ஞாயிறு, 4 அக்டோபர், 2020

சங்க இலக்கியங்களில் அதிசயம்

இப்பூமியைத் தவிர வேறு எங்காவது மனிதனால் வாழ முடியுமா என்று உலகநாடுகள் அனைத்தும் தேடித்தேடி பணத்தையும், நேரத்தையும் செலவு செய்ததே மிச்சம். ஏன் அவர்கள் இந்த தேடலில் தோல்வியுறுகின்றனர் என்பதற்கு முக்கிய காரணம் பூமியைத் தவிர வேறு எங்கும் காற்று இல்லை என்பதாகும்....!
பூமியில் தான் காற்று மண்டலம் உள்ளது. இந்த  காற்று மண்டலமே சூரியனிலிருந்தும், நட்சத்திரங்களிலிருந்தும், வருகின்ற ஆபத்தான புற ஊதாக் கதிர்களை தடுத்து நிறுத்துகிறது. இதனாலேயே இப்பூமி மனிதனும், பல்வேறு உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற பகுதியாக உள்ளது....!

இது தவிர, பூமியில் காற்றழுத்தம் தகுந்த அளவில் உள்ளது. ஆகவே தான் பூமியில் நீரானது  நீராவி வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் உள்ளது. ஆனால் இந்த காற்றானது பூமியைத் தவிர வேறு எங்கும் இருக்குமா என்று பணத்தை வாரி இறைத்து  தேடும் இந்த காலகட்டத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்பே பூமியைத் தவிர காற்று வேறு எங்கும் இல்லை என்பதை கண்டுபிடித்தவன் சங்கத் தமிழன்  என்பது நமக்கு சற்று வியப்பான செய்திதான்....! 
ஆம் இப்பூமியை தவிர மனிதன் வாழ்வதற்கு ஏற்ற பகுதிகள் இல்லை என்பதையும் பூமியில் தான் காற்று உண்டு என்பதையும் வள்ளுவன் பார்வையில் பார்த்தோமேயானால்,

"அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு
மல்லல்மா ஞாலம் கரி"

அதிகாரம்: அருளுடைமை (குறள் எண்:245)

அதாவது அருளுடையவனாக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர் என்று பூமியை காற்று உள்ள பகுதி என்றும் அதன் மேன்மையை அருளுடையவர்களுடன் ஒப்பிடுகிறார்.....!

இங்கு வள்ளுவன் பூமியில் தான் காற்று உண்டு என்பதை "வளி வழங்கும் பூமி" என்று குறிப்பிடுவதை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு மூன்று பாடல்களில் சொல்கிறது. ஆக திருக்குறளுக்கு முன்பானதுதான் புறநானூறு என்ற கூற்று ஆராயப்படவேண்டியதோடு கிமு 31 ல் தான் திருக்குறள் எழுதப்பட்டதா என்ற கேள்விக்கு இங்கு திரும்பவும் கொடுக்கு முளைக்கிறது. இந்த ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்துவிட்டு பதிவை தொடர்வோம்...!

புறநானூறு:

"மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய இருசுடர் கண்எனப் பெயரிய
"வளியிடை வழங்கா" வழக்கரு நீத்தம்
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து
பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப்"

பாடியவர்: மார்க்கண்டேயனார்.
அதாவது இடம் விட்டு இடம் பெயரும் இயல்புடைய காற்றும் செல்லாத இடமாகிய, எவ்வுயிரும் செல்லுதற்கரிய ஆகாயத்தைக் கடந்து, வயிரம் வைத்து இழைத்த சக்கரத்தின் குடத்தில் விளங்கும் மணிகள் பொருந்திய ஆரக்கால்களையுடைய பொன்னாலான ஆழிப்படையை போரின் முன்னே ஆற்றலுடன் செலுத்திப் பகைவரை அழிப்பவனாக ஓர் அரசனை உவமையாக்குகிறார் மார்க்கண்டேயனார்....!

இங்கு இடம் விட்டு இடம்பெயரும் தன்மையுடைய காற்றானது பூமியைத் விட்டு எங்கும் செல்ல இயலாதது என்றும் பூமியைத்தவிர வேறு எங்கும் உயிர்கள் வாழ முடியாது என்பதையும் வள்ளுவர் கூறும் கருத்திற்கு ஒத்த கருத்தையே கூறுகிறது. அதோடு இப்பாடலை பாடிய மார்க்கண்டேயர் என்ற பெயரில் புலவர் சங்க காலத்தில் இருந்திருக்கிறார் என்பது சற்று வியப்பான செய்தி. ஏனென்றால் பதினெட்டு புராணங்களில் மார்க்கண்டேய புராணமும் ஒன்று. அதுபற்றி பின்னர் ஒருநாள் பேசலாம்...!

அதோடு பாடாண் திணையில் வெள்ளைக்குடி நாகனார் எனும் புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மீதுபாடிய இன்னொரு பாடலிலும் "வளி இடை வழங்கா வானம்" என்ற சொல்லாடல் இடம்பெற்றுள்ளது...!

"நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்"
அதாவது நாடுகெழுச் செல்வத்துப் பீடுகெழு வேந்தனே! நீர் செறிந்த பெரிய கடலை எல்லையாக 
காற்று நடுவே ஊடுருவிச் செல்ல முடியாத வானத்தால் சூழ்ந்த மண் செறிந்த இவ்வுலகில் குளிர்ந்த தமிழ்நாட்டிற்கு 
உரியவராகிய முரசு ஒலிக்கும் படையினை உடைய மூவேந்தருள்ளும் அரசு என்று சிறப்பித்துக் கூறப்படுவது 
உன்னுடைய அரசுதான் பெருமானே! என்று சோழனை புகழ்கிறார்...!
இங்கு "வளி இடை வழங்கா வானம்" என்ற வரிகளால் வழிமண்டல அடுக்கை தாண்டி காற்றால் செல்ல முடியாது என்றும் அங்கு காற்று இல்லை என்றும் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது....!

அதோடு குறுங்கோழியூர்கிழார்.
சேரமான் மீது பாடிய இன்னொரு புறப்பாடலிலும் "வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும்" என்ற வரிகள் மூலம் காற்று வாழும் திசையையும், ஏதுமில்லாத ஆகாயத்தையும் என்று எல்லாவற்றையும் அளந்து அறிந்தாலும் உன்னை அளக்க முடியாது. என்று சேரமானை புகழ்கிறார். இங்கும் வளிமண்டலத்தை தாண்டி காற்று இல்லை என்பதை மிக அழகாக எடுத்துரைக்கிறார் புலவர்.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...