சனி, 6 பிப்ரவரி, 2021

தமிழர்களின் பழமையான இலக்கியங்கள் கடவுளைப்பற்றி அதிகம் பேசவில்லையா???

BBC தமிழ் இணையதளத்தில் ஒரு செய்தி வாசிக்க நேரிட்டது. அதாவது தமிழர்களின் பழமையான இலக்கியங்கள் கடவுளைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவை என்று தலைப்பிட்டு ஆரம்பித்த அந்த கட்டுரையை படித்தேன். அந்த கட்டுரையில் தமிழர்களின் பண்டைய இலக்கியங்கள் மதம் சாராதவை என்று கூறுவதை கூட ஏற்கலாம். ஆனால் கடவுளைப்பற்றி அதிகம் பேசாதவை என்பதை ஏற்க முடியாது. பெயரளவில் இலக்கியங்களின் பெயர்களை அறிந்தவர்களாலேயே இச்செய்தியை கடந்துசெல்ல இயலாது. அவ்வகையில் ஓரளவேனும் இலக்கியங்களை புரட்டியவன் என்ற நம்பிக்கையில்  BBC தமிழில் வந்த இந்த கடடுரையை இரண்டாவது முறையாக மறுக்கிறேன். ஏற்கனவே தமிழர்களின் பழமையான இலக்கியங்களில் இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பது போன்ற கூற்றுகள் இல்லை என்று கூறிய ஒரு கட்டுரைக்கு மறுப்பு எழுதியிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது....!
https://m.facebook.com/story.php?story_fbid=1545540462283391&id=100004823560851

இதுபோன்ற கூற்றுகள் தமிழர்களை அவர்களின் பண்பாட்டு கலாச்சாரங்களிலிருந்து பிரித்து அடையாளமற்றவர்களாக தனித்து காட்ட வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்படுகின்றன என்பது எனது அபிப்பிராயம். இதற்கெல்லாம் மறுப்பு எழுதவேண்டி வரும் என்று முகநூலுக்கு வந்த ஆரம்பகாலத்தில் அறிந்திருக்கவில்லை. எனினும் இதற்கான மறுப்பும் காலத்தின் கட்டாயம் என்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில் இங்கு இந்துக்களின் நம்பிக்கைகள் மட்டுமே மொழியின் பெயரால் பிரிக்கப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற பேதங்களை கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ காண்பதில்லை என்பதிலிருந்து நடுநிலை இந்துக்கள் அவர்களிடமிருந்து ஒற்றுமையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது எண்ணம்....!

இதற்கு மறுப்பு எழுதினால் பதிவின் நீளத்தை குறைப்பது மிகவும் கடினம்
 இருந்தாலும் முயற்சிக்கிறேன். முதலாவதாக இன்று பெரும்பான்மையாக அனைவராலும் ஏற்கப்படும் மிகப் பழமையான இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்தே ஆரம்பிக்கலாம் என்றுள்ளேன். அதன் அடிப்படையில் கடவுள் பற்றிய தகவல்கள் தொல்காப்பியத்திலேயே அதிகம் உண்டு. தொல்காப்பியத்தில் உள்ள கடவுள் பற்றிய தகவல்களை பார்ப்பதற்கு முன்பு  நாம் கவனிக்கவேண்டியது என்னவெனில் தொல்காப்பியம் என்பது ஒரு இலக்கணநூல். அதாவது ஒரு இலக்கண நூலிலேயே கடவுளைப் பற்றிய தகவல்கள் வருகிறது எனில் தமிழர்கள் இறைசார்ந்த பண்பாட்டு கலாச்சாரங்களுக்கு எத்தனை முக்தியத்துவம் கொடுத்திருப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தொல்காப்பியத்தில் திணை தெய்வங்களாக #திருமால், #முருகன், #இந்திரன், #வருணன், #கொற்றவை போன்ற தெய்வங்களை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக,

"மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே"

#விளக்கம் : மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும், சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும், வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும், இந்நிலங்கள் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லப்படும் என்கிறார்...!

"மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
#கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”

மேற்கூறிய தொல்காப்பிய நூற்பாவின் மூலம் பாலை நிலத்திற்குரிய கடவுளாக கொற்றவை இருந்துள்ளாள் என்பதை அறிவதோடு இந்த திணை தெய்வங்களை தாண்டி தத்துவப்பொருளாகவும் இறைவன் இருந்துள்ளார் என்பதை கீழ்ககாணும் வரிகள் மூலம் உறுதி செய்யலாம்,

"காமப்பகுதி கடவுளும், வரையார்,
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்"

இப்படியாக ஐந்து திணைகளை வகுத்து ஒவ்வொரு திணைக்கும் தனித்தனி தெய்வங்களை வகுக்கும் தொல்காப்பியர் திணை தெய்வங்களை தவிர்த்து தத்துவப்பொருளாகவும் இறைவனை சுட்டுவதை காண்க. இது தவிர்த்து கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வரும் மூன்று சிறப்பியல்புகள் பற்றி கூறுகையில்,

"கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

இவ்வாறாக தொல்காப்பியமானது ஐந்து திணை தெய்வஙகளையும் தத்துவப்பொருளாக இறைவனையும் கடவுள் வாழ்த்தோடு சேரந்து வரும் சிறப்பியல்புகள் பற்றி கூறுவதோடு நில்லாமல் பால்வரை தெய்வம் என்று #அர்த்தநாரீஸ்வரரான சிவபெருமானையும் குறிப்பிடுவதாக கீழ்க்காணும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய தெய்வச்சிலையார் குறிப்பிடுகிறார்....!

"காலம் உலகம் உயிரே உடம்பே
#பால்வரை_தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயிரைந் தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉங் கிளவியெல்லாம்
பால்பரிந் திசையா உயர்திணை மேன"
(சொல்லதிகாரம்-58)

இங்கு #பால்வரை தெய்வம் என்பது வினைகளை வகுக்கும் முழுமுதற் கடவுள் அதாவது  ஆணாகவும்  பெணாகவும் திருநங்கை எனும் வடிவிலும் அருள் பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரரே பரம்பொருள் என்று தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களில் முக்கியமானவரான தெய்வச்சிலையார் குறிப்பிடுகிறார். தெய்வச்சிலையாரின் ஒத்த கருத்தையே  #நச்சினார்க்கினியரும் #சேனாவரையரும் சொல்கின்றனர். அதாவது வினைகளை வகுக்கும் பரம்பொருளைத் தான் தொல்காப்பியர் பால்வரை தெய்வம் என்று சொல்வதாக உரை எழுதியுள்ளனர்.....! 

இவ்வாறாக தமிழர்களின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே இத்தனை கடவுள் பற்றிய குறிப்புகள் எனும்போது தமிழர்களின் பழமையான இலக்கியங்கள் கடவுள் பற்றி பெரிதாக பேசவால்லை என்ற BBC ன் அந்த கட்டுரையை எப்படி ஏற்க முடியும்???? இப்படியாக திருக்குறள், அகநானூறு, புறநானூறு என்று ஒவ்வொரு பழமையான இலக்கியங்களை தொகுத்து அதில் வரும் இறைவன் பற்றிய தொன்மங்களை எழுதினால் BBC க்கு மறுப்பு என்று 100 பாகங்கள் எழுதினாலும் முடியாத அளவுக்கு தமிழர்களின் வாழ்வியலில் இறை நம்பிக்கை முக்கியமானது. அடுத்ததாக திருக்குறளை எடுத்துக்கொண்டால் உலகக்காரணனான இறைவனில் துவங்கி, திருமால், இந்திரன், எமன், லட்சுமி, அலட்சுமி, வேதம், வேள்வி, தேவர்களுக்கு பூஜை செய்தலில் துவங்கி இறைவன் பற்றிய தகவல்கள் ஏராளமாக உள்ளது. உதாரணமாக,

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

#பொருள் : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

"பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்"

#மணக்குடவர்_உரை: பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர்கள் இறைவனுடைய திருவடியை பற்றுபவர்களே ஆனால் இறைவனது திருவடியைச் சேராதவர்களால் பிறவியாகிய பெருங்கடலை கடக்க முடியாது. இவை தவிர்த்து தனித்தனி இறைவனாக குறிப்பிடவேண்டுமானால்,

#சிவன் : முதல் பத்து குறள்களும் திருமாலுக்கும், சிவனுக்கும் பொதுமையான உவமைகளே ஆகும். அதிலும் ஆதிபகவன் என்பது சிவனையே குறிக்கும். இருந்தாலும் தனித்து கூறவேண்டுமாயின்,

"பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க 
நாகரிகம் வேண்டு பவர்"

🔴இதில் எங்கே சிவன் வருகிறார் என்று கேட்பவரகள் ஓரமாக செல்லவும், முதல் குறளில் வரும் ஆதிபகவன் முதற்கொண்டு எண்குணத்தான் முதலான நஞ்சுண்டவர் வரை சிவனுக்கு உவமையாக எழுதப்பட்டதுதான் என்பது எனது புரிதல்

#அகரமுதலோன்:

https://m.facebook.com/story.php?story_fbid=1576410872529683&id=100004823560851

ஔவையார் நேரடியாக சிவனை குறிக்கும் திருக்குறள்:

https://m.facebook.com/story.php?story_fbid=1650617255109044&id=100004823560851

திருவள்ளுவர் திருநாள் எது?:

https://m.facebook.com/story.php?story_fbid=1659282530909183&id=100004823560851 🔴

#திருக்குறளில்_திருமால் :

https://m.facebook.com/story.php?story_fbid=1543431112494326&id=100004823560851

"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு"

இதில் வரும் அடி அளந்தான் என்பது திருமாலையே குறிக்கும் என்பதை பரணர் திருக்குறளுக்கான புகழ்மாலையான திருவள்ளுவமாலையில் எழுதிய பாடல்கள் மூலம் அறியலாம்.

"மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான்-வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவஎல் லாம்அளந்தார் ஓர்ந்து"

அதாவது திருமாலே குறளைக்கொண்டு  இரண்டடியால் உலகை அளந்தான். என தமிழ்ப்புலவன் திருவள்ளுவரை திருமால் என்கிறார். இது தவிர்த்து,

"தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்?
தாமரைக் கண்ணான் உலகு"

#திருக்குறளில்_லட்சுமி :

"அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்"

"மடியுளான் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்"

"அறனறிந்து வெஃகா  அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே  திரு"

(விளக்கங்கள் வேண்டுமாயின் பின்னூட்டத்தில் வினவுங்கள்)

#திருக்குறளில்_இந்திரன் :

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி"

#திருக்குறளில்_எமன் :

"கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்"

"கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து"

"கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று"

"கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை"

#பிரம்மா : (உலகியற்றியான்)

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்"

#வானோர்கள் : (தேவர்கள்)

"சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு"

இப்படியாக திருக்குறளிலும், தொல்காப்பியத்திலும் உள்ள கடவுள் பற்றிய பகுதிகளை தனித்து குறிப்பிட்டு செல்லுமிடத்தெல்லாம் இவர்களெல்லாம் தமிழ் கடவுள்கள், ஆங்கில கடவுள்கள் என்றொரு கூட்டம் வந்தாலும்,
இவர்களை கடந்துசென்று நமது பதிவை முடிப்பதற்காக அடுத்த இலக்கியமாக கண்ணில் படுவது புறநானூறு. ஆக புறநானூற்றில் கடவுள் பறறிய தகவல்கள் உண்டா என்பதையும், யார் யாரை கடவுளாக குறிப்பிடுகிறது என்பதையும் பார்ப்போம்....!

#புறநானூறு : வழக்கம்போல புறநானூற்றிலும் சிவன், திருமால் முருகன் இந்திரன் போன்ற தெய்வங்களின் உவமைகளே மிகுதியாக உள்ளன என்பதை கூறிக்கொண்டு தொடர்வோம்🧘🚶🚶🚶

#சிவபெருமான்:

"கண்ணி கார்நறுங் கொன்றை, காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ஏறே, சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று, அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே"

பாரதம் பாடிய பெருந்தேவனார் போற்றும் இந்த தெய்வமானது எம்பெருமான் சிவனே ஆகும். இதற்கெல்லாம் தனித்தனியாக விளக்கம் எழுதினால் பதிவு நீண்டுகொண்டேச் செல்லும் என்பதால் தவிர்க்கிறேன்.

#திருமாலும்_பலராமனும் :

"பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமி யோனும்என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ?"

