ஞாயிறு, 4 அக்டோபர், 2020

மகாபாரதமும் சங்க இலக்கியங்களும்

தமிழ் கூறும் நல்லுலகமும், பாரத பண்பாட்டின் இரு பொக்கிஷங்களில் ஒன்றான மகாபாரதமும்:

எனது தந்தை எனது சிறு வயதில் பீஷ்மர், துரோணர், கர்ணன், அர்ச்சுனன் போன்றவர்களின் வீரத்தை முதன்மைப்படுத்தி மகாபாரத கதைகளை எனக்கு சொல்லித் தருவார். நானும் காரணமே அறியாமல் கேட்டுக் கொண்டிருப்பேன். அப்போது நான் அறிந்திருக்கவில்லை இன்று இந்த அளவுக்கு மகாபாரதத்தின் மீது மோகம் கொள்வேன் என்று.....!
சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் மகாபாரதம் ஒளிபரப்பப்பட்டபோது அதை பலமுறை பார்த்திருந்தாலும் அதில் மிகைப்படுத்துதல் இருப்பதாகவே எனக்கு தோன்றியது. கூகுள் செய்து மகாபாரதத்தை படிக்க துவங்கினேன். ஆரம்பத்தில் எனக்கு கிடைத்த ஆதிபர்வத்தை படிக்க ஆரம்பித்தபோது எனக்கு எதுவும் புரியவில்லை. ஏனென்றால் அது அத்தனை கிளைக்கதைகளை கொண்டது. ஒரு கட்டத்தில் 1000 பக்கங்களுக்கு மிகாமல் இருந்த ஆதி பர்வத்தை புரிந்தோ புரியாமலோ ஆறு மாத கால இடைவெளியில் படித்து முடித்தேன்.....!
இருந்தும் எனது மோகம் அடங்கவில்லை. மகாபாரதம் சம்பந்தமாக எந்த ஆர்ட்டிக்கிள் வந்தாலும் அதை படிப்பதே எனது முதல் வேலையாக இருந்தது. சமீபமாக தான் நான் படித்த ஆதிபர்வமானது திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட
"The_Mahabharata" என்ற ஆங்கில நூலை தமிழாக்கம் செய்தது பேரருளாளர் திரு அருள் செல்வ பேரரசன் என்பதை அறிந்து அவரது இந்த மகத்தான பணியை கண்டு வியப்படைந்தேன்‌. அதோடு அவர் இலவசமாக ஆன்லைனில் படிக்கவும் ஏற்பாடு செய்ததை அறிந்து இன்றுவரை எனது மோகத்தை அங்கே ஆற்றிக்கொள்கிறேன். நான் பெற்ற இன்பத்தை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்....!

முழு மகாபாரதம் தமிழில்...!👇👇👇


பொதுவாக நாம் இதிகாசங்கள் குறித்து பேசும்போதெல்லாம் இங்கே அவ்வப்போது ஒரு திரிபுவாதம் எழுகிறது. அதாவது இந்த இதிகாசங்களான மகாபாரதமும் இராமாயணமும் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் என்று ஒரு தரப்பினரும், தமிழர்களிடமிருந்து திருடி எழுதப்பட்டது என்று இன்னொரு தரப்பினரும் அவரவர் பசியை அவரவர் புரிதலுக்கேற்ப ஆற்றி வருகின்றனர்.....!

ஆனால் இந்த இதிகாசங்கள் பிராமணர்களால் எழுதப்பட்டு  பிராமணர்களின் உயர்வையும், சிறப்பபையும் பற்றி எழுதுவதே  நோக்கமாக இருந்திருந்தால் இதிகாச கதாநாயகர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் பிராமணர்களாகவே இருந்திருக்க வேண்டும். அதோடு இதை எழுதி நமக்கு அளித்தவரும், இதை போற்றியவர்களும் பிராமணர்களாக தான் இருந்திருக்க வேண்டும்....!

ஆனால் இராமாயணத்தின் கதாநாயகன் ராமனோ சத்ரியன், மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணரோ யாதவ குலத்தை சேர்ந்தவர். அதோடு மகாபாரதத்தில் வர்ணமாற்றம், குல வழக்கங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றுவது போன்ற பல தத்துவங்கள் புதைத்துள்ளதே அன்றி பிராமண பெருமையோ உயர்வோ இங்கு இல்லை. கர்ணன், ஏகலைவன் என்று கம்பு சுற்றுபவர்கள் அவரவர் லாபிக்காவே அவர்களை தூக்கி பிடிக்கின்றனரே  அன்றி நிதர்சனத்தை ஏற்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை....!

