சனி, 22 மே, 2021

சமஸ்கிருதம் சில கேள்விகள்

சமஸ்கிருதமும் சில கேள்விகளும் :

சிறிது நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருக்கும் எனக்கும் நடந்த சிறு விவாதத்தின் ஒரு பகுதியை கீழே காண்போம்.

(அதை தற்கால சூழலுக்கு ஏற்ப சுப்பு அவர்களின் எழுத்துகளையும் இணைத்து பதிகிறேன்)

நண்பர் : உங்கள் கடவுளுக்கு தமிழ் தெரியாதா? ஏன் தமிழில் பூஜை செய்ய கூடாது?

இந்துவன் : கடவுளுக்கு மொழிகள் கிடையாது. இந்த மொழிதான் எனக்கு உகந்தது மற்றவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இறைவன் எந்த இடத்திலும் யாரிடமும் கூறியதாக சரித்திர சான்றுகளும் இல்லை. புராண, இதிகாச ஆதாரங்களும் இல்லை. இறைவனை வழிபடும் போது தமிழ் மொழியிலும் வழிபடலாம். சமஸ்கிருதத்திலும் வழிபடலாம். இதுவரை எழுத்து வடிவமே இல்லாத நரிக்குறவர் பாஷையிலும் வழிபாடு நடத்தலாம். இறைவன் அதை ஒரு போதும் ஏற்காமல் விலக்கி வைப்பது கிடையாது.

இதை சாதாரணமாக முகநூலிலே உட்கார்ந்து கதை பேசும் உங்களாலும், என்னாலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றால் கோடிக்கணக்கான பொற் காசுகளை கொட்டி ஆலயங்களை உருவாக்கினார்களே மன்னாதி மன்னர்கள் அவர்களால் எப்படி அறிந்து கொள்ளாமல் போக முடிந்தது?  நமது மன்னர்கள் என்ன முழு முட்டாள்களா? வேற்று நாட்டை வெல்வதற்கு படை திரட்ட தெரிந்த அவர்களுக்கு, உலகத்தை வெல்ல கனவு கண்டு, கடல் கடந்து கப்பல் ஒட்டி, வெற்றி பயணம் மேற்கொண்ட அவர்களுக்கு தமிழில் வழிபாடு நடத்தினால் இறைவன் ஆத்திரப்படமாட்டான் என்ற இரகசியம் எப்படி தெரியாமல் போயிற்று? ஏன் இதை நீங்கள் சிந்திக்கவில்லை?

நண்பர் : சமஸ்கிருதத்தில் இதுவரை ஒரு இலக்கியமும் எழுதப்படவில்லையே?ஒருவேளை  யாராவது எழுதி இருந்தால் எழுதப்பட்ட இலக்கியங்களின் பெயர்கள் என்னென்ன? 

இந்துவன் : வேதங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மாஹாபாரதம்,  ஹரிவம்சம், ஐந்திர வியாகரணம், அஷ்ட்டாத்யாயி, கௌதம தர்ம சூத்திரம், மற்றும் புராணங்கள் என்று அதிகமாக உள்ளது.

நண்பர் : தமிழ் புலவர்கள் யாராவது சமஸ்கிருத நூல்கள் எழுதியுள்ளனரா ?

இந்துவன் : ஆம். வடமொழியில் காவ்யாதர்சம் எழுதிய அறிஞர் தமிழ்நாட்டுக் காஞ்சிபுரத்தைச் சார்ந்த #தண்டி என்ற தமிழர். முதன் முதலில் தமிழுக்கு இலக்கண நூல் எழுதிய தொல்காப்பியருக்கு குருவாம் அகத்தியர் எழுதிய வடமொழி நூல் #ஆதித்ய_ஹிருதயம். #அத்வைத நூல்கள் பல எழுதிய சான்றோர் #சங்கரர் தென்னிந்தியர். #விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர் #இராமாநுசர் காஞ்சிபுரப் பகுதியைச் சார்ந்த தமிழர். பரத நாட்டியம் பற்றியும் கர்நாடக சங்கீதம் பற்றியும், சமையல் முதலியன பற்றியும் உள்ள வடமொழி நூல்கள் பல, தமிழ்நாட்டுக் கலைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் எழுதியவை தான்...!


நண்பர் : தமிழர்களின்  வரலாற்றில் சமஸ்கிருதம் இருந்ததா? ஆம் எனில் எப்போதில் இருந்து?

இந்துவன் : தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல் தமிழில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. வடசொற்களைத் தமிழில் எடுத்தெழுதுவது பற்றி எழுதுகையில்.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
(தொல். சொல். 395)

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்
(தொல். சொல். 396)

என்று விளக்குகிறார். எனில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே வடமொழி தமிழர்களுடன்  இருந்தது என்பதை அறியலாம்.