#முருகன்_சிவன்_முதலான_நாற்பெரும்_தெய்வங்கள் :

"ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, 
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்"

#வஜ்ரமுடையானான_இந்திரன் :

"திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசும் கறங்க
ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே"

#இராமன் :

"கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு"

இப்படியாக தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு முதலான மூன்று நூல்களில் ஆங்காங்கே ஒவ்வொரு பாடல்வீதம் பார்த்ததற்கே பதிவு இவ்வளவு நீளமாகிறது. இது தவிர்த்து நற்றிணை, குறுந்தொகை,
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு,பட்டினப்பாலை , மலைபடுகடாம் போன்ற எட்டுத்தொகை நூல்களிலும்,

நாலடியார், நான்மணிக்கடிகை,
இன்னா நாற்பது, இனியவை நாற்பது,
களவழி நாற்பது, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது,
ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களிலும் உள்ள கடவுளர் பற்றிய தகவல்களை தொகுத்தால் வாழ்நாள் முழுவதும் பாகம் பாகமாக எழுதிக்கொண்டே இருக்கும் நிலை உருவாகும் என்பதால்  இம்மூன்று நூல்களுடன் பதிவை நிறைவு செய்கிறேன்.....!

கூடுதல் தகவலாக ஒருசில இலக்கியங்கள் தனித்தனி தெய்வங்களை சிறப்பிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. ஒரு தெய்வத்திற்காக ஒரு தனித்தமிழ் இலக்கியம் படக்க வேண்டுமெனில் தமிழர்கள் தெய்வங்களுக்கு எத்தகு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை அறியலாம். உதாரணமாக,

முருகன் : திருமுருகாற்றுப்படை, திருப்புகழ்.
திருமால், முருகன் : பரிபாடல்.
சிவன் : திருமுறைகள்.
திருமால் : நாலாயிர திவ்ய பிரபந்தங்கள்.

இறுதியாக இல்லை இல்லை இதெல்லாம் தமிழ் கடவுள்கள் ஆரிய பார்ப்பான் இந்து கடவுள் ஆக்கிவிட்டான் என்று கதறாதீர்கள். ஏனெனில் ஒரு இஸ்லாமியர் அவர்களின் நம்பிக்கைக்கு உட்பட்ட கடவுளை அரேபிய கடவுள், தமிழ் கடவுள், ஹிந்தி கடவுள் என்று பிரிக்காமல் உலகத்திற்கான, அனைத்து மொழிக்குமான ஒரே இறைவன் #அல்லாஹ் என்று ஒருமித்த குரலுடன் இஸ்லாம் என்ற பெயரில் அழைப்பதோடு அதை கொண்டாடுகிறார்கள். அதுபோல கிறிஸ்தவர்களும் அவர்களின் நமபிக்கைக்கு உட்பட்ட தெய்வங்களை ஹிப்ரு கடவுள், லத்தீன் கடவுள் , ஆங்கில கடவுள், தமிழ் கடவுள் என்று பிரிக்காமல் உலக மக்களுக்கான ஒரே இறைவன் #கர்த்தரே என்று கிறிஸ்தவம் என்ற பெயரில் ஒருமிக்கிறார்கள். அதோடு உலகின் பெரும்பகுதி மக்களை தனதுவசம் கொண்ட இந்த இரு மதங்கள் தன்னை மொழி ரீதியாக பிரிக்காதபோது நாம் மட்டும் ஏன் இத்தகு பிரிவினைகளை காண வேண்டும் என்று சிந்தியுங்கள். இத்தகு  இக்கூற்றுகளை உங்களால் ஏற்க முடியவில்லை எனில் நீங்கள் தமிழ் கடவுள் என்று தாராளமாக அழையுங்கள்.  ஆனால் முப்பாட்டன் பெரும்பாட்டன், ஆதிப்பாட்டன் என்று கூறி தமிழன் கடவுள் நம்பிக்கை அற்றவன் என்ற முட்டாள்த்தனமான வாதங்களை விதைக்காதீர்கள். அதே சமயம் இவை இந்து தெய்வங்கள் என்றோ, இந்தியாவின் தெய்வங்கள் என்றோ, உலகத்திற்கான தெய்வங்கள் என்றோ எழுதும் என்னை தடையாதீர்கள். நீங்கள் தடுத்தாலும் எனது எழுத்துக்கள் நிற்கப்போவதில்லை. ஏனெனில் நான் ஆதரவுகளை விட விமர்ச்சனங்களை எதிர்கொண்டே இந்நிலைக்கு வந்துள்ளேன்....!

ஓம் நமசிவாய 🔥

 -பா இந்துவன்,
  06.02.2021.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...