ஆனால் அதே இதிகாசங்களில்  கெட்டவனாகவும், வில்லனாகவும் காட்டப்படும் ராவணன் சுத்தமான பிராமணன். அதோடு பாரதத்திலும் பழையன கழிந்து புதியன புகுதல் என்ற தத்துவமே மேலோங்கி நிற்கிறது. ஆக மகாபாரதம் உண்மையா பொய்யா என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு மகாபாரதம் தமிழ்கூறும் நல்லுலகத்தோடு எத்தகு தொடர்புடையது என்றும், சங்க இலக்கியங்கள் முதலான பக்தி இலக்கியங்கள் வரை மகாபாரதத்தின் பார்வை என்ன என்பதையும், காலத்தால் முந்தைய கல்வெட்டு, செப்பேடுகள் மகாபாரதம் பற்றி என்ன சொல்கிறது என்பதையும், மகாபாரதம் தமிழ் கூறும் நல்லுலகத்து மாமன்னர்களை எவ்வாறு போற்றுகிறது  என்பதையும் சற்று குறுகலாக காண்போம்....!

முதலாவதாக கிபி 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த #சின்னமனூர் செப்பேட்டில்,

"மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்"
என்ற வரலாற்றுத் தகவல் உள்ளது. இந்த செப்பேட்டின் 100 வது வரி
தலையாலங்கானத்துப் போர் பற்றி உரைக்கிறது. அதன் தொடர்ச்சியாக 102 ஆம் வரியில் "மகாபாரத மொழி பெயர்ப்பு" மற்றும் சங்கம் அமைத்த செய்தியை பதிவு செய்கிறது. இதன் அடிப்படையில் பாண்டிய மன்னர்கள் நிறுவிய தமிழ்ச் சங்கத்தில் #பாரதத்தை தமிழில்  மொழிபெயர்த்திருந்தனர் என்பதையும், அச்செய்தி ஏழாம் நூற்றாண்டு வரை பரவி இருந்தது என்பதையும் #இச்செப்பேட்டின் மூலம்  தெள்ளத் தெளிவாக அறியலாம்....!
(தொல்லியல் தகவல்களை உபயம் செய்த தொல்லியல் ஆய்வாளர் திரு மா.மாரிராஜன் அவர்களுக்கு நன்றி)

அதோடு பாண்டிய மன்னர்கள் மகாபாரதப் போரில் பங்குகொண்டனர் என்பதை மகாபாரதத்தின்  உத்யோக பர்வத்தில் 172 ஆவது பகுதியில் பீஷ்மர் இவ்வாறு உரைத்கிறார் "Pandya is a maharatha!" said Bhishma" அதாவது பாண்டியனை ஒரு மகாரதன் என்கிறார்....!
இதைப்பற்றி மேலும் படிக்க இந்த விலாசத்தை பயன்படுத்துங்கள்....!👇


அதோடு மகாபரதத்தின் துரோண பர்வத்தில் பாண்டியன் சாரங்கத்வஜன் பற்றிய குறிப்புகள் உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு இந்த விலாசத்தை அணுகவும்....!👇👇👇


சேர மன்னர்களிடமும் மகாபாரதம் பற்றிய பார்வை வெகுவாக பதிந்திருந்தது என்பதை  புறநானூற்றின் இந்த வரிகள் மூலம் நிறுவலாம்...!

"அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்"

அதாவது அசைந்து ஆடும் பிடரி மயிரோடு கூடிய குதிரைகளையுடைய ஐவரோடு (பாண்டவர்களோடு) சினந்து அவர்களின் நிலத்தைத் தாம் கவர்ந்து கொண்ட, பொன்னாலான தும்பைப் பூவை அணிந்த நூற்றுவரும் (கௌவரவர்களும்) போர்க்களத்தில் இறக்கும் வரை பெருமளவில் அவர்களுக்குச் சோற்றை அளவில்லாமல் நீ கொடுத்தாய். என்று மகாபாரதப்போரில் சேரர்களின் பங்கை புறநானூறு விளக்குகிறது....!

மற்றும் பல்லவர் காலத்தில் பாரத மண்டபம் ஏற்படுத்தியதும், அவற்றில் பாரதம் படிப்போருக்கு மானியம் அளிக்கப்பட்டதையும் #கூரம் செப்பேடு கூறிகிறது.....! 

செந்தலைக் கல்வெட்டில் 👇👇👇

"ஸ்ரீபாரதம் வாசிக்க பெரும்புலியூர் ஆத்ரை யகோத்ரத்து வைகாநஸ ஸுத்ரத்து ஸிங்கி நசிஸ்வர பட்டனுக்கு இறையிலியாக குடுத்ததோடு ஸபையோம்" 

என்ற வாசகம் காணப்படுகிறது.
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள சுந்தர பாண்டியன் கல்வெட்டு 'திருத்தங்கலூரன் முன்பு மகாபாரதம், இராமாயணம் வாசிப்பதற்காகத் திருவரங்கதேவன் குன்றெடுத்தரனும் அவன் தம்பி திருவரங்கதேவன் உய்யங் கொண்டாழ்வானும் இணைந்து மூன்றரை மா நிலம் தானம்' செய்துள்ளதைக் கூறுகிறது......! 