நண்பர் : ஏன் வடமொழியை தமிழ் புலவர்களில் ஒருவரும் போற்றவில்லை? அதாவது ஏன் முக்கியத்துவம் தரவில்லை?

இந்துவன்: உங்கள் கண்ணுக்கு அப்படி தெரிவதால் அது உண்மை ஆகிவிடுமா? தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய #சுந்தரம்_பிள்ளை  அவர்கள் வடமொழி பற்றி கூறியதாவது,

"வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி" என்று வாழ்த்துகிறார். "வடமொழியும் நமது நாட்டுமொழி தென்மொழியும் நமது மொழிகளே என்பது என் கருத்து’ என்கிறார் திரு.வி.க.

"அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்
#தமிழ்ச்சொல் #வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே"  

‌என்கிறார் ஆசான் திருமூலர்...!

"மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத் தமிழ்ச்சொலும்
வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே"
என்கிறார் திருஞானசம்பநத்ர்.

நண்பர் : ஆசான் #திருமூலர் ஆரிய பார்ப்பானை கோயிலுக்கு வந்து பூஜை செய்யக்கூடாது என்கிறார் ஏன்?

இந்துவன் : அதாவது அதன் பொருள் தன்னை பிறப்பால் மட்டும் பார்ப்பான் என்று அழைப்பவனை. அதாவது வேதம் அறியாது பிரம்மம் அறியாது தன்னை பிறப்பின் அடிப்படையில் பார்ப்பான் என கூறி பூஜை செய்பவன் சிவன் கோயலில் வந்து பூஜை செய்யக்கூடாது என்கிறார். நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள்...!

அதாவது ஆசான் திருமூலர் இங்கு அந்தணர்களின் ஒழுக்கம் பற்றி பேசுகிறாரே அன்றி ஆரிய பார்ப்பானை அல்ல😂👇👇👇


நண்பர் : கடவுள் சிலைகளை செதுக்கும் சிற்பிக்கு அந்த சிலையை தொடுவதற்கு ஏன் அனுமதி இல்லை? அவன் ஏன் பூநூல் அணிவதில்லை?

இந்துவன் : சிற்பியின் இலக்கணம் அதாவது ஒரு சிற்பி எவ்வாறு இருக்கவேண்டும் என்று சிற்பநூல் இலக்கணம் வகுத்துள்ளது எனில்,

"ஸ்தபதீநாம் சதுர்வேத தஸ; கர்மா விதியதே| ஸிகாயஜ்  ஞோபவீ தஞ்ச ஜபமாலா கமண்டலும் || கூர்மபீட: ஸிரச்சக்கரம் யோக வேஷ்டிர லங்கர் தம்| பீதவஸ்த்ரஸித  ப்ரஷ்டம் விபூதிர்க் கந்தலேபநம் || ஸிவிவமந்த்ரம் ஸிவத்யாநம் ஸிவபூஜா  விதீயதே |  ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸாநாம் ஹ்ருத யேத்யாந ஸில்பிநாம்."

அதாவது எவனொருவன் நான்கு வேதங்களையும் அறிந்தவனாயும் ; மரம், செங்கல், கருங்கல், உலோகம், சாந்து , மண், சுக்கான்கல், தந்தம் முதலியனவற்றில் உருவங்களை அமைக்கும் ஆற்றல் வாய்ந்தவானாயும் ; இயந்திரம், படம் முதலியன எழுதும் திறமை வாய்ந்தவனாயும் ; தலையிற் சிகையை உடையவனாயும் ; பூணூலைத் தரித்தவனாயும் ; பீதாம்பரம் அணிந்தவனயும் ; விபூதியையும் வாசனைச் சந்தனத்தையும் அணிந்தவனாயும்   மிருத்தலோடு, சிவபூசை செய்பவனாய், பிரம்மா விஷ்ணு மகேசுரரை இருதயத்தில்  தியானிப்பவனாய்  இருக்கின்றானோ அவனே சிற்பியாவான் என்பது இதன் பொருளாகும்.

நண்பர் : சூத்திரன் என்பது இழிவான சொல் தானே? நாம் அனைவரும் சூத்திரர்கள் தானே?

இந்துவன் : அதாவது நீங்கள் மேலே கேட்ட கேள்விக்கு பதிலாக நான் கூறிய சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் சூத்திரனான சிற்பி நான்கு வேதங்களை கற்று, குடுமி வச்சி, பூநூல் அணிந்து பட்டு பீதாம்பரம் கொண்டு சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்துள்ளான் என்பதுதானே  பொருள்?

