தமிழுக்கு அடையாளம் திருவள்ளுவர், ஔவையார், பாரதியார் போன்ற கவிகள்தான் என்று நன்கறிந்த கயவர் கூட்டம் இவர்கள் சார்ந்த இறை நம்பிக்கையை சிறிது சிறிதாக உருவி தமிழன் மதச்சார்பற்றவன் என்றோ கடவுள் நம்பிக்கை அற்றவன் என்றோ நிறுவுவதே இவர்களின் தலையாய பணியாக தோன்றுகிறது...!

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா"

என்று முத்தமிழை விநாயகரிடம் கேட்ட ஔவையாரை இவர்கள் எப்படி மதச்சார்பற்றவர்களின் பட்டியலில் சேர்ப்பார்கள் என்பதிலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் ஔவையார் அருளிய திருக்குறள், நல்வழி, மூதுரை, போன்ற நூல்களை நாம் அறிந்திருக்காததன் காரணியை இவர்களின் மதச்சார்பற்ற அரசியலுடன் ஒப்பிட வேண்டும். ஏனெனில் இந்த காவியங்கள் அனைத்தும் சிவன் விநாயகர் என்று பாரதத்தின் ஆன்மீகத்தோடு தொடர்புடையதாக இருப்பதேயாகும் ...!

உடனே சில இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் நீ சொல்வது பிற்கால ஔவையார். ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற ஔவையார் என்று கூறியது சங்ககால ஔவையாரை என்று கதைப்பதையும் உணர்கிறேன். இவர்களுக்காகவே ஔவையாரால் பாடப்பட்ட சங்க இலக்கியப்பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகிறது அதாவது மரணமில்லா பெருவாழ்வு வாழ வழிவகை செய்யும் நெல்லிக்கனியை அதியமான் ஔவையாருக்கு கொடுத்த நிகழ்வை புறநானூற்றில் ஏந்திப்பாடுகையில் அதியமானை சிவபெருமானுடன் ஒப்பிட்டு பாடுகிறார்...!

"வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
10 ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே"

பொருள் : வெற்றி மிகுந்த, குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போர்க்களத்தில் வென்ற கழலணிந்த காலும், வளையணிந்த பெரிய கையையும், அழன்ற கள்ளையும் உடைய அதியர் தலைவனே! பகைவர்களைப் போரில் வெல்வதால் பெறும் செல்வத்தையும் பொன் மாலையையும் உடைய அஞ்சியே! பழைய பெரிய மலைப்பிளவின்கண் அரிய உயரத்தில் இருந்த சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியினால் விளையும் (சிறந்த) பயனைக் கூறாது தன்னுள் அடக்கிச் சாதல் நீங்க எனக்கு அளித்தாயே! நீ, பால் போன்ற பிறை நெற்றியிலே இருந்து அழகு செய்யும் தலையையும், நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய கடவுள் (சிவன்) போல் நிலைபெற்று வாழ்க!

ஔவையாருக்கே இந்த நிலையென்றால் பாரதியாரை குறித்து எழுதினால் பதிவின் நீளத்தை தடுக்க முடியாத சூழல் எழுவதால் இப்பாரத மண்ணின் ஆன்மீக தொடர்பை மதச்சார்பற்ற கவிகள் என்ற பெயரில் உங்கள் வாக்கு அரசியல்களுக்காக சிதைக்காதீர்கள். ஏற்கனவே திருவள்ளுவருக்கு கோவில் கட்டியும், "தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்" என்று ஔவையார் எடுத்துக்கூறியும் திருவள்ளுவரை மதச்சார்பற்றவர் என்ற பட்டியலில் அடைக்க அரும்பாடுபடுகிறீர்கள். அதனுடன் ஔவையாரையும், பாரதியாரையும் சேர்க்க நினைத்தால் சேதாரம் உங்களுக்கே என்பதை உணர்த்தவாவது என்னைப்போன்றவர்கள் வருவார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்...!

 -பா இந்துவன்
  14.02.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...