சங்க இலக்கியங்களில் ஒன்றான #பதிற்றுப்பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் கொடைச் சிறப்பினையும் #குமட்டூர்க்_கண்ணார் பாரட்டுவார். அப்படி  பாரட்டுகையில், நெடுஞ்சேரலாதனின் கொடையையும் ஆற்றலையும் #அக்குரனின்(கர்ணன்) கொடைத்திறனோடு ஒப்பிடுவார்....!

“போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு
துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை,
அக்குரன் அனைய கைவண்மையையே;
அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப"

அதாவது 
ஈர் ஐம்பதின்மருடன் (கௌரவர்கள் நூறுபேர்) சேர்ந்து போரிட்டுத் தன் வலிமையை நிலைநாட்டிய அக்குரன் (கர்ணன்) போன்று கொடை வழங்குபவன் நீ என்று சேரலாதனை புகழ்வார் ஆசிரியர்....!

இந்த கதையை அரச பாரதத்தில் மிகவும் அழகாக விளக்கியிருப்பார் அருள் செல்வ பேரரசன் அவர்கள். கூடுதல் தகவல்களுக்கு இந்த விலாசத்தை அணுகவும் 👇👇👇


சிறுபாணாற்றுப்படை யில் காண்டவ வனத்தை நெருப்பு உண்ணும் படி செய்த அர்ச்சுனனின் தமையனாகிய பீமசேனன் எழுதிய #பாக_சாஸ்திரம் எனும் நூல் இருந்த தகவலை தருகிறது....!

"ஓய்மானாட்டு நல்லிக் கோடான் விருந்தளிக்கும் சிறப்பினைப் "பாடுங்கலை மடைநூல் நெறியிற்றப்பாத பல்வேறு சுவை அடிசிலைப் பாணர்க்கு நல்கினான் என்றும், அம்மடைநூலை அருளியவன் #பீமன் என்றும் குறிப்பிடுவார்...!

 “காவரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சை புகழோன் தன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்
பனுவலின் வழாஅப் பல்வோறு அடிசில்”

பெரும்பாணற்றுப்படை யில் பாண்டவர்கள் கௌரவர்களை வெற்றி கொண்ட செய்தியை கடியலூர் உருத்திரங்கண்ணனார் அழகாக எடுத்துரைப்பார்....! 

 “வெண்கோட் டிரும்பிணம் குருதி ஈர்ப்ப
வீரைம் பதின்மரும் பெருதுகளத் தவியப்
பேரமர்க் கடந்த கொடுஞ்சி செடுந்தோர்
ஆராச் செருவினைவர் போல"
கச்சி யோனே கைவண் தோன்றல்”

இது மட்டுமல்லாது சங்க இலக்கியங்களிலேயே கலாத்தொகையில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மகாபாரதச் செய்திகள் வரும். பதிவின் நீளம் கருதி அவற்றை தவிர்க்கிறேன்.....!

நட்டாலம் சங்கரநாராயணர் கோவில் முன்புறமுள்ள பாறையில் உள்ள கல்வெட்டானது👇

"ஸ்ரீநட்டாலத்து ஆழ்வார் கோயிலில் மகாபாரதம் வாசிப்பதற்குக் கண்ணன் என்பவர் நிலக்கொடை வழங்கியுள்ளார்" என்கிறது.....!

இவ்வாறு சங்க இலக்கியங்களில் மகாபாரதமானது மக்களுடன் ஒன்றோடொன்று இரண்டற கலந்திருந்தே அன்றி அவர்கள் இது உண்மையா பொய்யா என்று ஆராய்ச்சி நடத்தியதற்கு எந்த வித சான்றுகளும் இல்லை....!

சங்க இலக்கியங்கள் தவிர்த்து காப்பியங்கள் மற்றும் திருமுறைகளில் உள்ள குறிப்புகள் குறித்து தொடர்ந்து காணலாம்....!

சிலப்பதிகாரமும்_மகாபாரதமும்:

காப்பியங்களுள் முதன்மையான #சிலப்பதிகாரம் பாரதத்தின் இரு பெரும் இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரத நிகழ்வவுகள் பலவற்றைச் சுட்டுகிறது.....!

ஆம், கிபி இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்டம் #ஆய்ச்சியர்_குரவையில் இரு இடங்களில் இந்நிகழ்வை அதாவது "கண்ணன் பாண்டவர்களுக்காக அஸ்தினாபுரத்திற்கு தூது" சென்ற நிகழ்வை சுட்டுகிறது.....!