உதாரணமாக பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான் அதில் வரும் வாயிலார் புராணத்தில்,
"தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்" என்றும்,  இளையான்குடி மாற நாயனார் புராணத்தில்.
"வாய்மையில் நீடு சூத்திர நற்குலம்" என்றும் இரு நாயன்மார்களின் குணங்களை உயர் பதத்தில் தான் எழுதி இருப்பதை வைத்து சூத்திரன் என்ற சொல் வரலாற்றில் இழிநிலையில் பயன்படுத்தப்படவில்லை என்பதுதானே பொருள்?

நண்பர் : சமஸ்கிருதம் செத்த மொழிதானே? வழக்கொளிந்த மொழியை இன்னும் ஏன் தூக்கி பிடிக்கிறீங்க?

இந்துவன் : ஒருவேளை சமஸ்கிருதம் செத்த மொழி எனில் நான் கீழே குறிப்பிடும் சம்பவத்திற்கு என்ன சமாதானம் சொல்வீர்கள்???

இன்று நாம்மால் பரவலாக அறியப்படும் பெயர்களான  மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி, ஜெகதீசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், என்.கே.கே.பி.ராஜா, கீதா ஜீவன், சுரேஷ் ராஜன், ஜெகத்ரட்சகன், ஜெ. ஜெயலலிதா, சசிகலா நடராஜன், டி.டி.வி. தினகரன், இ. மதுசூதனன், டி. ஜெயகுமார், வா. மைத்ரேயன், விசாலாட்சி நெடுஞ்செழியன், மருத்துவர் ராமதாஸ், ஜி.கே. வாசன், எம். கிருஷ்ணசாமி, ப. சிதம்பரம், டி. சுதர்சனம், சி. ஞானசேகரன், டி.யசோதா, ஜே. ஹேமச்சந்திரன், வை. சிவ புண்ணியம், என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன், விஜயகாந்த், பண்ருட்டி எஸ். ரமச்சந்திரன், சொ.மு. வசந்தன், எல். கணேசன், செஞ்சி ந. ராமச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் கார்த்திக், பிரபு, அஜித், சரத்குமார், மாதவன், சூர்யா, விக்ரம், சத்தியராஜ், பார்த்திபன், பிரசாந்த், விவேக், ஜனகராஜ், ராதாரவி, அர்ஜுன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் மணிரத்னம், கே. பாக்யராஜ், எஸ்.பி. முத்துராமன், கே.எஸ் ரவிக்குமார், எம்.எஸ். விசுவநாதன். தேவா இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வாலி, பாலகுமாரன், இந்திரா செளந்தரராஜன், பா. விஜய் போன்ற பெயர்கள் சமஸ்கிருத தொடர்புடனேயே இருக்கும்போது  அது எப்படி செத்த மொழி ஆகும்?

அரசியல், திரைப்படம், இசை இலக்கியம் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சமஸ்க்ருதப் பெயர் இல்லாத துறைகள் எதாவது உள்ளதா?தமிழகமெங்கும் விரவிக்கிடக்கும் ஊர்ப் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது. ஆனால் அவை சமஸ்க்ருத பெயர்கள் என்பதுதான் உணரப்படவில்லை. உங்கள் கவனத்திற்காக இதோ அந்தப் பட்டியல்,

கோபாலபுரமும், கபிஸ்தலமும்
திரிசூலம், மகாபலிபுரம், ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், விருத்தாசலம், சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம், ஜெயங்கொண்டான், கங்கை கொண்ட சோழபுரம், சுவாமிமலை, வேதாரண்யம், மகாதானபுரம், கோவிந்தபுரம், ஸ்ரீ ரங்கம், தர்மபுரி, மகேந்திரமங்கலம், அம்பாசமுத்திரம், ராமகிரி, கிருஷ்ணாபுரம், தென்காசி, சதுர்வேதமங்கலம், திரிபுவனம், ஸ்ரீ வைகுண்டம், ராமேஸ்வரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, வாணசமுத்திரம், தனுஷ்கோடி, அனுமந்தபுரம், வாலிகண்டபுரம், ராஜபாளையாம், ஸ்ரீ வில்லிபுத்தூர், குலசேகரபட்டினம், உத்தமதானபுரம், சிவகாசி, பாபநாசம், ஸ்ரீ நிவாசநல்லூர், பசுமலை, பட்சிதீர்த்தம், சுந்தரபாண்டியபுரம், சுவேதகிரி, .. இதுமட்டுமா? முதன்மையான தமிழ் நாளிதழ்களின் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது? தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன் ஆகியவை முதன்மையான தமிழ் நாளிதழ்கள், தினம் என்பது சமஸ்க்ருதச் சொல் தான் எனில் சமஸ்கிருதம் எப்படி செத்த மொழி ஆகும்?