#முன்னிலைப்பரவல்:

"திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே"

#படர்க்கைப்_பரவல்:

"மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே"

இதுமட்டுமல்லாது அர்ச்சுனன் காண்டவ வனத்தை அழித்த நிகழ்வும், மகாபாரதப்போர் 18 நாட்கள் நடந்தது என்ற செய்தியையும், சேர அரசன் இரு படைகளுக்கும் உணவளித்த நிகழ்வையும், கண்ணன் சூரியனை தனது சுதர்சனத்தால் மறைத்த நிகழ்வையும் சுட்டுகிறது.....!

(பாடலுக்கான விளக்கம் வேண்டுவோர் மறுமொழியில் வினவலாம்🙂)

#திருமுறைகளும்_மகாபாரதமும்:

(இப்பதிவில் பக்தி இலக்கியங்களில் மகாபாரதம் என்ற தலைப்பில் அர்ச்சுனனுக்கு சிவபெருமான் #பாசுபதாஸ்திரம் வழங்கிய நிகழ்வுகளை காண்போம்)

பதிவுக்கு செல்வதற்கு முன்பு அர்ச்சுணன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்த கோயில் #திரு_விஜயமங்கை_விஜயநாதேஸ்வரர் கோயிலை இந்த விலாசத்தில் சென்றால் காணலாம்....!👇👇👇

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

மகாபாரத போருக்கு முன்பு சூதாட்டம் முடிந்து வனவாசத்தின் இறுதியில் கிருஷ்ணனின் அறிவுரையின் பேரில் சிவபெருமானை நோக்கி அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் இருந்த நிகழ்வு திருமுறைகளில் சுட்டப்படுகிறது....!

#பதினோராம்_திருமுறை:

-காரைக்கால் அம்மையார்

"ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா தேதொக்கும் என்பதனை யாரறிவார்_பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள் வல்வேட னான வடிவு" 

என்று வேடனாக சிவபெருமான் வந்து அருளிய நிகழ்வை சுட்டுகிறார்....!

திருஞானசம்பந்தர்:

"மந்திர முறுத்திறன் மறவர்தம் முடிவுகொ டுருவுடைப் பத்தொரு பெயருடை விசயனை அசைவுசெய் பரிசினால் அத்திரம் அருளும்நம் அடிகள தணிகினர்"

என்று பதினொரு பெயர்களை உடைய அர்ச்சுனனுக்கு சிவபெருமான் அஸ்திரம் அருளினார் என்கிறார்....!

சேரமான் பெருமாள் நாயனார்:

"ஆய விழப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் ஈந்த பதம் போற்றி தூய"

என்று சிவபெருமான் பாசுபதம் அருளியதை நிகழ்வை சுட்டுகிறார்....!

திருநாவுக்கரசர்:

"பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டு நல்வரங் கொள்விச யமங்கை ஆண்ட வன்னடி யேநினைந் தசையாற் காண்ட லேகருத் தாகி யிருப்பேனே"

எனறு பாண்டுவின் மகனாகிய அர்ச்சுனன் சிவபெருமானை நோக்கி வரம் இருந்த நிகழ்வை சுட்டுகிறார்....!

மாணிக்கவாசகர்:

-திருவாசகம்

"கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்"

இங்கு கிராதன் என்பது வேடனை குறிக்கும். வேடனாக வேடமெடுத்து அர்ச்சுணனுக்கு அஸ்திரம் அருள வந்தார் என்பதையே உவமையாக கூறுவர்....!

புதுக்கோட்டை ஆவுடையார் கோயிலில் இது சம்பந்தமான சிற்பம் உள்ளது கோயிலில் இச்சிற்பத்தின் அருகே 

“கிராத வேடமொடு கிஞ்சுகவாய் அம்மையுடன் அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தல்“ 

என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆக மகாபாரதம் எனும் பெரும் இதிகாசமானது இன்று அல்ல சங்க காலம் முதலே மக்களிடம் புழக்கத்தில் இருந்தது என்பதையும் நம் முன்னோர்கள் பாரதத்தை கண்ணென கருதி தமது வாழ்க்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது....!

மகாபாரதமானது ரிக் யஜுர் சாம அதர்வண வேதத்திற்கு அடுத்தபடியாக ஐந்தாவது வேதம் எனப்படுகிறது. இதில் ஒரு லட்சம் ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளதால் இது உலகின் மிகப்பெரிய காவியமாக கருதப்படுகிறது.இது சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. அறநெறி, வாழ்க்கை முறைகள், கல்வி, பாலியல் தொடர்பான அனைத்து சமூக அத்யாவசியங்களையும் அழகாக எடுத்துரைக்கும் மகா காவியமே மகாபாரதமாகும்......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...