நண்பர் : சமஸ்கிருதம் பிராமணர்களுடைய மொழி அல்லவா? 

இந்துவன் :  கர்நாடகத்தில் பிராமணரல்லாதோர் நடத்தும் சமஸ்க்ருதப் பள்ளிகள் 30 உள்ளன. தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு பிளஸ்2 தேர்வில்
சம்ஸ்க்ருத மொழிப் பிரிவில் செல்வி முஸிபிரா மைமூன் என்ற இஸ்லாமிய பெண் 200 க்கு 198 மதிப்பெண் பெற்றார்.

கௌரிசங்கர் என்ற தொழிலாளி சென்னைப் பல்கலைக் கழகத்தில் சம்ஸ்க்ருத முனைவர் பட்டத்திற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவர் பிராமணரல்லாத வகுப்பைச் சேர்ந்தவர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த லுப்னா மரியம் என்ற எழுத்தாளர் சம்ஸ்க்ருதம் படிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார். இவருடைய மார்க்கம் இஸ்லாம்.

’ஏசு காவியம்’ என்ற சம்ஸ்க்ருத நூலை எழுதிய பாதிரியார் ஒருவர் அதற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார். சென்ற வருடம் சென்னையில் நடந்த வால்மீகி ராமாயணம் வினாடி-வினா நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரி கல்லூரி மாணவிகள் முதல் பரிசு பெற்றனர். மின்னநூருதின் என்ற இஸ்லாமிய அறிஞர் ஆதிசங்கரரின் ஆன்ம போதத்தை தமிழ் செய்யுளாக எழுதியுள்ளார். அந்த நூலை ரமண பகவானுக்கு அவர் சமர்ப்பணம் செய்ததாக ரமணரின் வரலாற்றில் சொல்லப்படுகிறது.

உபநிடதங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி விவேகானந்தர் பிராமணரில்லை.இதிகாச தலைவர்களான ராமனும், கிருஷ்ணனும் பிராமணர்கள் இல்லை. ராமன் க்ஷத்திரியன், கிருஷ்ணன் யாதவன். வேதங்களைத் தொகுத்துக் கொடுத்த மகரிஷி வியாசர் பிராமணர் அல்லர். தெய்வீக அருள் பெற்ற கவிஞர்களான வால்மீகியும் காளிதாசனும் பிராமணர்கள் அல்ல.

இத்தாலியைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் வால்மீகி ராமாயணப் பதிப்பிற்காக 30 வருடங்கள் உழைத்திருக்கிறார். ஜெர்மன் அறிஞர்கள் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் சம்ஸ்க்ருதத்துறையில் அளித்த உழைப்பை மறக்க முடியாது. இவர்கள் யாவரும் பிராமணர்கள் அல்ல.

சீனாவின் ஷங்காய் நகரில் காளிதாசருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இருப்பவர்கள் பிராமணர்கள் அல்ல. பிராமணரல்லாத சம்ஸ்க்ருத அறிஞர் ஒருவரைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்; அவர் அம்பேத்கர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காகக் கூடிய அவையில் 10.09.1949 அன்று டாக்டர் அம்பேத்கர் தீர்மானமொன்றைக் கொண்டுவந்தார். டாக்டர் பி.வி. கேஸ்கர் மற்றும் நஸிமத்தீன் அஹ்மத் ஆகிய உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

சமஸ்க்ருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். அரசியல் காரணங்களுக்குகாக அம்பேத்கரின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
சோஷலிஸ்ட் தலைவரான ராம் மனோகர் லோகியாவும் சம்ஸ்க்ருத ஆதரவாளர்தான். இவரும் பிராமணரல்ல. ‘உலகிலேயே புராண இதிகாசச் செழிப்புமிக்க நாடு இந்தியாதான். இந்தியாவின் மகத்தான இதிகாசங்களும் புராணங்களும் நூற்றாண்டுகளாக இந்திய மக்களின் உள்ளங்களில் அறுபடாத பிடிப்பைக் கொண்டுள்ளன’ என்றார் டாக்டர் லோகியா.

மேற்கத்திய சாஸ்திரீய இசைமேதையான பீதோவன் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தின் சாராம்சத்தை தமது கைப்பட எழுதி தம் மேஜையின் மேல் வைத்திருந்தாரம். இவர் பிராமணரல்ல. உண்மை இப்படி இருக்க எப்படி சமஸ்கிருதத்தை எப்படி பிராமணர்களின் மொழி என்கிறீர்கள்?

தொடரும் : 🧘🚶🚶🚶

(Source : எழுத்தாளர் சுப்பு அவர்கள் தமிழ் இந்து என்ற  இணையதளத்திலிருந்து  சமஸ்கிருதமும் சில கேள்விகளும் என்ற கட்டுரையிலிருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...